எதிர்மறை

ந்த ஊரில் தீபக் என்னும் ஒரு குறும்புக்கார சிறுவன் இருந்தான். சிறுவர்களுக்கே உரிய துறுதுறுப்பு அவனிடம் நிறையவே இருந்தது. எப்போது பார்த்தாலும் மரத்தில் ஏறி விளையாடுவதும் உயரமான கம்பங்களை பார்த்தால் அதில் ஏறுவதும், வீட்டு உத்திரத்தில் தலைகீழாக தொங்குவதும் என குறும்பு செய்வான்.

ஒரு முறை சுமார் 40 அடி உயரத்தில் இருந்த மரத்தின் கிளை ஒன்றில் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தான். அந்நேரம் பார்த்து மிக பலமாக காற்று வீசியது. மரமே அந்த பேய்க் காற்றில் ஆடியது கிளை மட்டும் ஆடாமல் இருக்குமா? ஏற்கனவே இவனது பாரம்… கூடவே காற்று… கிளை பலமாக ஆடியது. கிளை ஒடிந்துகீழே விழுந்துவிடும் என்றோ அல்லது நமக்கு அடிப்பட்டுவிடும் என்றோ அந்த குழந்தையின் புத்திக்கு எட்டவில்லை. சிறுவன் அவன் பாட்டுக்கு இன்னும் வேகமாக கிளையை பிடித்து ஆட்டியபடி இருந்தான்.

இதை அவன் தந்தை பார்த்துவிட்டார். ஒரு கணம் பதறிப்போனார். மகனின் இத்தகைய வானர சேட்டைகள் அவருக்கு பழகியவை தான் என்றாலும்… இத்தனை உயரமான மரத்தில் ஏறி, அதுவும் பலவீனமான ஒரு கிளையில் காற்று வேறு அடிக்கிறது… ‘இது ரொம்ப ஓவர்’ என்று தோன்றியது.

அவனுக்கு சுமார் பத்தடிகள் கீழே, அவன் பக்கத்துவீட்டு சிறுவன் சஞ்சய் என்பவன் வேறொரு கிளையில் தொங்கியபடி இருந்தான். தீபக்கின் அப்பா, தீபக் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்த அதே கணம், சஞ்சயின் அம்மாவும் சஞ்சய் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டாள். ஆபத்தை உணர்ந்துகொண்டாள்.

இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, மிக பலமான காற்று ஒன்று வீசியது. கிளைகள் ஆடத் துவங்கின. கீழே உள்ள சருகுகள் எல்லாம் பறப்பதையும் மரமே ஆடுவதையும் சிறுவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.

“தீபக் கிளையை கெட்டியா பிடிச்சுக்கோ” – கீழேயிருந்து தந்தை சொல்வது அவன் காதுகளில் விழுந்தது. கிளையை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.

அடுத்தநொடி, “வீல்” என்று மிக பெரிய அலறல் சத்தம் ஒன்று கேட்டது. இவனுக்கு பத்தடி கீழே வேறொரு கிளையில் தொங்கிக்கொண்டிருந்த சஞ்சய் கீழே விழுந்துவிட்டான்.

இவன் மெதுவாக மரத்திலிருந்து ஜாக்கிரதையாக கீழே இறங்கினான்.

மிக உயரத்தில் இருந்த இவன் கீழே விழாமல் தப்பித்துக்கொண்ட நிலையில், இவனுக்கு பல அடிகள் கீழே தொங்கிக்கொண்டிருந்த சஞ்சய் மட்டும் எப்படி கீழே விழுந்தான்?

அவன் தந்தை விளக்கினார் : காற்று பலமாக வீசியபோது சஞ்சயின் அம்மா, “சஞ்சய் கீழே விழுந்துடாதே” என்று கத்தினாள். சஞ்சய் கீழே விழுந்துவிட்டான். நான் “நீ கிளையை பலமாக பிடித்துக்கொள்” என்றேன். நீ தப்பித்துவிட்டாய்.”

மனித மூளைக்கு எதிர்மறையான விஷயங்களை கற்பனை செய்வது சற்று பிடிக்காத, ஸ்ட்ரெயின் எடுக்கக்கூடிய வேலை. 

சஞ்சய்க்கு அவன் தாய் கூறிய, “கீழே விழுந்துடாதே” என்னும் கட்டளையை ப்ராசஸ் செய்ய, அவன் எட்டு வயது மூளை, முதலில் கீழே விழுவது என்றால் என்ன என்பதை விசுவலைஸ் செய்யவேண்டும். பின்னர் ஆழ்மனதிற்கு தான் தற்போது விசுவலைஸ் செய்து பார்த்ததை ‘செய்யக்கூடாது’ என்று கட்டளையிடவேண்டும். ஆனால் இவ்வளவுக்கும் அந்த சூழ்நிலையில் அவகாசம் இல்லை. 

தீபக்கை பொருத்தவரை இந்த பிரச்சனை இல்லை. “கிளையை கெட்டியாக பிடித்துக்கொள்” என்ற கட்டளை மட்டுமே அவனுக்கு கிடைத்ததால், அவன் மூளை கிளையை பிடித்துக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தியது. எனவே அவன் தப்பிவிட்டான்.

இக்கட்டான நேரங்களில் முக்கிய கட்டளைகளை பிறப்பிக்கும்போது இதை மனதில் கொள்ளவேண்டும்.

இதே கான்செப்ட் நமக்குள்ள தீய பழக்கங்களில் இருந்து நாம் விடுபடுவதற்கும், இலக்குகளை நிர்ணயிப்பதற்கும் கூட பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் விரும்பாத ஒன்றை செய்யாத ஒன்றை நம் மூளையால் VISUALIZE செய்ய முடியாது. செய்யவும் கூடாது.

Leave a Reply