காத்தருள்வாயாக

நினைவு தெரிந்த நாள் முதல் ஒரு பெரிய சரக்கு கப்பலில் வேலை செய்து வந்தார் அவர். ஒரு கட்டத்தில் எத்தனை கடினமான புயல்வீசும் கடற்பரப்பானாலும் அதில் லாவகமாக கப்பலை செலுத்தும் வித்தையை கற்றுக்கொண்டுவிட்டார். இவரின் திறமையை கேள்விப்பட்ட ஒரு பெரிய கப்பல் வியாபாரி, இவரை தனது பெரிய பயணிகள் கப்பல் ஒன்றின் மாலுமியாக நல்ல சம்பளத்தில் நியமித்துவிட்டான்.

தினசரி கப்பல் கிளம்பும்போது, அதை இயக்குவதற்கு முன்னர், சில நிமிடங்கள அமைதியாக அமர்ந்து “இறைவா… இன்று எங்கள் பயணத்தில் எங்களுடன் துணையிருந்து எங்களை காத்தருள்வாயாக!” – என்று பலவாறு துதித்து பிரார்த்தனை செய்வது இவர் வழக்கம்.

ஒரு முறை ஒரு கோடைக்காலத்தில் ஒரு பெரிய இளைஞர் பட்டாளத்தை கடல்வழியே அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

இளைஞர்கள் கப்பலில் அமர்ந்து ஆரவாரம் செய்துகொண்டு ஆடிப்பாடிக்கொண்டு இருந்தனர். அவர்களை வழியனுப்ப வந்தவர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

கப்பல் புறப்படும் முன், வழக்கம் போல நம் மாலுமி பிரார்த்தனை செய்தார். அதைக் கண்ட இளைஞர்கள் அவரை கண்டு நகைத்தனர்.

“ஐயா… கடல் அமைதியா இருக்கிறது. மழையோ புயலோ வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இப்போது எதற்கு இத்தனை தீவிரமான பிரார்த்தனை?”

இவர் பதில் ஒன்று சொல்லாமல், ஒரு சிறு புன்முறுவல் செய்தபடி கப்பலை செலுத்த போய்விட்டார்.

நடுக்கடலில் சென்றபோது, திடீரென்று ஒரு பெரிய சூறைக்காற்று வீசியது. கப்பல் குலுங்கியது. போதாக்குறைக்கு மழை வேறு பிடித்துக்கொண்டது. ஆர்பரித்த கடல் நீர், உள்ளே வந்து மிரட்டிவிட்டு சென்றது.

இளைஞர்கள் அனவைருக்கும் ஜன்னியே வந்துவிட்டது. முதல்பயனமே இறுதிப் பயணமாக போய்விடுமோ என்கிற பயம் அவர்களுக்கு…

அவரவர்க்கு கடவுள் நம்பிக்கை திடீரென்று பொத்துக்கொண்டு வந்தது.

அனைவரும் உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய முடிவெடுத்தனர். மாலுமியிடம் சென்று, தங்களுடன் பிரார்த்தனையில் இணையுமாறு கேட்டுக்கொண்டனர்.

அவர் சொன்னார்… “மன்னிக்கவும் நண்பர்களே… கடல் அமைதியாக இருக்கும்போது நான் பிரார்த்தனை செய்வேன். ஆனால் கடல் ஆர்பரிக்கத் துவங்கி பயணம் கடினமானால், கப்பலை பத்திரமாக செலுத்துவதில் தான் நான் கவனம் செலுத்துவேன்!”

இவர் சொன்னதில் எத்தனை ஆழ்ந்த பொருள் இருக்கிறது தெரியுமா?

மீண்டும் ஒருமுறை தொடக்கத்தில் இருந்து படியுங்கள்.

கடவுள் நம்பிக்கை எப்போது தேவை, மனித முயற்சி எப்போது தேவை என்பதற்கு இதைவிட அற்புதமான உதாரணம் இருக்கமுடியாது!

வாழ்க்கையில் எந்த பிரச்னையும் இன்றி இருக்கும்போது, இறைவனை நாம் வணங்கத் தவறினோம் என்றால் இக்கட்டில் இருக்கும்போது இருக்கும்போது அவனருளை பெற தவறிவிடுவோம்.

ஆனால், வசந்தம் வீசும்போது அவன் மீது நம்பிக்கை செலுத்தி பக்தி செய்து வந்தால், ஆபத்தான காலகட்டங்களில், நாம் கேட்காமலே அவனருள் நமக்கு கிடைக்கும்.

ஆனால், நம்மில் பலர் செய்வது என்ன?

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. (குறள் # 0337)

திருவள்ளுவர் கூறுவது போல மனித வாழ்க்கை நிலையற்றது. நொடிக்கு நொடி மாறும் இயல்புடையது. இதை உணராமல் கொண்டாடி களித்துவிட்டு பிரச்சனை என்று வரும்போது தான் ஆண்டவனை நோக்கி ஓடுகிறோம். அதுவரை நம்மை சுயநலம் தான் ஆட்டிப்படைக்கிறது. மனிதனின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு எத்தனையோ விஷயங்கள இவ்வுலகில் உள்ளன. எனவே ஒவ்வொரு நொடியையும் இறைவனுக்கு அற்பணித்து வாழ்வோம். அது தான் ஆனந்தமான, அர்த்தமுள்ள, ஆபத்தற்ற வாழ்க்கை.

Leave a Reply