கழுதை கயிறு

ந்த சலவைத் தொழிலாளியிடம் ஐந்து கழுதைகள் இருந்தன. பொதி சுமக்க இரண்டு கழுதைகளே போதும் என்கிற நிலையில் மற்ற கழுதைகளை பராமரிக்க முடியாத காரணத்தால் அவற்றை விற்பதற்கு சந்தைக்கு ஓட்டிக்கொண்டு சென்றான்.

செல்லும் வழியில் ஒரு ஆற்றைக் கண்டவன் அதில் நீராடிவிட்டு சற்று இளைப்பாற நினைத்தான். அருகே இருக்கும் மரம் ஒன்றில் கழுதைகளை கட்டிப் போட்டுவிட்டு ஆற்றுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தான். ஆனால் இரண்டு கழுதைகளை கட்ட மட்டுமே அவனிடம் கயிறு இருந்தது. மூன்றாவது கழுதையை கட்ட கயிறு இல்லை.

என்ன செய்வது என்று புரியவில்லை. அப்போது சற்று தூரத்தில் ஒரு சந்நியாசி ஒரு மேட்டில் அமர்ந்து பூக்களை கட்டி மாலை கோர்த்துக்கொண்டிருப்பதை பார்த்தான்.

அவரிடம் சென்று நிலைமையை விளக்கி “மூன்றாவது கழுதையை கட்ட கயிறு ஏதாவது இருக்குமா?” என்று விசாரித்தான்.

அவர் தன்னிடம் கயிறு எதுவும் இல்லை ஆனால் தன்னால் ஒரு உபாயம் சொல்ல முடியும் என்றார்.

என்ன அது சொல்லுங்கள் என்றான் இவன்.

முதல் இரண்டு கழுதைகளை மரத்தில் கட்டும்போது இந்த கழுதை அதை பார்ப்பது போல செய். இதையும் கட்டுவது போல பாசாங்கு செய்.”

சலவைத் தொழிலாளியும் இதே போல செய்ய, மூன்றாவது கழுதை தான் கட்டப்பட்டதாகாவே உணர்ந்தது. இவன் தைரியமாக ஆற்றுக்கு சென்று தனது பணிகளை முடித்துவிட்டு திரும்ப வந்தான். மூன்று கழுதைகளும் பத்திரமாக இருப்பதை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்.

கட்டப்பட்ட இரண்டு கழுதைகளையும் அவிழ்த்து ஒவ்வொன்றாக தட்டிவிட்டு ஓட்டியவன் மூன்றாவது கழுதையையை தட்டி ஓட்டிச் செல்ல முற்பட, அது அந்த இடத்தைவிட்டு நகர மறுத்தது. இவனும் என்னென்னவோ செய்து பார்த்தும் அது இடத்தைவிட்டு அசைய மறுத்தது.

சந்நியாசியிடம் வந்தான் சலவைத் தொழிலாளி.

“நீ… இந்த கழுதையின் கட்டை அவிழ்ப்பது போல பாவ்லா செய்”

“ஓ… நான் தான் இதை கட்டவே இல்லையே…”

“அது உனக்கு தெரியும். கழுதைக்கு தெரியுமா?”

வாஸ்தவம் தான் என்றவன், இம்முறை சென்று அதன் கட்டை அவிழ்ப்பது போல பாவ்லா செய்தான். பின்னர் ஒரு தட்டு தட்டியவுடன் கழுதை நகர்ந்து சென்று மற்ற கழுதைகளுடன் இணைந்துகொண்டது.

இந்த கழுதை போல, மனிதர்களும் நிஜத்தில் இல்லவே இல்லாத கற்பனையான கயிறுகளால் தாங்கள் கட்டப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள்.

மற்றவர்களால் அவர்கள் சூழ்நிலை காரணமாக ஒரு விஷயம் செய்யமுடியவில்லை என்றால் அதே சூழல் தங்களுக்கும் இருப்பதாக வீணே கற்பனை செய்துகொண்டு தங்களாலும் அது முடியாது என்று நினைக்கிறார்கள். இது எத்தனை அறிவீனம்? கழுதைக்கும் மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?

பெரும்பாலானோர் இந்த கற்பனை தளைகளை தாங்களாகவே கட்டிக்கொள்வார்கள். ஒரு சிலருக்கு மற்றவர்கள் கட்டிவிடுவார்கள். நாம் செய்யவேண்டியதெல்லாம் நம்மை கட்டியிருக்கும் கற்பனை தளைகளை அது யார் கட்டியிருந்தாலும் அவற்றை அறுத்தெறிவது தான்.

நிஜ வாழ்க்கையில் சாதிப்பதற்கு எல்லை என்பதே கிடையாது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சாதிக்கலாம். அதனால் தான் ஒருவர் படைத்த சாதனையை வேறு ஒருவர் முறியடித்தார் என்கிற செய்திகளை நாம் காலங்காலமாக பார்த்துவருகிறோம்.

மனித மனம் என்பது மிகவும் அற்புதமான ஒரு POWER HOUSE போல. அதன் சக்தி அளப்பரியது. நமது அனுமதியின்றி அதை பழுதடையச் செய்யும் எந்த தீய விஷயமும் அதில் நுழையமுடியாது. எனவே ஒவ்வொரு நாளை துவக்கும்போதும், முடிக்கும்போதும் மனதின் சக்தியை கொண்டு நம்மால் என்ன செய்யமுடியும்? அப்படி செய்யக்கூடியதை தடுப்பது எது? என்று ஆராய்வது அவசியம்.

Leave a Reply