காலம் − ஒரு நேர்காணல்

அரண்மனையில் ஒரே கோலாகலம். கொண்டாட்டம். “நம் மாளிகையில் நமக்குத் தெரியாமல் என்ன விழா இன்று?” என்று எண்ணிய தர்மர் முன்பு பீமன் எதிர்ப்பட்டான். “பீமா! என்ன மேளச் சத்தமும், ஆரவாரமும்! உனக்குத் தெரியுமா?” ‘‘ஏற்பாடு செய்ததே நான்தான் அண்ணா,” என்ற பீமனிடம் ‘‘எதற்காக இந்த தடபுடல் நிகழ்ச்சிகள்?” என்று கேட்டார். “தீர்க்க தரிசனம் கொண்ட முக்காலமும் உணர்ந்த தங்களைப் பாராட்டி மகிழத்தான் இப்படி ஒரு ஏற்பாட்டை நான் செய்தேன்” “என்ன ஒரேயடியா என்னைப் புகழ்கிறாய்? அப்படி என்ன நான் த்ரிகாலஞானியாகி விட்டேன்!” “அண்ணா! தற்போது தங்களிடம் வந்து உதவி கேட்ட ஒருவரிடம் ‘நாளை மறுநாள் வா! உனக்கான அன்பளிப்பை உறுதியாகத் தருவேன்” என்று கூறினீர்களாம். 
இப்படிக் கூறினால் என்ன பொருள்? அவருக்கும், உங்களுக்கும் ஆயுள் எத்தனை என்பதை நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள் என்றுதானே அர்த்தம்? கடவுளால் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ள வாழ்நாள் விவரம் தங்களுக்குத் தெரிந்துள்ளதே! அதனால்தான் விழா எடுத்து விமரிசையாக உங்களைப் பாராட்ட உள்ளேன்”.துணிச்சல் மிக்க பீமனின் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளைக் கேட்ட தருமர் உதவி கேட்டு வந்தவரை உடனே திரும்ப அழைத்து அவருக்குரிய அன்பளிப்பை அளித்தார். வாழும் நாட்களின் மர்மம் ஒருபுறம் இருக்க, ஓடிக் கொண்டே இருக்கும் காலச் சுழற்சியில் எதையும் ஒத்திப் போடுவது என்பது எவ்வளவு தவறு என்பதையும் அல்லவா இச்சம்பவம் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது.

..

“பிறகு பார்த்துக் கொள்ளலாம். அடுத்த மாதம் இதைச் செய்யலாம்” என்கிற வாசகங்கள் எல்லாம் அர்த்தம் இழந்த சொற்றொடர்கள்! ‘நெடுநீர் மறவி மடி துயில் நான்கும் கெடுநீரார் காமக்கலன்’ என்கிறார் திருவள்ளுவர். ‘நெடுநீர்’ என்றால் விரைந்து செய்ய வேண்டிய ஒன்றை ஒத்திப்போட்டு, காலம் நீட்டித்துச் செய்வது என்று பொருள். தூக்கமும், மறதியும், சோம்பலும், ஒத்திப் போடுதலும் வாழ்வில் முன்னேற வேண்டாம் என்று முடிவெடுத்தவர்கள் மேற்கொள்ளும் தீய பழக்கங்கள் என்று தீர்மானமாகச் சொல்கிறார் திருவள்ளுவர்.  ‘நன்றே செய்க! அதுவும் இன்றே செய்க!’ என்பதோடு நின்றுவிட வில்லை நம் புறநானூற்றின் பாடல்வரிகள். அடுத்தவரிதான் மிகவும் அர்த்தம் பொதிந்தது. அது என்ன தெரியுமா?
‘இன்னே செய்க’ என்பதுதான். இந்த வினாடியே செய்! நாளை செய்வோம்! இன்று மாலை பார்ப்போம் என்றெல்லாம் என்ணுவது தோல்வியின் தோழர்களாக நம்மை ஆக்குமே தவிர வெற்றியின் நண்பர்களாக நம்மை ஒரு போதும் விளங்கச் செய்யாது என்கிறது புறநானூறு. தள்ளிப் போடுவதும் தாமதமாகச் செய்ய நினைப்பதும் நாம் கிள்ளிப்போட வேண்டிய கீழான நடைமுறைகள். பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் படிக்கின்ற மாணவர்கள் எக்காரணம் கொண்டும் நேரத்தை வீணாக்கவே கூடாது. ஏனென்றால் பயிலும் நேரம்தான் எதிர்காலத்தில் அவர்களைப் பரிணமிக்கச் செய்கின்ற நேரம். அமரர் திருக்குறள் வி.முனுசாமி அற்புதமாகச் சொல்கிறார்:  “இந்த உலகத்தில் ரொம்பவும் அருமையானது என்னவென்றால் அது காலம்தான். 
எல்லாம் போனால் வரும். காலமும் நேரமும் போனால் வராது. நோட்டுப் புத்தகமோ, பாடப் புத்தகமோ தொலைந்து போய்விட்டாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். ஆனால், தேர்வு நேரத்தில் ஒரு மாணவன் நான்கு நாட்கள் வீணடித்துவிட்டால் போனது போனதுதான். இன்னொரு மாணவனிடத்திலே கடன் கேட்க முடியாது.” காலம் சென்றால் சென்றதுதான். அதனால் காலம் பொன் போன்றது என்பது கூட சரியல்ல. காலம் உயிர் போன்றது என்றுதான் உரைத்திட வேண்டும். ஏனென்றால் உயிர் போனால் மீண்டும் பெறமுடியாது என்பதுதானே உறுதி. ‘‘காலத்தின் அருமை தெரிந்து சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் கொண்டு செயல் புரிபவனிடம் சாவே சற்று காலம் தாழ்த்தித்தான் நெருங்குகிறது” என்கிறார் பாக்ஸ்டர் என்ற பேரறிஞர்.

…..
‘சிறுவயதில் நான் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன், எங்கள் அப்பாவிற்கு வேலை பாதியிலேயே பறிபோய்விட்டது. அவர் பணிபுரிந்து வந்த ஆலையை மூடிவிட்டார்கள். வீட்டில் வறுமை தாண்டவமாடியது. ஒரே பிரச்னை என்று கடந்தகால சோகங்களை நினைத்து கண்ணீர் சிந்துவதும், இழந்த சுகங்களை எண்ணி ஏக்கப் பெருமூச்சு விடுவதும் பலருக்கு ஒரு பழக்கமாகவே இருக்கின்றன. ‘எனக்கு ஒரு பையன். இரண்டு பெண்கள். இவர்களைக் கரையேற்றி விடவேண்டும். நாளுக்கு நாள் விலைவாசி வேறு விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கிறது’ இவ்வாறு எதிர்காலத்தை இருள்மயமாகவே கற்பனை செய்து கொள்வதும், சவால் களைச் சமாளிக்க நினைக்காத கோழைத்தனமும் கொண்டு குறுகிப் போகின்றவர்களும் பலர். நிகழ் காலத்தில் நிம்மதியாக வாழ்கின்றவர்களை தேடிக் கண்டு பிடிப்பதே சற்று சிரமமாகத்தான் இருக்கிறது.
கடந்த காலம் – அது  நடந்த காலம்!

எதிர் காலம் – அதுவோ புதிர் காலம்!

நிகழ் காலம் – அதுவே  மகிழ் காலம்!
– என்பதை நாம் உணர்ந்தால் வாழ்க்கை வெற்றிப்படிகளை விரைவாகக் கடந்து விடலாம். “இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டே தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்” என்ற பாரதியார் “சென்றது இனி மீளாது. மீண்டும் மீண்டும் சென்றதை எண்ணியே சிந்தை மயங்காதீர்” என்றும் சொல்கிறார். இன்றே, இப்போதே, இக்கணமே செயல்புரியும் வினை வீரர்களாக நாம் விளங்க வேண்டும் என்கிறார் பாரதியார்.

..

நேற்று என்பது உடைந்த பானை 

நாளை என்பது மதில்மேல் பூனை 

இன்று என்பதுதான் கையில் உள்ள வீணை!!
“மீட்டத் தெரிந்தானுக்குத்தான் வீணை தனக்குள் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துகிறது. நிகழ்ந்து கொண்டிருக்கும் கணத்தில் மகிழ்ந்து கொண்டிருப்பவனையும், செயலில் திகழ்ந்து கொண்டிருப்பவனையும், இந்த உலகம் புகழ்ந்து கொண்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வறுமையும், வளமையும் மாறிக்கொண்டே இருப்பவை. தரித்திரம் என்றால் ஒருவரிடத்திலேயே தரித்து இருக்க மாட்டோம். நீங்கி விடுவோம் என்று பொருள். செல்வம் என்றாலும் இங்கேயே நிரந்தரமாக இருந்துவிட மாட்டோம் இவ்விடத்தை விட்டுச் செல்வோம்” என்று பொருள். ஓரிடத்தில் நிலைத்திராதது செல்வம்!
‘தான் வாழும் தாமரைப் பூவிலேயே தங்காமல் ஒவ்வொரு இரவும் அதை விட்டு நீங்கிச் செல்கிறாள் ஸ்ரீதேவி’ என்று வடமொழிப்பாடல் ஒன்று கவிநயத்தோடு கூறுகிறது. ஆனால், திருவள்ளுவர் ஒரு செய்தி சொல்கிறார். எங்கும் செல்லவிடாமல் திருமகளை உன் வீட்டிலேயே கட்டிப் போட்டு வைக்கும் கயிறு ஒன்று இருக்கிறது. அதுதான் ஒத்திப்போடாமல் காலம் அறிந்து அதனுடன் ஒன்றி கடமை ஆற்றுவது என்கிறார்: 
‘பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு’.

Leave a Reply