கௌரவம்

வாழ்வில் ஒவ்வொருவரும் எப்படி இருக்கவேண்டும்?” என்பது பற்றிய போதனையை ஒரு துறவி ஊர் ஊராக சென்று சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார். கீதை முதல் ராமாயணம் வரை, ஏவுகணை முதல் ஏரோப்பிளேன் வரை அவர் தொடாத சப்ஜெக்ட்டுக்களே இல்லை எனலாம்.

மக்கள் அவர் பேசுவதை கேட்க முண்டியடித்துக்கொண்டு செல்வார்கள். பல புராண இதிகாச சம்பவங்கள், குட்டிக்கதைகள் என அவரது உரை பிரமாதமாக இருக்கும்.

சொற்பொழிவு முடிந்த பின்னர் கூட மக்கள் அவரை ஆற்றிய உரையை பற்றி தான் பேசுவார்கள். அந்தளவு இம்பாக்ட் இருக்கும்.

ஒரு முறை அவரது ஆறு நாள் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.

தான் பேசவேண்டிய அரங்கில் நுழையும் முன்பு அவர் மனதில் ஆயிரம் குரங்குகள் ஒன்றாக ஆட்டம் போட்ட காட்சி தோன்றியது. காரணம்?

ஹாலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஜோடி செருப்புக்கள் தாறுமாறாக கிடந்தன.

மனதை முறையாக வைக்க ஒவ்வொரு சொற்பொழிவிலும் நான் வற்புறுத்தி வருகிறேன். இவர்கள் என்னடாவென்றால் செருப்பை கூட ஒழுகாக வைக்க மறுக்கிறார்களே…” என்று நொந்துகொண்டார்.

அன்று அவர் ஆற்றிய சொற்பொழிவுக்கான தலைப்பு ‘அன்பு’. அவர் பேசப்பேச பலர் தலையாட்டி ரசித்தார்கள். பலர் குறிப்பெடுத்துக்கொண்டார்கள்.

அரங்கிற்கு வெளியே ஒரு பாட்டி தனது இரு கால்களையும் நீட்டி அமர்ந்திருந்தாள். உள்ளே படியேறி வந்து ஆடிட்டோரியத்தில் சொற்பொழிவு கேட்கலாம் என்றால் அவளது உடல் ஒத்துழைக்கவில்லை. மேலும் அவளுக்கு சுவாமிஜியையும் அவரது சொற்பொழிவை கேட்க கூடும் மக்களையும் பார்ப்பதே ஆனந்தம் தான். ஏ.சி.அரங்கிற்குள் பெரும்பாலும் சொற்பொழிவு நடைபெறும் என்பதால், அரிதாகவே இவள் காதில் சுவாமிஜி பேசும் வார்த்தைகள் வந்து விழும். அப்படி அடிக்கடி விழுந்த வார்த்தைகளுள் ஒன்று ‘அன்பு’.

எவ்வளவு நேரம் தான் அப்படியே அமர்ந்து கேட்பது??? அன்று உரையை சுவாமிஜி முடிக்கும் முன்னரே அவள் கிளம்பினாள்.

வெளியே அலங்கோலமாக கிடந்த செருப்புக்கள் அவளை என்னவோ செய்தன.

அந்த சுவாமியின் அக அமைதிக்கு முன் இப்படி ஒரு அலங்கோலமா?” என்று வருந்தியபடியே சென்றாள் பாட்டி.

இரண்டாம் நாள் சுவாமிஜி பலப் பல புது விஷயங்கள் கூறினார். பக்தர்களிடம் வழக்கம் போல தலையசைப்பு, கையசைப்பு என எல்லாம் இருந்தன.

இதை அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஒரு சந்தேகம். இன்றும் இவர்கள் செருப்புக்களை அலங்கோலமாக போட்டிருப்பார்களோ???

எழுந்து போய் வராண்டாவை பார்த்தாள். ஆம்… அவள் நினைத்தது சரி தான். செருப்புக்கள் அலங்கோலமாகக் கிடந்தன.

மெல்ல தனது முக்காடை சரி செய்துகொண்டு, அந்த தள்ளாத வயதிலும் அந்த காலணிகளை சரி செய்து ஒழுங்குபடுத்தி வரிசையாக வைத்துவிட்டு வந்தாள்.

உரை முடிந்து அனைவரும் வெளியே வந்தார்கள். எவரும் தங்கள் காலணிகள் சரியாக வைக்கப்பட்டிருப்பதை கவனிக்கவில்லை. களிப்புடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.

மூன்றாம் நாள் சொற்பொழிவு. அதே ஆடியன்ஸ். அதே ரியாக்ஷன்.

பாட்டி சுவாமிஜியின் சொற்பொழிவை கேட்டுக்கொண்டே மிகவும் சிரமப்பட்டு, காலணிகளை ஒழுங்குபடுத்தி வைக்க ஆரம்பித்தாள். இம்முறை அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.

“சொற்பொழிவை முடித்துவிட்டு திரும்பும்போது அவசர அவசரமாக கிளம்பும்போது ஆண்களும் பெண்களும் ஒருவர் மீது ஒருவர் முட்டிக்கொண்டு செல்வதை தடுக்க என்ன செய்யலாம்?” என்று யோசித்தவர், ஆண்களின் செருப்புக்களை தனியாகவும் பெண்களின் செருப்புக்களை தனியாகவும் வரிசையில் வைத்தாள்.

இந்த தரம், சொற்பொழிவு முடிந்து வெளியே வந்தவர்களில் சிலர், தங்களின் செருப்புகள் சரியாக வரிசையில் வைக்கப்பட்டிருப்பதை கவனித்தனர். யாரோ அவ்வாறு செய்திருப்பதை பாராட்டினர்.

நான்காம் நாளும் இது தொடர்ந்தது. இம்முறை காலணிகளை இவ்வாறு ஒழுங்குபடுத்துவது யார் என்று விசாரிக்க ஆரம்பித்தனர்.

இந்த விஷயம் சுவாமிஜியின் காதுகளுக்கு போனது. அவரும், “அந்நபர் யார் என்று நாளை கண்டுபிடித்து பாராட்டுவோம்!” என்றார்.

ஐந்தாம் நாள், சுவாமிஜி பேச ஆரம்பித்ததும், முதல்முறையாக அனைவரது கவனமும், செருப்பை ஒழுங்குபடுத்தும் நபர் யார் என்று தெரிந்துகொள்வதில் தான் போனது. உரை தொடங்கிய சிறிது நேரத்திலேயே நமது பாட்டி, பெருமூச்சு விட்டபடி வராண்டா சென்று செருப்பை ஒழுங்கு படுத்த ஆரம்பித்தாள்.

அவள் தான் அதை செய்வது என்று கண்டுபிடித்த மக்கள், சுவாமிஜியிடம் அவளை மறுநாள் அழைத்துச் சென்று கௌரவிக்கலாம் என்று முடிவு செய்தனர். அவரை எவ்விதம் பாராட்டலாம் என்று ஆளாளுக்கு யோசனை சொன்னார்கள். பரிந்துரை செய்தார்கள்.

ஒருவர், “அந்த பாட்டிக்கு வாக்கிங் ஸ்டிக் தரலாம்” என்றார். மற்றொருவர் “அவருக்கு ஹியரிங் எய்ட் வாங்கித் தரலாம்” என்றார். மற்றொருவர், “அவருக்கு சுவாமிஜியின் புத்தகங்களை வாங்கி தரலாம்” என்றார்.

கடைசி நாள் உரை ஆரம்பிப்பதற்கு முன்பு அந்த பாட்டியை கௌரவிப்பது என்று முடிவானது. அங்கு வந்திருந்த அனைவரும் தனித்தனியே அந்த பாட்டியை பாராட்டிப் பேச நினைத்தனர்.

சொற்பொழிவு தொடங்கி போய்க்கொண்டிருந்தது. ஆனால் அன்று அந்த பாட்டி ஏனோ வரவேயில்லை.

அனைவருக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.

“இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் நேற்றே அவரை கௌரவித்திருக்கலாமே” என்று ஆளாளுக்கு துடித்தனர்.

சுவாமிஜியிடம் சென்று தங்கள் வருத்தத்தை பகிர்ந்துகொண்டனர்.

சுவாமிஜி சிரித்துக்கொண்டே, “இப்போது கூட நீங்கள் அவரை கௌரவிக்கலாம். அதற்கு இன்னும் உங்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் இருக்கிறது” என்றார்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

“மன்னிக்கவேண்டும் சுவாமிஜி. இன்று இந்த ஊரில் தங்கள் சொற்பொழிவின் கடைசி நாள். அவர் யார் எங்கேயிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. இந்நிலையில் நாங்கள் எப்படி அவரை கௌரவிப்பது?”

ஒருகணம் அமைதி காத்த சுவாமிஜி… “நீங்கள் அனைவரும் உடனே சென்று அவரவர் செருப்புக்களை வரிசையில் விட்டுவிட்டு வாருங்கள். அது தான் நீங்கள் அவரை கௌரவிக்க ஒரே வழி” என்றார்.

அனைவரும் உடனே சென்று, வரிசையாக ஒழுங்காக தங்கள் செருப்புக்களை விட்டுவிட்டு வந்தனர்.

“தற்போது நீங்கள் செய்தது தான் அந்த மூதாட்டிக்கு செய்த உண்மையான கௌரவம். நீங்கள் அவருக்கு இந்த சபையில் அனைவர் நடுவிலும் பொன்னாடை போர்த்தியிருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பரிசுகளை கொடுத்திருந்தாலோ அல்லது அவரை புகழ்ந்து பேசியிருந்தாலோ அது போலியானாதாகத்தான் இருந்திருக்கும். ஆனால் இப்போது நீங்கள் செய்தது தான் உண்மையான கௌரவம். இனி இங்கு மட்டுமல்ல, எங்கு சென்றாலும் உங்கள் செருப்புக்களை கண்டபடி போடாமல் வரிசையாக போடுங்கள்!” என்றார்.

பெரியோர்களின், ஞானியர்களின் உபதேசங்களும் இப்படித்தான். நாம் அவர்களுக்கு செய்யும் உண்மையான பக்தி என்பது அவர்கள் உபதேசப்படி நடப்பது தானே அன்றி, அவர்களை புகழ்ந்து பேசுவதோ விழுந்து விழுந்து வழிபடுவதோ அல்ல.

Leave a Reply