என்னைத் தான்

வன் ஒரு பலே திருடன். வாழ வழி தெரியாமல் சிறு சிறு திருட்டுக்களில் ஆரம்பித்து பின்னர் அது பழகிவிட வீடுகளில் புகுந்து திருடும் மிகப் பெரிய திருடனாகிவிட்டான். ஒரு கட்டத்தில் சாதாரண திருட்டு போரடித்துவிட, பிரபலங்களின் வீடுகளில் புகுந்து திருட ஆரம்பித்துவிட்டான். இது மிகவும் சேலஞ்சிங்காக சுவாரஸ்யமாக இருந்தது அவனுக்கு. ஒவ்வொரு வாரமும் ஒரு சினிமா நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என ஏதாவது ஒரு பிரபலத்தின் வீட்டில் தனது கைவரிசையை காட்டுவான்.

ஒரு கட்டத்தில் பிரபலங்களில் வீடுகளில் மட்டுமே திருடுவான். அதுவே பிரபலங்களுக்குள் பிரஸ்டீஜ் இஸ்யூவாக மாறியது. அவன் கொள்ளையடித்தால் தான் நாம் சமூகத்தில் பெரிய மனிதர் என்று எண்ணவே ஆரம்பித்தனர்.

ஊடகங்கள் அவனுக்கு “நட்சத்திர திருடன்” என்கிற பெயரை கொடுத்தன. ஒவ்வொரு முறையும் இவனது கொள்ளை தலைப்பு செய்தியாகும் போதும் மக்கள் ஆங்காங்கு நின்று இவனை பற்றி பேசுவது வழக்கமாயிற்று. போலீசாருக்கோ அது மிகப் பெரிய கௌரவப் பிரச்னையாக உருவெடுத்தது. அவனை எப்படியாவது பிடிக்கவேண்டி கண்ணி வைத்து காத்திருந்தனர்.

வழக்கம்போல ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் அவன் திருடச் சென்றான். அவர் மேட்சுக்கு போயிருப்பார் என்று கருதி அவர் பங்களாவிற்குள் நுழைந்தான்.
என்ன விஷயம் என்றால் அந்த வீடு முழுக்க முழுக்க ஒரு செக்யூரிட்டி ஏஜென்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. கண்ணுக்கு தெரியாத அல்ட்ரா சானிக் கதிர்களால் வீடு முழுக்க பாதுக்கப்பு வேலி போடப்பட்டிருந்தது. அன்னியர் எவர் பிரவேசித்தாலும் அலாரம் அடிக்க ஆரம்பித்துவிடும். வெளியே இரும்பு கேட்டுகள் தானாகவே லாக் ஆகிவிடும். எனவே இவன் எக்குத்தப்பாக உள்ளே மாட்டிக்கொண்டான்.

மறுநாள் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை தலைமை அதிகாரி நீண்டநாள் கண்ணாமூச்சி காட்டி வந்த நட்சத்திர கொள்ளையன் பிடிப்பட்டான் என்றும் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உரிய தண்டனை பெற்றுத் தருவோம் என்றும் கூறினார்.

அவனது வீட்டை போலீஸார் சோதனையிட்ட போது அவன் ஆண்டுக்கணக்கில் திருடிய பல பொருட்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. அரிய கலைப் பொக்கிஷங்கள், பிரபலங்களின் உடமைகள், வைரங்கள், தங்க நகைகள், ரத்தினங்கள் என அனைத்தையும் கைப்பற்றினர். கூடவே டஜன் கணக்கில் ஓவியங்களும் கிடைத்தன. மதிப்பிட்டாளரை கொண்டு அவற்றை மதிப்பீடு செய்த போது அவை பல கோடிகள் விலை போகக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து பொருட்களையும் உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்ட நிலையில், ஓவியங்கள் மட்டும் யாரும் உரிமை கோராமல் கிடந்தன.

போலீஸார் அவனை விசாரித்தபோது, அவை யாவும் தான் வரைந்த ஓவியங்கள் என்றும், தான் திருடனாவதற்கு முன்பு ஓவியக் கல்லூரியில் சிறிது காலம் படித்ததாகவும் எனவே ஓவியராக பணியாற்றியதாகவும் கூறினான். அந்த ஓவியங்களின் மதிப்பை அவன் கேட்டபோது அவனால் நம்ப முடியவில்லை.

விசாரணை முடிந்து அவனுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவன் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு தொலைக்காட்சிகள் மற்றும் செய்தியாளர்கள் அவனை பேட்டி காண திரண்டனர்.

அவர்கள் அவனிடம் “நீ இதுவரை கொள்ளையடித்ததிலேயே மிகப் பெரிய மனிதர் யார் என்று கருதுகிறாய்?” என்று கேட்டார்கள்.

சில நொடிகள் மௌனத்திற்கு பின் அவன் சொன்னான் : “என்னைத் தான்!” என்றான்.

ஆம்… அவன் சொல்வது உண்மைத் தான். தன்னிடம் உள்ள பொக்கிஷங்களின் மதிப்பை அறியாமல் அவன் வெளியே சென்று பொருளையும் புகழையும் தேடினான். அதற்காக தன் வாழ்க்கையையே அவன் பணயம் வைத்தான்.

ஒவ்வொருவரிடமும் இது போன்ற எண்ணற்ற பொக்கிஷங்கள் உள்ளன. அவற்றின் பேக்கேஜிங் தான் நபருக்கு நபர் வேறுபாடும். அபரிமிதமான தன்னம்பிக்கை உடையவர்களே அதை உணர முடியும். தங்களிடம் உள்ள பொக்கிஷங்களின் மதிப்பை உணராமல், வாழ்க்கையை, தங்களுக்குரிய அங்கீகாரத்தை வெளியே சென்று தேடுபவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வார்கள்.

தங்கள் திறமைகளை அறியாமல் அவற்றை மதிக்கத் தெரியாமல், தங்கள் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கத் தவறி, துடுப்பிழந்த படகு போல கண்மூடித்தனமாக செல்லும் அனைவரும் மிகப் பெரிய திருடர்கள் தான். ஆம், அவர்கள் எதிர்காலத்தை அவர்களிடமே அவர்கள் திருடுகிறார்கள். இவர்களை ஏமாற்ற வெளியே இருந்து யாரும் வரத்தேவையில்லை. அவர்களை அவர்களே ஏமாற்றிக்கொள்வார்கள்.

Leave a Reply