தர்மம்

​அந்த ஊரில் இளநீர் விற்றுப் பிழைக்கும் சோமன் என்கிற குடியானவன் ஒருவன் இருந்தான். ஒரு காலில் சிறிதே ஊனத்துடன் பிறந்த அவன் தினசரி மரமேறி இளநீர் பறித்து சந்தைக்கு சென்று விற்று வருவது வழக்கம்.

ஒரு நாள் சந்தைக்கு செல்லும் வழியில், ஒரு கோவிலில் ஒரு மகான் பக்தி பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். இறைவனின் பெருமைகளை பற்றி கூறி, “பக்தி செய்வதோடு நின்றுவிடாது தான தர்மங்களும் அடியவர்களுக்கு தொண்டும் செய்துவரவேண்டும் அப்போது தான் சுவர்க்கத்தை அடையமுடியும். ஒருவேளை மீண்டும் பூமியில் பிறந்தாலும் நல்ல குடியில் பிறந்து சுக போக வாழ்க்கை வாழ முடியும்” என்றார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த சோமனுக்கு தூக்கிவாரிப் போட்டது. “நாம் இதுவரை அந்த மகான் சொன்னது எதையும் செய்ததில்லையே? நாம் எப்படி சுவர்க்கத்தை அடைவது? அப்படி பிறந்தாலும் எப்படி நல்ல குடியில் பிறப்பது?” என்று சிந்திக்கலானான்.

நேரே அவரிடம் போய், “ஸ்வாமி… நான் பக்கத்து கிராமத்திலிருந்து வருகிறேன். இளநீர் விற்று பிழைக்கிறேன். நீங்கள் சொல்வதை நானும் கேட்டுக்கொண்டிருந்தேன். இதுவரை நான் தான தர்மங்கள் எதுவும் செய்யாமலே காலம் கடத்திவிட்டேன். எனக்கு சுவர்க்கம் கிடைக்குமா? ஒருவேளை அடுத்த பிறவி இருந்தால் நல்ல குடியில் பிறப்பேனா?’ என்று கேட்டான்.

அதற்கு ஞானி சிரித்துக்கொண்டே…. “மகனே இப்போது கூட உனக்கு வழியிருக்கிறது. தினமும் யாராவது ஒரு ஏழைக்கு ஒரு இளநீரை தானமாக கொடுத்து வா… அடுத்த பிறவியில் நீ மிகப் பெரிய அரசனாக பிறக்க வாய்ப்புண்டு” என்றார்

இவனும் அது முதல் தினசரி ஒரு இளநீரை தானம் கொடுத்து வந்தான். இதன் பயனாக அடுத்த பிறவியில் ஒரு அரச குடும்பத்தில் பிறந்தான். முற்பிறவியில் ஞானி சொன்னது நினைவுக்கு வந்தது.

சென்ற பிறவியில் இளநீர் தானம் கொடுத்ததால் இப்பிறவியில் மன்னனாக பிறந்துவிட்டோம். இந்த பிறவியிலும் இளநீர் தானமாக கொடுத்தால் சுவர்க்கத்தை அடையலாம்’ என்று நினைத்தவன், இங்கும் தினசரி ஒரு இளநீர் தானமாக கொடுத்து வந்தான்.

காலங்கள் உருண்டோடி முதுமை அடைந்து மரணமடைந்தவன் சுவர்க்கத்தை அடைவதற்கு பதிலாக மீண்டும் அதே இளநீர் விற்கும் வணிகனாகவே பிறந்தான். என்ன ஒரு முன்னேற்றம் என்றால் ஊனம் எதுவும் இன்றி பிறந்தான்.

முற்பிறவிகளின் ஞாபகம் அவனுக்கு இருந்தது. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த ஞானி சொன்னபடி நாம் இளநீர் விற்கும்போது இளநீர் தானமாக கொடுத்தோம். மன்னனாக பிறந்தோம். அதை தவறாமல் அடுத்த பிறவியிலும் செய்தோம். ஆனால் சுவர்க்கத்தை அடைவதற்கு பதிலாக மீண்டும் இதே தொழிலை செய்யும்படி பிறந்துவிட்டோமே….? இது என்ன அநியாயம்… என்று யோசித்து தனது சந்தேகத்தை தற்போது கண்ட ஒரு மகானிடம் சென்று கேட்டான்.

இந்த மகான் சிரித்துக்கொண்டே, “நீ ஒரு ஏழையாக இளநீர் விற்று பிழைக்கும்போது உன்னை தினசரி ஒரு இளநீர் தானம் செய்யச் சொன்னார். நீ அதன் பலனாக மன்னனாக பிறந்தாய். ஆனால் மன்னனாக பிறந்தும் கூட உன் அந்தஸ்த்திற்கும் செல்வத்திற்கும் ஏற்றபடி தானம் செய்யாமல் அதே இளநீரை தானம் செய்தாய். நீ ஏழையாய் இருக்கும்போது உன் சக்திக்கு இளநீர் ஏற்றதாய் இருந்தது. மன்னனான பிறகு அதைவிட உயர்ந்த தானத்தையல்லவா நீ செய்திருக்கவேண்டும்? அப்போதும் சாதாரண இளநீரையே தானம் செய்துவிட்டு உயர்ந்த பலனை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்? இருப்பினும் தானம் என்பது உயர்ந்த விஷயம் என்பதால் இதே குலத்தில் நீ பிறக்க நேர்ந்தாலும் அங்கஹீனத்துடன் பிறக்காமல் ஆரோக்கியமாக பிறந்தாய்” என்றார்.

“என் கண்களை திறந்துவிட்டீர்கள் சுவாமி” என்று கூறி அவரை வணங்கி விடைபெற்றுச் சென்றான்.

ஞானி அவன் கண்களை மட்டுமா திறந்தார்? நம் கண்களையுமல்லவா!

அவரவர் தகுதிக்கும் சக்திக்கும் ஏற்ப தான தர்மங்களை செய்துவரவேண்டும். அப்போது தான் தானத்திற்குரிய பலன் கிடைக்கும்.

சிலர் பல ஆண்டுகளாக ஒரே மாதிரி தர்ம காரியங்களை தான் செய்து வருவார்கள். இத்தனை ஆண்டுகளில் விலைவாசி எவ்வளவு உயர்ந்திருக்கும்? அவரவவர் தகுதியும் எவ்வளவு உயர்ந்திருக்கும்? அதையெல்லாம் யோசித்து தான தர்மங்களின் மதிப்பை அதிகரிக்கவேண்டும். இல்லையெனில் மேற்கூறிய இளநீர் விற்பவன் கதை தான்.

தான தர்மத்தில் முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. சரியான பயனாளியை அடையாளம் கண்டு செய்வது. தற்போதைய காலகட்டங்களில் அது அத்தனை சுலபமல்ல. ஏனெனில் இது இராமாயண மகாபாரத காலமோ நாயன்மார்கள் காலமோ அல்ல. முற்றிவிட்ட கலியுகம்

.

Leave a Reply