தேர்வு

சில கதைகள் அல்லது சம்பவங்கள் பார்க்க, படிக்க சிறியதாகத் தான் இருக்கும். ஆனால் அவை நம்மிடையே ஏற்படுத்தும் பாதிப்பு மிக மிகப் பெரிதாக இருக்கும்.

கீழே குறிப்பிட்டுள்ள சம்பவத்தை படித்தவுடன் நம்மையுமறியாமல் கண்கள் குளமாகிவிட்டன. இதுவல்லவா இறை நம்பிக்கை! என்ன ஒரு பக்குவம்… என்ன ஒரு முதிர்ச்சி… அப்பப்பா…!!!

ஒருவேளை இந்த சம்பவத்தில் வரும் நாயகரின் சூழ்நிலையில் நாம் இருந்தால் நமது மனநிலை எப்படி இருக்கும் என்று சற்று நினைத்துப் பாருங்கள். நாம் பக்குவத்தில் எங்கே இருக்கிறோம் என்பது புரியும்.

‘கடவுள் ஏன் இந்த கொடிய நோய்க்கு உங்களை தேர்ந்தெடுத்தார்?’

விம்பிள்டன் டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆஷ், உடலில் ரத்தம் செலுத்தப்பட்டபோது மருத்துவமனையின் கவனக்குறைவால் அவருக்கு எய்ட்ஸ் வந்துவிட்டது.

மரணத்தின் வாயிலில் இருந்த அவர் பூரண குணமடையவேண்டி உலகின் பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் கடிதங்கள் எழுதினார்கள்.

அவர்களுள் ஒருவர், ‘கடவுள் ஏன் இந்த கொடிய நோய்க்கு உங்களை தேர்ந்தெடுத்தார்?’ என்று கேட்டிருந்தார்.

Editஅதற்கு ஆர்தர் ஆஷ், “நண்பரே, உலகில் 5 கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாடக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுள் 50 லட்சம் பேர் அந்த விளையாட்டை தொடர்ந்து ஆடுகின்றனர். அவர்களுள் 50,000 பேர் பல்வேறு டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.

5 ஆயிரம் பேர் தேசிய அளவில் விளையாடுகிறார்கள். அவர்களுள் 500 பேர் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடத் தகுதி பெறுகின்றனர். 50 பேர் விம்பிள்டனில் விளையாட தகுதி பெறுகின்றனர். அவர்களுள் 4 பேர் அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றனர். 2 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். ஒருவர் பரிசுக்கோப்பையை பெறுகிறார்.

நான் பரிசுக் கோப்பையை கையிலேந்தி நின்றபோது இறைவனிடம், “இறைவா என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தாய்?” என்று கேட்கவில்லை. இப்போது துன்பத்தில் துடித்துக்கொண்டிருக்கும்போது மட்டும் இறைவனிடம் “என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தாய்?” என்று முறையிடுவது நியாயமில்லை என்றே நினைக்கின்றேன்!” என்றார்.

இறைவா, என்னை இன்பத்தில் சிரிக்க வைத்தாய்!
துன்பத்தில் அழவைத்தாய்!
வெற்றியில் மனிதனாக்கினாய்!
தோல்வியில் என்னை செப்பனிட்டாய்!
நீயே என்னை வாழவைத்தாய்!
நீயே எனக்கு ஓய்வும் அளித்தாய்!

கவிதை : எம்.வி.மோகன்

Leave a Reply