களம் காண்

​பல வித போர்க் கலைகளில் பயிற்சி பெற்ற வீரர்கள் அந்த நாட்டின் முப்படைகளில் இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் பலவித போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் அளித்து தகுதியானவர்களை தனது படையில் சேர்த்துக்கொள்வது அந்நாட்டு மன்னனது வழக்கம். பல சலுகைகளோடு கிடைக்கும் அராசங்க உத்தியோகம் என்பதால் அந்த போட்டிகளில் பலர் கலந்துகொண்டு சிலர் வெற்றி பெற்று ஒவ்வொரு ஆண்டும் படையில் சேர்ந்து வந்தனர்.

இந்நிலையில் வாட்படை பிரிவை சற்று விரிவுபடுத்த அப்படைக்கு புதிதாக வீரர்களை சேர்க்க விரும்பினான் மன்னன். படையில் சேருபவர்கள் அரசு உத்தியோகம் என்பதால் பலவித சலுகைகள் கிடைக்கும் என்று கருதி சேராமல் உண்மையில் மிகச் சிறந்த வீரர்களாகவும் எவராலும் வெல்ல முடியாதவர்களாக இருக்கவேண்டும் என்று நினைத்தான்.

தீவிரமாக யோசித்தவன் வடக்கில் இருந்த தனது நட்பு நாடு ஒன்றிலிருந்து மிகச் சிறந்த வாள் சண்டை வீரர் ஒருவரை வரவழைத்து அவனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுபவர் யாரோ அவரையே தனது வாட்படையில் சேர்ப்பது என்று முடிவு செய்தான்.

அந்த வீரன் பல நாடுகளுக்கு சென்று வாள் சண்டை போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் பெற்றவன். அவனை வாள் சண்டையில் வெற்றி கொண்டவர் எவருமில்லை. மாறாக தோற்றுப் போய் ஓடிப்போனவர்கள் தான் அதிகம். அவன் பேரைக் கேட்டாலே மிகப் பெரிய வாட்சண்டை வீரர்கள் கூட தரையை நனைத்துவிடுவார்கள். அந்தளவு வீராதி வீரன். சூராதி சூரன்.

தொடர்ந்து நாடு முழுக்க வாள் சண்டை போட்டி பற்றி முரசறிவித்து வட நாட்டு வீரனை வெற்றிகொள்பவர்களே படையில் சேர முடியும் என்ற நிபந்தனையையும் அறிவித்தான். போட்டி நடைபெறும் தேதியும் கூறப்பட்டது.

உடனே வீரேந்திரன் என்கிற குடிமகன் போட்டியில் பங்கேற்பதாக அறிவித்தான்.

அவன் நண்பர்கள் அவனை பார்த்து சிரித்தினர். “உனக்கென்ன பைத்தியமா? அவனை வெற்றிகொள்ள உன்னால் முடியுமா? உனக்கு வாளை சுழற்றவே தெரியாது இதில் அவனை நீ எப்படி வெற்றிகொள்ளப்போகிறாய்?”

நான் பயிற்சி செய்துகொள்வேன். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற முயற்சி செய்வேன்…” என்றான் வீரேந்திரன் தன்னம்பிக்கையுடன்.

“அவன் பல ஆண்டுகள் பல நாடுகளுக்கு சென்று போட்டியில் வெற்றி பெற்றவன். முழுக்க முழுக்க பயிற்சி செய்தவன். வாள் சண்டையின் நுணுக்கங்கள் அனைத்தும் அவனுக்கு அத்துப்படி… இதில் நீ எப்படி வெற்றி பெறுவாய்?” என்று அவன் மீது அக்கறை கொண்ட நண்பன் ஒருவன் தனிப்பட்ட முறையில் கூறினான்.

“நான் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படவில்லை. வென்றால் அரசாங்க உத்தியோகம். தோற்றால் எனக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். அடுத்த ஆண்டு இன்னும் பயிற்சி செய்து வெற்றிபெறுவேன். கவலை வேண்டாம் நண்பா” என்றான் தைரியமாக.

“சரி உன் இஷ்டம்…!” என்று கூறிய நண்பன் சென்றுவிட்டான்.

அதே நேரம் வீரேந்திரன் மீது பொறாமை கொண்ட சிலர்  “அவன் எப்படியும் தோற்பான். அதை நாம் கொண்டாடுவோம்…” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

தனது தோல்வியை கொண்டாட ஒரு கூட்டம் காத்திருப்பது வீரேந்திரனுக்கும் தெரியும்.

குறித்த நாளன்று குறிப்பிட்ட இடத்தில் அனைவர் முன்னிலையிலும் போட்டி துவங்கியது. அரசு பிரதிநிதிகள், அமைச்சர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். வீரேந்திரனின் நண்பர்கள், விமர்சகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் குழுமியிருந்தனர்.

போட்டி துவங்கிய சில நிமிடங்களில் அனைவரும் எதிர்பார்த்தபடி வீரேந்திரன் தோற்றுவிட்டான். மேலும் வீரேந்திரனுக்கு காயங்கள் வேறு. வடதேச வீரன் மிகச் சுலபமாக வெற்றி பெற்றுவிட்டான்.

வீரேந்திரனின் நண்பர்கள் அவனை தேற்ற, அதுவரை அவனுக்கு ஆதரவாக இருந்தவர்கள் கூட வீரேந்திரனை நேரடியாகவே ஏளனம் செய்ததோடு, குறைகூறவும் ஆரம்பித்தனர்.

இவனுக்கெதுக்கு இந்த வீண் வேலை? அவமானப்பட்டது தான் மிச்சம்!”

“அஞ்சு நிமிஷம் கூட தாக்குபிடிக்க முடியலே… இதுல இவரு ஜெயிச்சு படையில சேரப்போறாராம்….”

பல வித விமர்சனங்கள்!

அவன் வீழ்ச்சியை காண ஆர்வமுடன் காத்திருந்த பொறாமைக்காரர்களோ, “என்னப்பா… பயிற்சி முயற்சி அது இதுன்னு ஏதோ சொன்னே… கடைசியில தோத்துட்டே… நிஜமாவே நாம ஜெயிப்போங்குற நினைப்பு உனக்கு இருந்ததோ??” என்று கேலி கிண்டல் செய்தனர்.

வீரேந்திரன் ஒரு சிறு புன்னகை செய்துவிட்டு சொன்னான்… “வரலாறு – வெல்பவரை பதிவு செய்யும்; தோற்பவரையும் பதிவு செய்யும். ஆனால் வேடிக்கை பார்ப்பவர்களை பதிவு செய்யாது. நான் தோற்றாலும் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டேன். ஆனால் நீங்கள்??” என்றான்.

ஏளனம் செய்தவர்கள் வாயடைத்துப் போயினர்.

ஆம்… வெற்றியோ தோல்வியோ களம் காண்பவர்களையே வரலாறு பதிவு செய்யுமே தவிர என்றும் ஒதுங்கி நிற்பவர்களை அல்ல.

எனவே நண்பர்களே, நீங்கள் சாதிக்க நினைக்கும் விஷயத்தில் தைரியமாக களம் இறங்குங்கள். வென்றால் வெகுமதி. தோற்றால் அனுபவம். சில நேரங்களில் முன்னதைவிட பின்னது மதிப்புமிக்கது!

====================================

Leave a Reply