கற்பனை காரணம்

” *எதுவும் தெரியாமலே ஏதேதோ கற்பனை* ”

ஒருவர் தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு சுவர் கடிகாரம் வாங்கினார். சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கலாம்னு நினைத்தார். ஆனால் ராத்திரி நேரமாச்சே சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..

காலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது “ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே” னு நெனச்சுட்டா என்ன செய்வது. சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..

இப்படியே ஒவ்வொரு நாளும் “விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்”

“வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே”

பக்கத்து வீட்டுக்காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர்.

மாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..

ஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் “யோவ் போய்யா உன் சுத்தியும் வேணாம் ஒண்ணும் வேணாம் நீயே வெச்சுக்கோ”னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்… பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..

இந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று மாட்டப்படாத கடிகாரத்தை போல் நாமும் நன்கு பழகியவர்களிடம் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் பகைமையை வளர்த்துக் கொண்டு அந்நியமாக்கி கொள்கிறோம்.

நெருக்கமான இருவருக்குள் பிரச்சனைகள் வருவதற்கு மூன்றே காரணங்கள் தான் இருக்கின்றன.

ஒன்று ஒருவர் சொல்லும் காரணம்

இன்னொன்று இன்னொருவர் சொல்லும் காரணம்

மூன்று உண்மையான காரணம்

இந்த உண்மையான காரணம் என்ன என்று இருவரும் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும். தங்களுக்குள் சண்டையும் சச்சரவும் வர என்ன காரணம் என்று தெரிந்து கொண்டால் அதற்கு என்ன தீர்வு என்று எளிதில் கண்டு பிடிக்க முடியும்.. இல்லையென்றால் நமக்குள் இருக்கும் Ego வை போகச் சொன்னாலே போதும்…

உண்மையாக உள்ள நிலையினை அறியாமல்… தடுமாறும் கற்பனைகளில் மூழ்காமல்… வெளிப்படையான மன பரிமாற்றங்களால் நமது வாழ்வை மேலும் மேலும் இனிமையாக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

எந்த சூழலிலும்
நீயா-நானா என்பது “விஷம்”
நாம் என்பதே “நலம்”
என்பதை முழுமையாக உணருங்கள்.

நன்றி…

Leave a Reply