உயிர்வலி

எஸ்.பி இன்போசிட்டி. டைடல் பார்க் மாதிரி பிரசித்திபெற்ற ஒரு ஐ.டி பார்க்.
“ஓல்டு மகாபலிபுரம் ரோடுல இருக்கற எஸ்.ஆர்.பி டூல்ஸ்ல இருந்து எஸ்.பி இஃன்போ சிட்டிக்குப் போக காசு இல்ல.
மொபைல்ல சார்ஜ் 16% தான் இருக்கு. 
அபி என்னப் பிரிஞ்சி போயிட்டா.
எங்களுக்குள்ள பெரிய தகராறோ பிரச்சனயோல்லாம் இல்ல. அவ அப்பா இறந்து போயிட்டார். இந்த சமயத்துல நம்ம லவ்-வ வீட்டுல சொன்னா “நீ எல்லாம் ஒரு பொண்ணா டி”-ன்னு அவங்க அம்மா கேப்பாங்களாம். வாஸ்த்தவம்தான்.
ஆனா நான் எதும் தப்பு செய்யலையே. 
என் காதல அடகு வெக்கிற அளவுக்கு எனக்குப் பெருந்தன்மை இல்லையே.
இந்த ஒரு பிறப்புல எனக்கு முதல் வெற்றின்னு நான் நெனைச்சது அவ எனக்கு கிடைச்சது மட்டும் தான். இந்த ஜென்மத்துக்கு இந்த ஒரு வெற்றி போதும்கற அளவுக்கு திருப்தியான வெற்றி.
அப்பா இறந்த உடனே எல்லா சொந்தக்காரங்களும் அவள உடனே கரையேத்திடணும்னு துடிக்கிறாங்களாம்.
நாட்டுல பெரும்பாலான சொந்தக்காரங்களுக்கு தன் வீட்ட விட தன்னோட உறவினர் வீட்டு விஷயங்களுக்கு தவறா வழி நடத்துறதுல ஒரு அலாதி சுகம். ஒரு தனி மனிதன் நிறம், ஜாதி , மதத்த பாக்காம தன் பொண்ண கல்யாணம் பண்ணிக் குடுக்க நெனைச்சாலும் தன்னோட சொந்த பந்தம் இவன மதிக்க மாட்டான்-ங்கற ஒரே காரணத்துக்காக தன் சொந்தப் பொண்ணோட வாழ்க்கைய பணயம் வெச்ச பெற்றோர்கள் இங்க ரொம்ப பேர் இருக்காங்க. 
ஏன் பொண்ணுன்னு சொல்றேன்னா….. அது உங்களுக்கே தெரியும். 

ஒரு குடும்பத்தோட மானம் , மரியாதை, கெளரவம் , புண்ணாக்கு எல்லாமே பொண்ணுக்குள்ளதான் மறைமுகமா இருக்குன்னு ஒரு நெனப்பு.
இப்போ அபி குடும்பத்தோட இந்த நெனப்புக்கெல்லாம் ‘இரை’ யாருன்னா…. அது நான்தான்.
காலையிலேர்ந்து எதுமே சாப்புடல. எதுமே சாப்பிட முடியல.

அவகிட்ட ஒரு தடவ வந்து பாத்துக்கறேன்னு கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கி அவளப் பாக்க போயிட்டிருக்கேன்.
செத்துப்போயிறலாம் போலதான் இருக்கு. 
ஆனா தைரியம் இல்ல.
 “உன்னோட தைரியம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு”-ன்னு காதலிக்க ஆரம்பிச்ச அதே காதலிதான் 

“உனக்கு தைரியம் அதிகம். நான் இல்லன்னா கூட நீ உன் வாழ்க்கைய பாத்துப்ப”-ன்னு சொல்றா.
ஒரு பொண்ணு ஒரு பையன தேர்ந்தெடுக்கறப்போ அவங்களுக்கு பெரிய திட்டம் எல்லாம் இருக்காதோ என்னவோ. ஆனா ஒரு பையன் இவ தான்னு முடிவு செஞ்சிட்டா அந்தப் பொண்ணோட அவன் அவனோட எதிர்காலத்தையே தீர்மானிக்கிறான். 
எங்க வேலைக்கு போகணும் , எங்க செட்டில் ஆகணும் , என்ன மாதிரி வீடு வாங்கணும் ,எப்போ கார் வாங்கணும்,  எங்க எல்லாம் கூட்டிட்டு போகணும் , என்ன கொழந்த பெத்துக்கணும், அவங்கள எங்க படிக்க வைக்கணும் , அவங்களுக்கு எப்டி கல்யாணம் பண்ணனும் ,தன்னோட மனைவி குழந்தைகளுக்கு என்னவெல்லாம் சேத்து வைக்கணும், தன்னோட கடைசி நாட்கள் தன் காதலியோட எப்படி செலவு செய்யணும்ங்கறது வரைக்கும்.
வேர்த்துக் கொட்டுது. வேர்வை கூட உயிரும் சேர்ந்து உருகி வெளில வர்றது போலே வலிக்குது. ஒருவழியா வந்து சேந்தேன்.
இடம் : எஸ். பி. இஃன்போ சிட்டி.
வாட்சப் பண்ணினேன்.
“ABI…. WAITING OUTSIDE. AS PROMISED I LL NEVER DISTURB YU NEMORE. IDHAAN LAST TIME NAAN UNNA PAAKA VARADHU. PLS COME OUT”
“HOPE IT’S A PROMISE ON ME. STICK ON WITH THAT. WILL BE THERE IN 5 MINS”
ஒரு மூன்று இலக்க ட்ராப்பிக் சிக்னல்ல நின்னதுக்குப் பின்னாடி கிரீன் சிக்னல் போட்டா எப்படி தெறித்துக்கொண்டு மக்கள் வெள்ளம் சடார் சடாரென வாகனங்களை ஓட்டிச் செல்லுமோ அப்படிதான் மக்கள் இங்கே அவசர அவசரமா ஓடிட்டு இருக்காங்க.   
எனக்கு மட்டும் வாழ்க்கை அப்டியே நிக்கிது.
கை கால்களெல்லாம் சோர்ந்து போயிருக்கு. மனசுல வேகமா இதயத்துடிப்பு கேக்குது. கை நடுங்குது. என்னையும் அறியாம பழைய நினைவுகள எல்லாம் அசைபோட்டுபோட்டு உளர்றேன். அவ இல்லாம போயிடுவாளோன்னு பயம்மா இருக்கு. 
ஒரு பெரிய M – ராட்டினத்தில சுத்தறப்போ மேல இருந்து கீழ சர்ர்ர்ர்ர்ன்னு வரப்போ ஒரு உணர்ச்சி வருமே அப்படி இருக்கு எனக்கு.அதே உணர்ச்சி பயத்தோட இருக்கு.
என்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டா “நீ என்னைக்கும் என் மனசுலதான் இருக்கப் போற. ஆனா அப்பா இல்லாத இந்த நேரத்துல, நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு போயி நின்னா என் குடும்பம் முழுக்க என்னைக் கேவலமா சாபம் விடுவாங்க. காறி துப்புவாங்க. நீயாவது என்ன மன்னிச்சிருவ. அவங்க என்ன மன்னிக்கக் கூட மாட்டாங்க.”ன்னு.

உண்மைதான். நான் சாபமெல்லாம் விடமாட்டேன். ஆனா அவளையும் விட முடியல.
இதே சென்னைல உன்ன இன்னொருத்தன்கூட கல்யாணம் பண்ணிப் பாக்க என்னால நெனச்சுகூட பாக்க முடியல.
இந்த ஐ.டி பார்க் வாசல்-ல பேங்க் லோன்க்காக நோட்டிஸ் குடுக்கறவன், தரமணி பஸ் ஸ்டாண்டுக்கும் , ரயில்வே ஸ்டேஷன்னுக்கும் ஆட்டோ ஓட்டுறவன், தன் மனைவிய அழைச்சுட்டு போக வந்தவன், பைக் பார்க்கிங்ல தம் அடிக்கிறவன், மசாலா சுண்டல் விக்கிறவன், வாசல்ல என்ட்ரி பாயிண்ட்ல நிக்கிற செக்யூரிட்டி எல்லாருமே என்னை மட்டுமே பாக்கிற மாதிரி ஒரு நெனப்பு எனக்கு.
சார்ஜ் 11% தான் இருக்கு.
வந்தா. 
என்னால எதும் பேச முடியல. அழுகை மட்டுமே என் மொழியா மாறி அப்டியே நிக்குறேன்.
ஒரு ஆண் திரும்பத் திரும்ப அழுதான்னா, அவன் மேல பரிதாபம் வராது. கோபம்தான் வரும்.
அவ வீட்டுலயும் ஒரு துக்கம் நடந்திருக்கு. என்னைவிட  அதிகமாவே அவங்களும் அழுதிருப்பாங்க. 
அவ முகத்துலயோ , உடல் மொழிலயோ எந்த ஆர்ப்பாட்டமும் இல்ல. 

அதிகமா அழுது முடிச்சுட்டா ‘அட போங்கடா….’ன்னு ஒரு அவநம்பிக்கை வருமே அது மாதிரி.
அபி அபிமாதிரி நடந்துக்கல. இப்போ நடந்துக்கறது அப்டிதான் இருக்கு. எனக்கு நல்லாவே தெரியுது அவ மனசளவில பிரிஞ்சிட்டா. ஏதோ நான் கேட்டதுக்காக இங்க வந்து நிக்கிறான்னு . இது எல்லாருக்குமே நடக்கும். ஒருத்தவங்ககூட நெருக்கமாகுறதையும் பிரியறதையும் அவங்க நடத்தையிலேயே புரிஞ்சுக்க முடியும். என்கிட்ட இருக்க மாதிரி அவளுக்கு ஒரு உணர்வு இல்ல. என் கண்ணப் பாத்துப் பேசல. ஒரு நாளைக்கு பத்து தடவயாச்சும் எதாச்சும் சாப்பிட்டியா, குடிச்சியான்னு கேக்கறவ இன்னைக்கு எதுமே கேக்கல. 

ஒரு மனசு சொல்லுது , “எதாச்சும் பண்ணி என்கிட்ட வந்துடேன் அபி”-ன்னு”
இன்னொரு மனசு சொல்லுது , “அவ எடத்துல இருந்து யோசிச்சிப் பார். உன் அப்பா இறந்து உனக்கு இப்படி ஒரு நிலைமையா இருந்தா நீ உன் காதலனுக்காக அவன் கைய பிடிப்பியா. இல்ல அப்பனப் பிரிஞ்சி தவிக்கிற குடும்பத்துக்கு நேர்மையா நடந்துக்குவியா”ன்னு
ஒரு மனசு சொல்லுது “ அவ கால்ல விழுந்தாச்சும் அவள ஒத்துக்க வை”ன்னு

இன்னொரு மனசு சொல்லுது “நீ கால்ல விழுந்து கல்யாணம் பண்ணினாலும் சரியான சமயத்துல நீ அனுசரிக்காத உன்னை அவ பழைய மாதிரி காதலிக்க மாட்டா”ன்னு
ஒரு மனசு சொல்லுது “ லவ் யூ அபி”ன்னு

இன்னொரு மனசு சொல்லுது “என்னை எப்பயும் வெறுத்துடாத அபி”ன்னு.
ரெண்டு பேரும் மழைக்காக ஒடஞ்சி போன ஒரு பேருந்து நிறுத்தத்துல ஒதுங்கி நிக்கிற யாரோ மாதிரி பக்கத்து பக்கத்துல உக்காந்திருக்கோம்.
வாழ்க்கை ஒரு வெங்காயம்-ங்கறதுதான் தோல்வி அடையுற பெரும்பாலானவங்களோட புரிதல். 
வெங்காயம் அழுகை வர வைக்காம இருக்குமா ? லேக்ரிமிக் ஆசிட் என சொல்லப்படும் கண்ணீர் தேங்கி என் கண்ல நிக்குது.  
அழுகை தொண்டைய அடைக்குது. 

ஒரு முறை அவ முகத்தப் பாத்தேன். 

ரொம்ப அழுதிருக்கா. 

எப்பயும் மை கோலமிட்டு சுண்டி இழுக்கும் காந்தக் கண்களில் கருமையான சோகமொன்று அப்பியிருக்கு. 

ஆனா அப்பயும் அழகா இருக்கா.
என்ன நெனைச்சேன்ன்னு தெரியல.

என் உதட்டுல லேசான ஒரு புன்னகை. இங்க இப்படி உக்காந்திருந்தேன்னா அவ அழகுக்கு நான் திரும்பத்திரும்ப விழுந்துட்டே இருப்பேன். கண்ணீர் நிரம்பிஎன் கன்னத்துல வழிஞ்சுது.
நான் தோத்துப் போயிட்டேன்னு ஒரு மனசு சொல்லுது.

இதெல்லாம் ஒரு தோல்வியான்னு இன்னொரு மனசு சொல்லுது.
கடைசி வரைக்கும் ரெண்டு பேருமே ஒரு வார்த்தை கூட பேசல.

எழுந்து கிளம்பிட்டேன்.
இப்போது வேண்டியதெல்லாம் அவ கொடுத்த தனிமையிலிருந்து மீண்டு ரசிக்கிற மாதிரி ஒரு தனிமை , அம்மாவோட மடி,அப்பாவோட தோள், கடற்கரைக் காத்து , இயற்கையின் நிசப்தம் , தற்காலிகத் தோல்விதான்  என நம்புற இதயம் ,கொஞ்சம் மழைச் சாரல், கொஞ்சம் இசை, கொஞ்சம் தேநீர், கொஞ்சம் மது, கொஞ்சம் சிநேகம் ,குழந்தையோட சிரிப்பு,  நிறைய தூக்கம் , நிறைய வைராக்கியம் , நிறைய காதல், நிறைய தன்னம்பிக்கை. 
நிறைய அபி. நிறைய நியாபகங்கள்.
அணுஅணுவாய் அவள் என் உடல் முழுதும் நிரம்பிக் கிடக்கும் ஒவ்வொரு நாளும்.. நிமிடமும்.. நொடியும்.. க்ஷணமும்.. நானும் வாழ்வேன் , என் காதலும் வாழும். 
இந்த நம்பிக்கையில் தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் “

என்று என் அறைத்தோழனான குறும்பட இயக்குனர், அவன் எழுதி ,இயக்கவிருக்கும் படத்தின் ஒரு பாகத்தைச் சொல்லி முடித்தான் . நாங்கள் அடுத்த லார்ஜுக்கு ஆயத்தம் ஆனோம். 
முழு கதையை படிக்க 
http://www.flipkart.com/vikatakavi/p/itmegy5safp7pudh?pid=9789810968366
www.manobharathi.com | www.facebook.com/menyo89 | ezhuthupizhai.com | www.twitter.com/ezhuthupizhai

Leave a Reply