குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 6 நிதி பாடங்கள்

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 6 நிதி பாடங்கள் !

குழந்தைகளுக்கு நம் இந்திய கல்விமுறைகள் பண நிர்வாகத்தை பற்றி எங்குமே நேரடியாகவோ குறைந்தபட்சம் மறைமுகமாகவோ கூட சொல்லிக் கொடுப்பதில்லை. அதைப் பற்றி பெற்றோர்களாகிய நாமும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.  செக் புக் எழுதுவது, பணம் போடுவது மற்றும் எடுப்பதற்கான வங்கி விண்ணப்பங்களை நிரப்புவது போன்ற சிலபஸ்களில் இருந்து வெளியே வருவதைப் பற்றி, இப்போது தான் யோசித்து வருகிறது நம் இந்திய அரசு. ஆக உங்கள் வாழ்கையிலேயே உங்கள் குழந்தைகளுக்கு நிதியை பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லிக் கொடுங்களேன்….!

1. குழந்தைகள் கையில் காசு கொடுங்க 

குழந்தைகள் கையில் காசை கொடுத்து அவர்கள் இயல்பாக எப்படி காசை நிர்வகிக்கிறார்கள் என்பதை பாருங்கள். சில குழந்தைகள்  காசை வெளியவே எடுக்காமல் “அம்புட்டும் எனக்கு தான் ” என்று தலையனையிலோ, உண்டியலிலோ பதுக்கி வைத்துக் கொள்ளும். சில குழந்தைகளோ மற்றவர் கேட்ட உடன் கர்ண பிரபு பரம்பரையின் கடைசி பேலன்ஸ் கணக்காக அப்படியே தூக்கிக் கொடுக்கும்.  சில குழந்தைகள் காசு கிடைத்த மறு கணம் “ஜிந்தகி ந மிலெகா துபாரா ” என்கிற ஹேஸ்டேக்குடன் செலவு செய்துவிடும். சில குழந்தைகளுக்கு காசப் பற்றிய விவரங்களே தெரியாமல் ” முத்து ரஜினி கணக்காக ” ஒரு பற்றில்லாமல் இருக்கலாம். முதலில் இவற்றை கவனியுங்கள். குழந்தைகளின் போக்கை தெரிந்து கொண்ட பின் தான் அவர்களை வழிநடத்த முடியும்.
2. செலவழிக்கும் குழந்தையை சேமிக்க கற்றுக் கொடுங்கள் :
நம் குழந்தை என்ன காசு கொடுத்தாலும் ஓடிப் போய் செலவு செய்துவிட்டுத் தான் அடுத்த வேலை பார்க்கிறான் என்றால், அவனோடு சென்று எதற்கு செலவு செய்கிறான். அந்த செலவு ஏதாவது பயனுள்ளதாக இருக்கிறதா..? அல்லது வெட்டிச் செலவா என்பதை ஒரு நண்பனாக இருந்து கேளுங்கள், நமக்கு தெரியாத பல விஷயங்கள் இன்று குழந்தைகளுக்கு தெரியும்
சும்மா தான் செலவு செஞ்சேன் என்றால் அவனோடு சென்று அவனுக்கு கொடுக்க வேண்டிய காசை பயனுள்ளதாக செலவழிக்க கற்றுகொடுங்கள். இல்லை என்றால் அவனுக்கு என்று ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி அதில் ஈ-லாஞ்சு (e- loungue) மூலமாகவோ அல்லது இன்டர்நெட் பேங்கிங் மூலமாகவோ பணத்தை அதில் சேமித்து வைத்து தனக்கு தேவையான பொருட்களான நோட், புக், நோட்ஸ், கதை புத்தகம், பிராஜெக்ட்கள், சைக்கிள் போன்றவைகளை வாங்குவதற்கு வழிகாட்டுங்கள். இதன் மூலம் வெட்டிச் செலவு தவறு என்பது நம் குழந்தைகளுக்கு வீரியமான பாடமாக புரிய வரும்.

3. அதிகம் சேமிக்கும் குழந்தைகளை, செலவழிக்க கற்றுக் கொடுங்கள் :
குழந்தைகள் செலவழிக்கவில்லை என்றால், அவர்களுக்கு எது சரியான செலவு, தவறான செலவு என்று பிரிக்கத் தெரியவில்லை என்று அர்த்தம். பண நிர்வாகம் என்பது சரியான செலவுகளை செய்து, பணத்தை சேமிப்பது தான். ஆக அவர்களோடு சென்று அவர்கள் கைகளாலயே பில்களுக்கு பணத்தை கொடுக்க வையுங்கள். அதோடு மறக்காமல் எதற்கு இந்த செலவு, இந்த செலவு செய்வதால் நமக்கு வேறு எங்கெல்லாம் பணத்தை குறைக்க முடியும், அப்படி இந்த பொருளுக்கு செலவழிப்பதால் என்ன மாதிரியான அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி அடைகிறது போன்றவைகளை புரியவைத்து செலவு செய்யச் சொல்லுங்கள்.

4. பட்ஜெட் போடும் போது குழந்தைகளையும் வைத்துக் கொள்ளுங்கள் :
செல்லம் உனக்கு இந்த மாசம் என்ன வேணும் 
” அம்மா எனக்கு இந்த மாசம் ஸ்கூல் ஃபீஸ், ஒரு ஜியாமென்ட்ரி பாக்ஸ், தேர்டு ஸ்டாண்டர்ட் சயின்ஸ் பிராஜெக்ட்டு செலவு , என்னோடு ஸ்கூல் பேக் கிழிஞ்சிடுச்சு ஒரு புது பேக் , சாக்ஸ் நஞ்சிக் போச்சு புது சாக்ஸ் . ஹேர் கட் பண்ணனும்.. அப்பாவோட நேச்சுரல்ஸ் போகணும். அவ்வளோ தாம்மா ” என்று சொன்னால்,
தம்பி ஸ்கூல் பேக் சூப்பரா தச்சிக்கலாம். அடுத்த வருஷம் ஃபோர்த் ஸ்டாண்டர்டு போறப்ப புது பேக் வாங்கிக் கொடுக்குறேன். இந்த மாசம் வேற செலவு இருக்கு, இந்த தடவை நோ நேச்சுரல்ஸ். அடுத்த மாசம் நிச்சயம்..  புது சாக்ஸ் நாளக்கே வாங்கிடலாம் மத்தது எல்லாம் ஓகே என்று செல்லமாக செலவை கற்றுக் கொடுங்கள். இப்படித் தான் தேவையான செலவு எது, தேவையற்ற செலவு எது என்பதை புரிய வைக்க வேண்டும்.
5. அவன் சேமிப்பை கேளுங்கள் :
குழந்தைகள் தங்கள் இலக்குகளாக சைக்கிள் , ப்ளே ஸ்டேஷன், வீடியோ கேம்ஸ்-ன்னு நிறைய பிளான் வெச்சிருப்பாங்க. இருந்தாலும். அவங்க கிட்ட அவங்க சேமிப்பை குடும்பத்துக்காக கேளுங்க. குழந்தைகள் அடம்பிடிக்கும். இது என்னோடு சேவிங்ஸ்னு ரூல் பேசும். அத ரசிங்க. பணம் தன்னுடையதுன்னு உரிமை கொண்டாட ஆரம்பிச்சுட்டான்னா பணத்தை சேமிக்கிற ருசி அவனுக்கு வந்துடுச்சுன்னு அர்த்தம்.
அதுக்கு அப்புறமும் அவனுடைய சேவிங்ஸ்ல குடும்பத்துக்கு ஏதாவது வாங்கி அவன் கண்ணுல படுறமாதிரி வைங்க. ஆரம்பத்துல முரண்டு பிடிச்சாலும், போக போக அவனுக்கே புரியும், சில அவசரங்கள்ல நம்ம சேவிங்ஸ் குடும்பத்துக்கும் பயன்படுத்தலாம்ன்ற எண்ணம் அவன் சின்ன வயசுல மனசுல பதியும்.
6. புது செலவின் போது குழந்தைகளிடம் ஒப்பீனியன் கேளுங்கள் :
வீட்ல ஒரு புது ஏசி இருந்தா நல்லா இருக்குமென்று மனைவிக்கு தோன்றுகிறது. ஆனால் கணவனுக்கு விருப்பம் இல்லை. ஏசிக்கு 30,000 செலவு + எலெக்ட்ரிசிட்டி பில்கள் மாதாமாதம் அதிகரிக்கும். அதனால இப்ப வேணாம்னு தோன்றும். அதை அப்படியே மனைவி மற்றும் குழ்நதைகள் கிட்ட சொல்லுங்க. அவங்க ஒபீனியன் கேளுங்க.
குழந்தை ” இல்லப்பா ஏசி இருந்தா கொஞ்சம் நல்லா தூக்கம் வரும், காலைல நல்லா பிரெஷ்ஷா இருக்கும். அடுத்த வருஷம் 10th ஸ்டாண்டர்டு வேற.  அதுக்காக ஏசி வாங்கலாம்னு சொன்னா அதை கன்சிடர் பண்ணுங்க. இப்படி குழந்தைகளோடு கருத்தை நிதி விஷயத்துல கன்சிடர் பண்ண ஆரம்பிச்சீங்கன்னா…. உங்கள் குழந்தை பணத்தை பற்றி தெளிவா தெரிஞ்சுக்கிட்டஒரு நல்ல மனுஷனா, தன் கணவன் அல்லது மனைவியை மற்றும் குழந்தைகளை மதிக்கத் தெரிந்தவனா வளர்வான் என்பதை நீங்களே உணரத் தொடங்கி விடுவீர்கள்.
-மு.சா.கெளதமன்

விகடன்

Leave a Reply