கடவுள் சொன்னது போல

ந்த இளைஞன் மிகுந்த கடவுள் பக்தி மிக்கவன். நல்ல பரோபகாரி. இயன்றவரை பிறருக்கு உதவி செய்பவன். ஆகையால் கடவுளை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் பாவம் எண்ணற்ற பிரச்னைகள் அவனை சூழ்ந்திருந்தது. இருப்பினும் அவனது கடவுள் நம்பிக்கை எந்த சூழ்நிலையிலும் குறையவில்லை. அவரை வணங்குவதையும் அவன் நிறுத்தவில்லை.

சோதனையிலும் தொடர்ந்த அவனது பக்தியை கண்டு மனமிரங்கிய கடவுள், அவனுக்கு திருவருள் செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து அவனது கனவில் ஒரு நாள் தோன்றிய இறைவன், “உனக்கு அருள் செய்ய முடிவுசெய்துவிட்டேன். அதற்கு முன்பு எனது விருப்பம் ஒன்றை நிறைவேற்றுவாயா ?”

“நிச்சயம் சுவாமி. அதற்காகத் தானே காத்திருக்கிறேன்!!!!”

உன் வீட்டு பின்பக்கம் திறக்கப்படாத கதவு ஒன்று இருக்கிறது. அதை நீ உனது முழு பலத்துடன் தள்ள வேண்டும். எத்தனை நாளானாலும் சரி எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் தள்ள வேண்டும். இது தான் எனது விருப்பம்.”

அட இவ்வளவு தானா? அதற்கென்ன தாரளாமாக செய்கிறேன்!” என்றான்.

கடவுள் மறைந்துவிட, மறுநாள் காலை அந்த நீண்டநாள் திறக்கப்படாத கதவை பார்க்கிறான்.

அது அவன் அந்த வீட்டிற்கு குடி வந்த முதல் இருக்கிறது. அந்த கதவைப் பற்றி அவன் யோசித்ததேயில்லை. ஏனெனில் அதற்கு பின்னர் சுவர் எழுப்பி கட்டிவிட்டார்கள்.

கடவுள் சொன்னாரே ஏதேனும் அர்த்தம் இருக்கும் என்று கருதி அதை தள்ள முயற்சிக்கிறான். ம்….ஹூம்… ஒரு மில்லி மீட்டர் கூட கதவு அசைந்து கொடுக்கவில்லை. ரொம்பநேரம் தள்ளிப் பார்த்தான். அப்போதும் ம்….ஹூம்… முடியவில்லை. இன்னைக்கே தள்ளனும்னு ஆண்டவன் சொல்லலியே… சரி நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று வேலைக்கு கிளம்பி போய்விடுகிறான்.

மறுநாள்… மறுபடியும் முயற்சிக்கிறான். அதே தான்… கதவு துளி கூட அசையவில்லை.

மீண்டும் அடுத்த நாள். மீண்டும் அதே தான். நோ யூஸ்.

அடுத்த நாள் அவனுக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. “உண்மையில் கடவுள் கனவில் வந்து கதவை தள்ள சொன்னாரா? அல்லது நமது மனபிரம்மையா? நாம் செய்வது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே… பேசாமல் போய் வேலையை பார்ப்போம்” என்று அன்று கதவை தள்ளும் முயற்சியை கைவிடுகிறான்.

அன்று  இரவு, மீண்டும் கனவில் கடவுள் வந்தார்…. “ஏனப்பா? இன்று கதவை நீ தள்ளவில்லை?”

இவனுக்கோ என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. “அது வந்து… இல்லை… இல்லை… என்னை மன்னித்துவிடு இறைவா… நாளை மீண்டும் தள்ளுகிறேன்…”

அடுத்த நாள் எழுந்தவுடன் இரவு கடவுளுடன் நடத்திய உரையாடல் நினைவுக்கு வருகிறது.

மீண்டும் தள்ள முயற்சிக்கிறான். இப்படியே நாட்கள் போகின்றன. தினசரி அந்த கதவை தள்ள முயற்சிப்பதில் அவனுடைய நேரத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதி கழிந்தது. நீண்ட நாட்கள் இது நடந்தது. கனவில் கடவுள் நீண்ட நாட்கள் அதற்கு பிறகு வரவில்லை. இடையே அவன் ஓரிரு நாட்கள் தள்ளுவதை நிறுத்திவிட்டான். அப்போதும் கடவுள் வரவில்லை.

ஒரு கட்டத்தில் விரக்தி ஏற்பட்டது.

நமது நேரமும் ஆற்றலும் இப்படி முடியாத ஒன்றின் மேல் வீணாக போகிறதே…இன்றோடு இதை நிறுத்திவிட வேண்டியது தான்” …. மனம் வெதும்பியது.

அன்று இரவு அவன் கனவில் மீண்டும் கடவுள் தோன்றினார்.

“என்னப்பா… நீ பலகாலம் முயற்சித்தும் கதவை திறக்க முடியவில்லை போலிருக்கிறதே….?”

கடவுளின் இந்த வார்த்தை அவனது தோல்வியை பறைசாற்றியமையால்…. வெறுப்புடன்… “ஆம்… முடியாத ஒன்றை என்னை செய்ய சொல்லிவிட்டு நீ வேடிக்கை பார்க்கிறாய்… நான் என்ன செய்வேன்?”

குழந்தாய்…  நான் கூறியது அந்த கதவை உன் முழு பலத்தை பிரயோகித்து தள்ளவேண்டும் என்பதே தவிர திறக்கவேண்டும் என்பதல்ல. தள்ளவேண்டும் என்பது உனக்கிடப்பட்ட கட்டளை. அதை நீ செவ்வனே செய்தாய். உன் முழுபலத்தையும் நேரத்தையும் செலவிட்டு அதை செய்த பின்னர் தற்போது என்னிடம் வந்து உன் முயற்சியில் தோற்றுவிட்டதாக கூறுகிறாய். ஆனால் அது உண்மையா? நீ தோல்வியடைந்துவிட்டாயா?? இல்லை.

உன்னுடைய தோள்களை பார்…. இத்தனை காலம் நீ செய்த முயற்சியில் அவை முறுக்கேறி எப்படி வலிமையுள்ளதாக மாறியிருக்கிறது என்று பார். உன் முதுகு எப்படி நிமிர்ந்து வலுவாக இருக்கிறது என்று பார். உன் கைகளை பார்… தொடர்ந்து தந்த அழுத்தத்தினால் காப்பு காய்த்து அவை எதையும் தாங்கும் சக்தி பெற்றிருப்பதை… தீ கங்குகளை கூட உன்னால் இப்போது கையில் எடுக்க முடியும். உன் கால்கள் நன்கு வளர்ந்து பொலிவு பெற்றிருப்பதை பார்.

எதிர்ப்புக்கிடையில் நீ வளர்ந்தாய். முன்பு உன்னால் முடிந்ததைவிட தற்போது உன்னால் அதிகம் முடியும். கதவு திறக்காவிட்டாலும் நீ என் விருப்பத்திற்கு கீழ்படிந்து நிறைவேற்ற முயற்சித்தாய். அதற்காக உனது நேரத்தையும் ஆற்றலையும் செலவு செய்தாய். இது தான் நீ சாதித்தது. இப்போது நீ தொட்டாலே அந்த கதவு திறக்கும்!” என்று கூறிவிட்டு மறைந்தார்.

கடவுள் சொன்னதுபோல, விழித்தவுடன் இவன் எழுந்து சென்று அந்த கதவை தொட, அடுத்த கணம் அது திறந்தது. ஒரு சுரங்கத்துக்கான கதவு அது. சுரங்கத்தின் உள்ளே இவன் செல்ல… இறுதியில் விலை மதிப்பில்லா நகைகளும் வைர வைடூரியங்களும் பொக்கிஷங்களும் குவிந்துகிடந்தன!

நமது ஒவ்வொருவரின் முயற்சிக்குப் கடின உழைப்புக்கு பின்னரும் இப்படித் தான் விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள் காத்திருக்கின்றன.

(சிலர் தவறான இடத்தில் தண்ணீரை தேடிக்கொண்டிருப்பார்கள். அது அவர்கள் தவறே தவிர இறைவனின் தவறல்ல.)

சில சமயம் நமது முயற்சிகள் வீணாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படும். இறைவனின் விருப்பப்படி உங்கள் செயல்பாடு இருக்குமானால் உங்கள் பாதையும் சரியாக இருக்கும். பயணமும் சரியான திசையில் தான் இருக்கும். கவலை வேண்டாம்.

ஒரு நாள் நிச்சயம் உங்களுக்குரிய பொக்கிஷம் கிடைத்தே தீரும். ஆனால் அதற்கு ஒரே ஒரு கண்டிஷன் தான் உண்டு.

“கடவுளை வணங்கு. ஆனால் உன் சம்மட்டியை நிறுத்தாதே!” என்பது தான் அது.

Leave a Reply