குழந்தைகள் பொய் சொல்வதற்கான காரணங்களும்… அவற்றைத் தடுப்பதற்கான வழிகளும்

குழந்தைகள் பொய் சொல்வதற்கான காரணங்களும்… அவற்றைத் தடுப்பதற்கான வழிகளும்! 
குழந்தைகள் வீட்டில் செய்யும் தவறுகள் அத்தனை பெரியதாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால் அவையெல்லாம் ஆசிரியர் பெற்றோர் மீட்டிங்கில் பூதாகரமாக வெடித்துக் கிளம்பும். ”உங்க பையன்/பொண்ணு ரொம்ப பொய் சொல்றாங்க. பேக்ல புத்தகத்தை வைச்சுகிட்டே, எடுத்துட்டு வரலைனு சொல்றாங்க. மத்தவங்க பொருளை எடுத்து வைச்சுகிட்டு இல்லைனு மறுக்கிறாங்க” என்கிற அனுபவம் பல பெற்றோர்களுக்கு வாய்த்திருக்கும். குழந்தைகள் பொய் சொல்வதற்கு என்ன விஷயங்கள் காராணமாக அமைகிறது? அதை எப்படி சரி செய்யலாம்? 
* குழந்தைகளுக்கு 4 வயது வரை தாங்கள் பொய் சொல்கிறோம் என்கிற புரிதலே இருக்காது. பென்சில் பாக்ஸை வைத்துக் கொண்டே இல்லை என்று சொல்லி விடுவார்கள். அம்மாதிரியான சமயங்களில் ‘பென்சில் பாக்ஸ் இங்கதானே இருக்கு. நல்லா தேடிப்பார்த்துட்டுதான் பதில் சொல்லணும். தேடாம ஒரு விஷயத்தை சொல்றது தப்பு” என்று விளக்குங்கள். 
* குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்முன்  தன் வீட்டில், அருகில் நடப்பதை கிரகித்துக் கொள்கிறார்கள். அதை சரி எது, தவறு எது என்று பிரித்துப் பார்க்காமல் அப்படியே செயல்படுத்துகிறார்கள்.  ‘அப்பா வீட்டுல இருக்காங்களானு கேட்டா இல்லைனு சொல்லிடு’ என்று எப்போதாவது விளையாடாக சொல்லும் சொற்களை கூட அவர்கள் நிஜம் என்று நம்புவார்கள். அப்படித்தான் தானும் பேச வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே சொல்லும் செயலும் எப்படி வெளிப்பட வேண்டும் என்பதை நாமே முன்மாதிரியாக இருந்து குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு கதை சொல்லும்போதே எது நிஜம், எது கற்பனை… அவையெல்லாம் நிஜ வாழ்க்கையில் நடக்குமா என்பதை தெளிவாக புரியவைத்து விடுங்கள். ஸ்பைடர்மேன், பேட் மேன் என்பதெல்லாம் கற்பனை கதாபாத்திரங்கள். ஸ்பைடர்மேன் போல நிஜத்தில் நெட் அடித்து நம்மால் பறக்க முடியாது என்பதை உணர வையுங்கள்.  
* ஸ்கூலில் அருகில் இருக்கும் குழந்தையின் பென்சிலை எடுத்து வைத்திருப்பதை பெற்றோரான நீங்கள் கவனித்தால், உடனே அதட்டி அடித்து அமர்க்களப்படுத்தாமல்… ‘உனக்கு அந்த பென்சில் பிடிச்சிருக்கா’ என்று கேளுங்கள். ‘என் தங்கத்தோட பேக்ல இந்த பென்சில் எப்படி வந்துச்சு… கால் கூட இல்லையே’ என்று குறும்பாக உண்மையை வெளிவர வையுங்கள்.  தெரிந்தே எடுத்திருந்தால் ‘அப்படி செய்றது தப்பு. உனக்கு வேணும்ன்றதை எங்ககிட்ட மட்டும் கேட்கணும்… மத்தவங்க பொருளை எடுத்தா நம்மளை எல்லாரும் ஷேம்னு சொல்லிடுவாங்க. அப்புறம் நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நம்ம கூட பேச மாட்டாங்க. அது வேண்டாம் இல்லியாப்பா’ என்று அறிவுரையை அவர்கள் போக்கிலேயே சென்று விளக்குங்கள்.
* குழந்தைகள் பொய் சொல்லுவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று சேர்க்கை. அருகில் இருக்கும் குழந்தை என்ன சொல்லுகிறார்களோ, செய்கிறார்களோ அவற்றை பசைபோல் மனதில் ஏற்றிக்கொள்வார்கள். உங்கள் குழந்தையின் நண்பர்களை பற்றி தொடர்ந்து விசாரியுங்கள். இன்னிக்கு உன் ஃப்ரெண்ட் என்ன சொன்னான்? என்னென்ன பேசினீங்க என்று தினமும் தவறாமல் விசாரியுங்கள்.
* செய்த தவறை உங்களிடம் மறைக்காமல் சொல்லும் குழந்தைகளிடம் அந்த தவறு எப்படி ஏற்பட்டது, அதை எப்படி சரிசெய்யலாம் என்பதை விளக்கிவிட்டு, அப்படி சொல்லியதற்காக மனதார பாராட்டுங்கள். 
* எதையாவது கொட்டி விடுவது, ஃப்ரிட்ஜில் இருந்து கூல்டிரிங்க்ஸ் எடுத்து குடித்துவிட்டு இல்லை என்பது போன்ற சின்ன சின்ன விஷயங்களை ரசிக்காமல்.. அப்படி செய்யக்கூடாது என்பதை அந்த அந்த தருணத்தில் கண்டுபிடித்து அவற்றை அவர்களுக்கு உணர்த்துங்கள். 
* மொத்ததில் குழந்தைகள் பொய் பேசத்துவங்குவதற்கு அடிப்படை காரணமே பெற்றவர்கள், மிஸ் மீதான பயம்தான். ‘உண்மையைச் சொல்லிட்டா அந்த நிமிஷ திட்டு மட்டும்தான் கிடைக்கும். ஆனா பொய் அந்த நிமிஷ திட்டுல இருந்து காப்பாத்திடும். அதுக்கப்புறம் பெரிய பெரிய பிரச்னையில சிக்க வைச்சிடும்’ என்பதை குழந்தைகளிடம் அடிக்கடி சொல்ல மறக்காதீர்கள். 
* அம்மா கேட்டா நான் ரொம்ப நேரத்துக்கு முன்னாடி வந்துட்டேனு சொல்லு என்றோ, ‘அம்மா வீட்டுல இல்லைனு சொல்லிடு பாப்பா’ என்றோ குழந்தை இருக்கும்போது பாஸிடம் ‘உடம்பு சரியில்லை அதான் லீவ் போட்டிருக்கேன்’ என்று சொல்லிவிட்டு நீங்கள் ஊர் சுற்றுவது கூடாது. உங்கள் குழந்தைகள் உங்களிடம் இருந்தே விஷயங்களை கற்கிறார்கள், தப்பும் செய்கிறார்கள் என்பதை ஒவ்வொரு செயலுக்கு முன்னும் நினைத்துக்கொண்டால் உங்கள் குழந்தைகள் ‘பொய் சொல்றாங்க’ என்கிற குற்றச்சாட்டுகளில் சிக்க மாட்டார்கள்.

Leave a Reply