குஞ்சு காகம்

​இரு தினங்களுக்கு முன் செண்ட்ரல் அருகே ஒரு வேலையாக சென்று பைக்கில் சென்று கொண்டிருந்தேன். 
தினத்தந்தி சிக்னலை கடந்தபோது நடுசாலையில் ஒரு காகம் பறக்க முடியாமல் கிடக்க.. அதை சுற்றிலும் நான்கைந்து காக்கைகள் சேர்ந்து கொத்திக்கொண்டிருந்தன. சுற்றிலும் மரங்களில் காக்கைகள் கரைந்து கொண்டிருந்தன. 
என்ன நடக்கிறது என்று புரிந்தது. வண்டியை நிறுத்திவிட்டு ஏதேனும் கார் வந்து அந்த காகத்தின் மீது ஏற்றிவிடுவதற்குள் அதை காப்பாற்ற வேண்டும் என்று ஓடினேன்.
காகத்தை நெருங்குவதற்கு முன் என் தலைக்கு மேல் கையை பாதுகாப்பாக வைத்துக்கொண்டேன். நாம காப்பாத்ததான் போறோம் என்பது காகங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.. தன் இனத்தானுக்கு ஒரு பாதிப்பு என்றால் முடிந்தளவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நம் தலையை பதம் பார்ப்பது அதன் இயல்பு. 
ஆனால் நான் நினைத்தபடி எந்த காகமும் கொத்த வரவில்லை. ஒருவேளை இவன் ஒரு கிறுக்கன் என்று அவைகள் கண்டுபிடித்திருக்கலாம்.
நான் கிட்டே சென்று அந்த காகத்தை பார்த்தேன். அதன் வாய் சிவப்பாக இருந்தது. குஞ்சு பருவம் முடிந்து பறப்பதற்கான பருவத்தில் இருந்தது. அப்படி பறக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டு கீழே விழுந்திருக்கலாம். இரு கைகளால் அதை தூக்கி எடுத்துவந்து சாலையின் ஓரம் விட்டேன். 
அடுத்து என்ன நடக்கும் என்று பைக் அருகே நின்று கவனித்தேன். மீண்டும் அதே காகங்கள் வந்து பறக்க முடியாமல் இருந்த குஞ்சு காகத்தை சிறகுகளில் கொத்த ஆரம்பித்தன. மேலோட்டமாக பார்த்தால் அந்த காகங்கள் அதை கொத்தி திங்க முயற்சிப்பதுபோல்தான் இருக்கும்.
ஆனால் அது பறக்க வைப்பதற்கான தூண்டுகோள் என்பதை அந்த குஞ்சு காகம் தன் சிறகை அசைத்து உயர எழுந்து பறந்து நிருபித்தது.. 
சக தமிழர்கள் என்பதை விடுங்கள்.. சக உயிரினம் என்ற அடிப்படையில் பக்கத்தில் ஈழத்தில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டவர்களின் படுகொலையை தடுக்க முடியாமல் வேதனையுடன் வேடிக்கைப்பார்த்த நமக்கு காகங்களிடமிருந்து கற்றுக்கொள்ள பல பாடங்கள் உண்டு…!
-கார்ட்டூனிஸ்ட் பாலா

22-5-17

Leave a Reply