சருகு

​ஒரு குருகுலத்தில் மிகவும் பணக்கார வீட்டு பிள்ளைகள் தங்கி படித்தார்கள். படிக்கும் காலத்தே பலவற்றை கற்றுக்கொண்டார்கள். படித்து முடித்து புறப்படும்போது, குருவிடம், “குருவே தங்களுக்கு தட்சணை தர பிரியப்படுகிறோம். என்ன வேண்டுமோ கேளுங்கள்… எங்களால் முடியாதது எதுவும் இல்லை” என்றனர். அவர்கள் குரு தட்சணை தர விரும்பியது தவறல்ல. ஆனால் அந்த எண்ணத்தை வெளிப்படுத்திய விதம் தான் தவறு என்பதை குரு புரிந்துகொண்டார். மேலும் அவர்களுக்கு இன்னும் பக்குவம் போதவில்லை என்பதால் பாடம் கற்பிக்க முடிவு செய்தார்.

அவர்களிடம், “மாணவர்களே நல்லது. மிக்க மகிழ்ச்சி. எனக்கு தட்சணையாக பெரிதாக எதுவும் வேண்டாம். பக்கத்தில் எங்காவது சென்று, எதற்கும் உபயோகமற்ற ஏதாவது இருந்தால் கொண்டு வந்து கொடுங்கள்” என்றார்.

என்னவோ ஏதோ கேட்கப்போகிறார் என்றல்லவா நினைத்தோம்… பூ… இவ்வளவு தானா…. என்று நினைத்தவர்கள், “இதோ சில நிமிடங்களில் வருகிறோம் குருவே!” என்று கூறிவிட்டு அருகே உள்ள கானகத்திற்குள் சென்றனர்.

அங்கு அவர்கள் சென்று பார்த்தபோது, பார்க்கும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் உபயோகமுள்ளதாகவே தோன்றியது. கடைசியில் ஒரு மரத்தின் கீழே நிறைய சருகுகள் குவிந்து கிடந்தன. அவற்றை ஆளுக்கு கொஞ்சம் அள்ளிக்கொண்டு திரும்பினர்.

குருவிடம் அதை சமர்பித்து, “இதோ குருவே ஒன்றுக்கும் உபயோகமில்லாத சருகுகள்” என்றனர்.

அப்போது அங்கே வந்த ஒரு குடியானவன், “ஐயா… இவை நான் சேமித்து வைத்தவை. இவை எனக்கு தான் சொந்தம்” என்றான்.

திடுக்கிட்ட மாணவர்கள், “காய்ந்த சருகை கொண்டு போய் நீ என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்க, அதற்கு அவன், “இவைகளை எரித்து சாம்பலாக்கி, எனது நிலத்துக்கு உரமாக போடுவேன். பயிர்கள் நன்கு வளரும்!” என்றான்.

காய்ந்த சருகிற்கு இப்படி ஒரு பயனா என்று வியந்த மாணவர்கள், அவனிடம் அவனது சருகுகளை ஒப்படைத்துவிட்டு கானகத்தின் வேறு பகுதிக்கு சென்றனர்.

அங்கு கீழே கிடந்த சருகுகளை இரண்டு பெண்கள் பொறுக்கிக் கொண்டிருந்தனர். “இதை எதற்கு சேகரிக்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்க, அவர்களுள் ஒருவள் சொன்னாள்… “இவற்றில் சற்று பெரிய இலைகளை ஒன்று சேர்த்து தைத்து அதை சந்தைக்கு கொண்டு சென்று விற்பேன். தைக்க முடியாத சிறிய இலைகளை இவள் அடுப்பெரிக்க பயன்படுத்திக்கொள்வாள்!”

அவர்கள் பதிலை கேட்டு வியந்து போன மாணவர்கள், மேலும் சற்று ஆழமாக உள்ளே சென்றனர். அங்கே ஒரு மரத்தின் கீழே இருந்த சருகை சேகரிக்க முனைந்த போது, ஒரு சிறிய பறவை, அந்த சருகில் ஒன்றை எடுத்துக்கொண்டு பறந்துச் சென்றது. பறவை என்ன செய்கிறது என்று பின்னால் சென்று பார்த்தவர்கள், அது அந்த சருகைக் கொண்டு தனது கூட்டை கட்ட பயன்படுத்துவது கண்டு மேலும் வியந்தனர்.

ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டிருந்தபோது, ஒரு சிறிய குட்டையில் ஒரு சருகு மிதந்து கொண்டிருந்தது. இது எதற்கும் பயன்படாது என்று கருதி அதை எடுக்க முற்பட்டபோது, அதில் சில எறும்புகள் இருந்ததை பார்த்தனர். நீரில் மூழ்காமல் அந்த ஏறும்புக்களை அந்த சருகு தான் காப்பாற்றுகிறது என்று புரிந்துகொண்டனர்.

வெறுங்கையுடன் குருகுலத்துக்கு திரும்பினர்.

“என்ன மாணவர்களே குரு தட்சணையை கொண்டு வந்துவிட்டீர்களா?”

மிகவும் தயக்கத்துடன் கானகத்தில் நடந்தவைகளை கூறி, “நீங்கள் எதற்கும் பயன்படாத பொருளை கேட்டீர்கள். ஆனால் ஒரு காய்ந்த சருகு கூட பலருக்கு பலவிதங்களில் பயன்படுகிறது குருவே!” என்றனர்.

“உலர்ந்த எதற்கு பயனற்றது என்று நீங்கள் கருதிய ஒரு சருகே பலருக்கு பலவிதங்களில் பயன்படுகிறது எனும்போது, பகுத்தறிவுள்ள மனிதர்கள் இந்த உலகிற்கு எப்படியெல்லாம் பயன்படவேண்டும், பிறருக்கு மகிழ்ச்சியை தரும் செயல்களை செய்யவேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.”

“குருவே ஒன்றுக்கும் உபயோகமில்லாதது என்று நாங்கள் கருதிய சருகை வைத்தே மிகப் பெரிய பாடத்தை போதித்துவிட்டீர்கள். இனி நாங்கள் பிறருக்கு பயனுள்ள ஒரு வாழக்கையையே வாழ்வோம். அதுவே உங்களுக்கு அளிக்கக்கூடிய உண்மையான் குரு தட்சணை என்பதை புரிந்து கொண்டோம்! எங்களை மன்னியுங்கள்!!” என்றனர் சீடர்கள்.

– திரு.சுகி.சிவம் அவர்கள் ஒரு விழாவில் கூறிய கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது இது.

இறைவன் படைப்பில் பல சந்தர்ப்பங்களில் யாருக்கும் பயனற்று விளங்கக்கூடிய ஒரே வஸ்து மனிதன் தான். ஒரு சராசரி மனிதன் ஒரு காய்ந்த சருகுக்கு கூட ஈடாகமாட்டான் என்று மேற்கூறிய கதையின் மூலம் புரிந்திருக்கும். எனவே நாம் போட்டியிடவேண்டியது ஒரு சருகோடு தான்.

நமது நிலை எப்படி இருந்தாலும், எத்தகைய சூழ்நிலையில் நாம் வாழ்ந்தாலும் நம்மால் இயன்ற சேவைகளை பலனை எதிர்பாராமல் இந்த உலகிற்கு செய்வோம். அதுவே வாழும் வழி! அவன் அருளைப் பெறவும் எளிய வழி!! பிரார்த்தனை செய்பவர்களை விட சேவை செய்பவர்களே இறைனுக்கு அருகில் இருக்கிறார்கள்.

Leave a Reply