காத்திருப்பு காலம்

வாழ்க்கையில் சாதிக்க விரும்புகிறவர்கள் முதலில் கற்றுக்கொள்ளவேண்டிய குணங்கள் : பொறுமை + சகிப்புத்தன்மை ஆகிய இரண்டும் தான்.

நேர்மையாக நடந்துகொள்பவர்கள் தோல்வியடைவதும் தீயவர்கள் வெற்றி பெற்று சந்தோஷத்தில் திளைப்பதும் – இரண்டுமே தற்காலிகமான ஒன்று தான். ஆகவே தவறான வழிகளில் சென்று நம்மை நிரூபிப்பதை விட நேர்மையான வழிகளில் சென்று நமது தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டும்.

“நேர்வழியில் தான் செல்கிறோமே….. ஆரம்பத்திலேயே நமது முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துவிடக்கூடாதா? ஏன் அதை இறைவன் தாமதப்படுத்துகின்றான்?” என்றால்…. இந்த இடைப்பட்ட ‘காத்திருப்பு காலம்’ என்பது உங்களை மிகவும் பக்குவப்படுத்தும். தவிர இந்த உலகத்தை, உங்களை சுற்றியிருப்பவர்களை சரியாக அடையாளம் காட்டும்.

வெற்றியின் போதும் மகிழ்ச்சியின் போதும் மட்டுமே இருப்பவர்கள் நண்பர்களே அல்ல. அவர்களை போன்றவர்களை இந்த TESTING TIME என்று சொல்லப்படும் சோதனைக்காலம் அப்புறப்படுத்திவிடும். 

உண்மையில், உங்கள் மேல் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டவர்கள் மட்டுமே உங்களுடன் இருப்பார்கள். ஆகையால் தான் மிகப் பெரிய பரிசு ஒன்றை இறைவன் உங்களுக்கு தருவதற்கு முன்பு உங்களை கடுமையாக சோதிக்கிறார்.

உதாரணத்துக்கு கிரிக்கெட்டையே எடுத்துக்கோங்க. குறிப்பிட்ட கிரவுண்ட்களில் தான் என்னால் சிறப்பாக ஆடமுடியும்… குறிப்பிட்ட பவுலர் போட்டத் தான் என்னால் நிறைய ரன் எடுக்க முடியும் என்று ஒரு வீரர் சொன்னால்… அவரை நீங்கள் சிறந்த வீரர் என்று ஏற்றுக்கொள்வீர்களா? மாட்டீர்கள் அல்லவா?

ஒரு சிறந்த கிரிக்கெட் வீரன் என்பவன் எந்த விதமான கிரவுண்டிலும் எந்தவிதமான பந்திலும் தனது திறமையை நிரூபிக்கவேண்டும்.

கிரிக்கெட்டுக்கே இப்படி ஒரு மதிப்பீடு இருக்கு. வாழ்க்கை எவ்ளோ பெரிய விளையாட்டு? அதுல விளையாடி ஜெயிக்க எவ்ளோ திறமை வேணும்?

நாம கேக்குறது எல்லாத்தையும் வஞ்சனையில்லாம ஆண்டவன் கொடுக்குறான்னு வைங்க… பலர் அப்பளம் நொறுக்கி பயில்வான்களாகத்தான் இருப்போம். நிஜ வாழ்க்கையில் ஒரு சிறு எதிர்ப்பை கூட சந்திக்க திராணியின்றி வாழ்க்கையை கழித்திருப்போம்.

அதுனால தான், தான் விரும்பும் வீரர்களை தேர்ந்தெடுத்து ஆண்டவன் அவங்களை நல்லா ட்ரெயினிங் கொடுத்து ஒரு ஆல்ரவுண்டரா ஆக்குறான்.

ட்ரெயினிங் கஷ்டமாத் தான் இருக்கும். வாழ்க்கையில ஜெயிக்கிறதுக்கு கஷ்டப்படுறதுக்கும் எல்லா வாய்ப்பையும் ஒன்னு விடாம வீணடிச்சிட்டு கடைசி காலத்துல கஷ்டப்படுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குங்க.

இது மாதிரி பாடங்கள் எல்லாம் ஆண்டவன் நடத்துற பல்கலைக்கழகத்துல தாங்க கிடைக்கும். வேற எங்கேயும் கிடைக்காது. அதுனால புலம்பாம அமைதியா பாடத்தை கத்துக்கோங்க.

மேலும் கனமான பரிசு கிடைக்கும்போது அதன் எடையை தாங்கிக்கொள்ளும் பக்குவம் வேண்டுமல்லவா?

இந்த சூட்சுமத்தை புரிந்துகொண்டவர்கள் எதற்கும் அலட்டிக்கொள்ளமாட்டர்கள். புரிந்துகொள்ளாதவர்கள் புலம்பிக்கொண்டிருப்பார்கள்.

Leave a Reply