சாத்தான்

வாழ்க்கை என்பதே உற்சாகம் தானே?
==================================

சாத்தான் ஒருமுறை தன் தொழிலை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தான்.
அவன் பயன்படுத்தி வந்த கருவிகளைச் சந்தையில் விற்பனைக்கு வைத்தான்.
கோபம், காமம், அகங்காரம், பொறாமை, பகை உணர்வு, பேராசை, வீண் ஜம்பம் என எத்தனையோ கருவிகள் கடை பரப்பப்பட்டன.

ஆனால் ஒரே ஒரு பை மட்டும் பிரிக்கப்படாமல் இருப்பதைப் பார்த்தனர் மக்கள்
“அது என்ன?” என்று கேட்டனர்.
“இதனுள் இருப்பவை என்னிடம் இருப்பதிலேயே மிகவும் சக்தி வாய்ந்த கருவிகள். ஒரு வேலை மறுபடி தொழிலுக்குத் திரும்பலாம் என்று முடிவு செய்தால், எதற்கும் இருக்கட்டுமே என்று இவற்றை மட்டும் வைத்திருக்கிறேன்” என்றான் சாத்தான்.
“எங்கே? திறந்து காட்டு”
“இவை வாழ்க்கையின் சாரத்தையே அழிக்கவல்லவை. ஒருபோதும் தோற்றதே இல்லை” என்றபடி சாத்தான் அந்தப் பையைத் திறந்து காட்டினான். அதனுள் இருந்த கருவிகள் என்ன தெரியுமா?
சலிப்பு, உற்சாகமின்மை, விரக்தி இந்த மூன்றும்தான்.

சாத்தானின் கருவிகளை வாங்கி வந்திருப்பவர்களில் சிலரை நீங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கலாம். ஏன், சில கருவிகளை நீங்களே கூட வாங்கியிருக்கலாம்.
இலவசமாகக் கிடைத்திருந்தால்கூட வேண்டாம். அவற்றை விட்டெறியுங்கள்.
உற்சாகமாக விரைந்து செல்லும் எறும்புகளைக் கவனியுங்கள். அதில் ஒரு எறும்பின் பாதையில் சும்மா விரலை வைத்து மறித்துப் பாருங்கள். அது நின்றுவிடாது. விரலைச் சுற்றிவரும் எங்கே வழி இருக்கிறது என்று தேடும். எத்தனைத் தடைகள் போட்டாலும் எப்படியாவது தன் பயணத்தைத் தொடரும். செத்து விழும் வரை அது உற்சாகத்தை இழப்பதும் இல்லை, நம்பிக்கையை விட்டுக் கொடுப்பதும் இல்லை.

சிறு புல்லைப் பறித்து, அதன் வேர்களைப் பாருங்கள். என்னவொரு உற்சாகத்துடன் பூமியின் உள்ளே ஆழமாகக் கிளைவிட்டு அவை ஊன்றிக்கொண்டு இருக்கின்றன என்று புரியும்.
உலகில் இருக்கும் எந்தவொரு உயிர்ச் சக்திக்கும் சலிப்பு என்பதே இல்லை. மனிதனின் குறுகிய மனதில்தான் சலிப்பும், எரிச்சலும், நம்பிக்கையின்மையும் ஊற்றொடுக்கின்றன.
வாழ்க்கை என்பதே உற்சாகம் தானே? ஒரு முடிவைக் கண்டு அதைத் தோல்வி என எதற்காக எரிச்சல் கொள்ள வேண்டும்?
முதலில் நீங்கள் சந்தித்தது தோல்வி இல்லை. அதை முன் வைத்து உற்சாகமின்றி வேதனையும், எரிச்சலுமாக வெற்றிக்காகப் பாடுபடுகிறீர்களே, அதுதான் உங்களை நீங்கள் தோற்கடித்துக் கொள்ள வழிவகுக்கும்.

இது நீங்கள் அறியவேண்டிய ரகசியம்.

நன்றி : ” தன்னம்பிக்கை “

Leave a Reply