ஏட்டுச் சுரைக்காய்

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவும்!
?????????
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்றார் வள்ளுவர்…

இன்றைய மாணவன் சொல்கிறான்…

கற்க கசடற கற்பவை கற்றபின்
விற்க பாதி விலைக்கு

என்று..!

இலக்கியங்கள் வேறு வாழ்க்கை வேறு இல்லை. வாழ்வியல்ப் பதிவுகளே இலக்கியங்கள் ஆகும். இலக்கியங்கள் என்றால் திருக்குறளும், சிலப்பதிகாரமும் மட்டுமல்ல…

வாழ்க்கையின் தேவையை, இலக்கை, அனுபவத்தை இயம்பும் எந்தவொரு நூலையும் இலக்கியம் எனலாம். வேண்டுமானால் இவ்விலக்கியத்தை,

கலை இலக்கியம்
வாழ்க்கை இலக்கியம் என்றுவேண்டுமானால் பகுத்துக்கொள்ளலாம்.

அறம்,பொருள், இன்பம், வீடு என்னும் வாழ்வியற்கூறுகளை இயம்புவதையே இலக்காகக் கொண்டவை இலக்கியங்களாகும்.

இலக்கியங்கள் இல்லையென்றால் இன்றும் நாம் கற்கால மனிதர்களாகத் தான் கல்லை ஆயுதமாகக் கொண்டு காடுகளில் அழைந்துகொண்டிருப்போம்.

இலக்கியங்கள் சமகால அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளன.

அத்தகைய ஏட்டுச்சுரைக்காய் எப்போது கறிக்குதவும்?

இலக்கியங்கள் சுட்டும் வாழ்வியல் அனுபவங்களை உள்வாங்கி தம்வாழ்வில் பயன்படுத்தும் போது….

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவும்!

சீனக் கதையொன்று…….

எலி பிடிப்பது எப்படி என்று நூலொன்று வெளியிடப்பட்டது. அழகான ஓவியங்களுடன் புத்தகம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

ஒருநாள் தம் வீட்டின் சமையலறையில் அந்தப் புத்தகத்தை வைத்தார் வீட்டுக்காரர். அவர் இல்லாத நேரத்தில், சில எலிகள் வந்தன. அந்தப் புத்தகத்தைச் சுற்றி நின்றன.

புத்தகத்துக்கு அவமானமாகப் போய்விட்டது. புத்தகம் எலிகளைப் பார்த்துக் கேட்டது…..

“முட்டாள் எலிகளே! நான் யார் தெரியுமா?

எலிகள் சொன்னன,

தெரியுமே! நீ ஒரு புத்தகம்!

புத்தகம் சொன்னது…

“நான் சாதரணமான புத்தகம் இல்லை. எலியைப் பிடிப்பதில் சிறப்பான நுட்பங்களை அள்ளித்தரும் புத்தகம். நீங்கள் சாவுக்குத் தயாராகிறீர்கள் என்று நினைக்கிறேன்.“ என்றது.

எலிகள் புத்தகத்தின் பேச்சைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. அந்தப் புத்தகத்தை ருசிபார்க்கத்தொடங்கின.சிறிது நேரத்தில் அந்தப் புத்தகம் சுக்கல் சுக்கலாக சிதைந்து போனது. அந்தப் புத்தகத்தைப் பற்றி எலிகள் கவலைப்படவில்லை.

காரணம்…..

நூல் எவ்வளவுதான் சிறப்புடையதாக இருந்தாலும். அச்சடித்த எழுத்துக்களால் எந்தப் பயன் ஏதுமில்லை.

நடைமுறைப்படுத்தினால் தான் பயன்!

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதாவது என்பது எலிகளுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது!!

Leave a Reply