ஏரி நீர்

ன்னை நாடிவருபவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் வல்லவர் அந்த ஞானி. அவரை பற்றி கேள்விப்பட்டு அவரை தேடி ஒரு இளைஞன் வந்தான்.

“குருவே வாழ்க்கையே நரகமாக இருக்கிறது. பிரச்னைகள், துன்பங்கள், தோல்விகள் இது தவிர என் வாழ்க்கையில் எதுவும் இல்லை. நீங்கள் தான் நான் இவற்றிலிருந்து மீள ஒரு வழி சொல்லவேண்டும்!”

ஞானி உடனே அந்த இளைஞனிடம் ஒரு கிளாஸில் நீரை கொண்டு வரச் சொன்னார். இளைஞனும் கொண்டும் வந்தான்.

அவன் கைகளில் ஒரு கைப்பிடி உப்பை தந்து அந்த கிளாஸில் போடச் சொன்னார்.

இப்போது அந்த நீரை குடி!” என்றார் ஞானி.

சற்று தயங்கினாலும் அவர் சொல்வதில் ஏதோ காரணம் இருக்கிறது என்பதை யூகித்த அந்த இளைஞன் மறுபேச்சு பேசாமல் அந்த நீரை குடித்தான். அவனால் ஒரு வாய் கூட குடிக்க முடியவில்லை.

எப்படி இருக்கிறது?”

“ஐயோ முடியவில்லை குருவே. கொடுமை…!”

“சரி… என்னுடன் வா….” என்று கூறி அவனை அருகில் உள்ள ஏரிக்கு அழைத்து செல்கிறார். மீண்டும் ஒரு கைப்பிடி உப்பை அவனிடம் கொடுத்து, “இதை ஏரியில் வீசு” என்கிறார். அவனும் உப்பை வாங்கி அதை ஏரியில் வீசுகிறான்.

“இப்போது சிறிது நீரை எடுத்துக் குடி”- ஞானி கட்டளையிட அவனும் ஏரியிலிருந்து சிறிது நீரை அள்ளிக் குடிக்கிறான்.

“இப்போது எப்படி இருக்கிறது?”

“அருமையாக இருக்கிறது!”

“நீர் உப்புக் கரித்ததா ?”

“இல்லை!”

“நீ இரண்டு முறையும் போட்ட உப்பு ஒரே அளவு தான். அதிகமாகவும் இல்லை. குறையவும் இல்லை. ஆனால் டம்ப்ளரில் நீ போட்டு குடித்தபோது உன்னால் குடிக்க முடியவில்லை. ஏரியில் போட்டு குடித்தபோது உன்னால் குடிக்க முடிகிறது. எப்படி?”

“குருவே… எந்த கொள்கலனில் எவ்வளவு நீரில் போடுகிறோம் என்பதை பொறுத்து உப்பின் சுவை நீர்த்துவிடுகிறதே…”

“வாழ்க்கையில் நீ அனுபவிக்கும் துன்பம் போன்றது தான் உப்பு. எந்தளவு நாம் அந்த துன்பத்தின் வலியை உணர்கிறோம் என்பது நாம் அதை எந்த கொள்கலனில் போடுகிறோம் என்பதை பொருத்தது. நீ செய்ய வேண்டியது என்னவென்றால் உன்னுடைய பார்வையை விரிவாக்கிக்கொள். உன்னுடைய உலகை பெரிதாக ஆக்கிக்கொள். ஒரு சிறு கண்ணாடி டம்ப்ளராக இருக்காதே. பரந்து விரிந்த பெரிய ஏரியாக இரு. எந்த துன்பமும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது.”

======================================================
மேலோட்டமா படிச்சா ஒரு சாதாரண கதை போல இது இருக்கும். ஆனால் எத்தனை பெரிய உண்மையை இது சொல்கிறது தெரியுமா?

பிரச்னைகள் நமக்கு எப்போதும் இருக்கிறது தான். ஆனா நாம் அதை அணுகும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டால் அந்த பிரச்னை ஒன்றுமே இல்லாமல் போய்விடும்.

வாழ்க்கையில் எல்லாருக்கும் எல்லாம் கிடைத்துவிடாது. கிடைத்தவர்களுக்கு அதை அனுபவிக்க தெரியாது.

எனக்கு முன்பிருந்த அதே கஷ்டங்கள், பிரச்னைகள் இப்போதும் இருக்கிறது. எதுவும் தலைகீழாக மாறிவிடவில்லை. ஆனால் என்னுடைய அணுகுமுறை மாறியிருக்கிறது. வாழ்க்கையை குறித்த என் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. பிரச்னைகளை நான் எதிர்நோக்கும் விதம் மாறியிருக்கிறது. ஆகையால் சிறிய சிறிய விஷயங்களில் கூட (நான் முன்பு கண்டுகொள்ள மறந்த) மகிழ்ச்சியின் அலைகளை உணர முடிகிறது.

சுருங்கச் சொன்னால் என்னுடைய உலகம் பெரிதாகிவிட்டது. ஆகையால் பிரச்னைகள் சிறியதாகிவிட்டது.

Leave a Reply