இளகிய மனம்

சென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு அரசு கெஸ்ட் ஹவுஸ் அருகில், என் நண்பருக்காக நின்று கொண்டிருந்தேன். என் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில், இரண்டு டிரைவர்கள் இருந்தனர். ஆட்டோவில், 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் அமர்ந்திருந்தார்.
ஆட்டோ ஓட்டி வந்தவர் என்னிடம் வந்து, “சார் உங்களுக்கு இங்கிலீஷ் தெரியுமா?’ என்றான். “தெரியும்’ என்றேன்.

“அவர்கிட்ட கொஞ்சம் பேசுங்க சார். ஆயிரம் டாலர் மாற்ற வேண்டும் என்று சொன்னார். பர்மா பஜார் அழைத்து சென்றோம். அங்கே ஆயிரம் டாலரை வாங்கிக் கொண்டு ஓடி விட்டனர். இப்போது அவரது கையில் பணமில்லை. எங்களுக்கு ஆட்டோ சார்ஜே, 700 ரூபாய் ஆகிவிட்டது…’ என்று கூறினர்.

நான் அந்த நபரிடம் ஆங்கிலத்தில் பேசினேன். “இன்று மாலை, 4.00 மணி பிளைட்டில் சிங்கப்பூர் போக வேண்டும். பல்லாவரத்தில் மனைவியும், குழந்தையும் காத்திருக்கின்றனர்.

காலையிலிருந்து சாப்பிடவில்லை. இவர்களுக்கு ஆட்டோ சார்ஜ் கொடுக்கவும் பணம் இல்லை. தற்சமயம் என்னிடம் இருப்பது இந்த ரோலக்ஸ் வாட்சும், சோனி ஹான்டிகாம் கேமராவும்தான்…’ என்று கூறி, இரண்டுக்கும், பில்லும், அதற்கு டூட்டி கட்டிய ரசீதும் காட்டினார். மொத்தம் 38,000 ரூபாய். “இதை வைத்துக் கொண்டு, 15,000 கொடுங்கள். நான் ஊர் போய் சேர வேண்டும்…’ என்றார்.

“என்னிடம் பணம் இல்லை. அதனால், எனக்கு வேண்டாம். ஏதாவது கடையில் கொடுங்கள், பணம் கிடைக்கும்…’ என்றேன்.

இதற்குள் என் நண்பர் வந்து விட்டார். இந்த கதையை கேட்ட அவர், “ஐயோ நம் ஊருக்கு வந்து கஷ்டப்படுகின்றனரே… அந்த, 4.00 மணி பிளைட் பிடிக்க வேண்டுமே என்ற கவலையில் உதவ முன் வந்தார். அருகிலிருந்த வங்கிக்கு அழைத்துச் சென்று, 15,000 ரூபாய் எடுத்து கொடுத்து, மேலும், அவர் கேட்காமலே, 1,000 ரூபாயும் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

அதன்பின், அவரிடம் வாங்கிய ரோலக்ஸ் வாட்ச், சோனி கேமரா இரண்டையும், அவரது நண்பர் கடைக்கு எடுத்து சென்றோம், அதன் மதிப்பறிய. அவர் ரோலக்ஸ் வாட்ச், 1,500 ரூபாய் என்றும், கேமரா, 2,500 ரூபாய் என்றும் கூறினார். இரண்டுமே டூப்ளிகேட்; சைனா மேக் என்றார்.

அதிர்ச்சியில் பேசவே முடியவில்லை. மொத்தத்தில் நண்பருக்கு, 12,000 ரூபாய் நஷ்டம். “இந்த வயதில் பாடம் கற்றுக் கொண்டதற்கு எனக்கு செலவு, 12,000 ரூபாய்…’ என்றார் மனம் தளர்ந்தவராக.

இப்படிப்பட்டவர்கள், இது போன்ற டூப்ளிகேட் பொருட்களுடனும், டூப்ளிகேட் ரசீதுடனும் சுற்றிக் கொண்டுதான் இருப்பர். இளகிய மனம் படைத்தவர்கள் ஏமாந்து விடாமல் இருக்க, எங்கள் அனுபவம் உதவும் என்று நம்புகிறேன்.

Leave a Reply