இது எனது இல்லை

நாட்டை பரிபாலனம் செய்வதில் அந்த மன்னன் சிறந்து விளங்கினான். மக்கள் மெச்சும் ஆட்சியை தந்துகொண்டிருந்தான். இருந்தாலும் அவன் மனதில் சற்றும் நிம்மதி இல்லை. எவ்வளவோ ஆராய்ச்சி செய்தும், தன்னை சுயபரிசோதனை செய்தும் அது ஏன் என்று அவனுக்கு புரியவில்லை.

தனது ஆளுகைக்கு உட்பட்ட காட்டில் ஒரு மிகப் பெரிய துறவி வந்து குடில் அமைத்து தங்கியிருப்பதை ஒற்றர்கள் மூலம் தெரிந்துகொள்கிறான். அவரை பற்றியும் அவரது அருங்குணங்கள் பற்றியும் அவன் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறான். எதன் மீதும் பற்றற்ற உண்மையான துறவி அவர். அவரை சந்தித்து தனது மனக்குழப்பங்களுக்கான விடையை தெரிந்துகொள்ளலாம் என்று முடிவு செய்து அவரை சந்திக்க காட்டுக்கு புறப்பட்டான்.

மன்னனை அன்புடன் வரவேற்ற துறவி, “அரச காரியங்கள் செவ்வனே நடக்கின்றனவா?  மக்கள் துயரின்றி இருக்கிறார்களா ?” என்று கேட்டார்.

“ஆமாம் சுவாமி. என்னால் இயன்ற அளவு நல்லாட்சி வழங்கி வருகிறேன்!”

”அப்படியானல் உனக்கு என்ன குறை?”

“என் மனதில் சிறிதும் அமைதி இல்லை! அதற்கான காரணமும் புரியவில்லை!” என்றான் மன்னன் ஏக்கத்துடன்.

சிறிது யோசித்த பிறகு குரூ , ”அப்படியானால் ஒன்று  செய், உன் நாட்டை எனக்குக் கொடுத்து விடு”  என்றார்.

அவரை பற்றி நன்கு அறிந்தவன் ஆதலால் ஆச்சிரியப்பட்ட மன்னன், “நான் செய்த பாக்கியம். எடுத்துக்கொள்ளுங்கள் சுவாமி இப்போதே!!” என்றான்.

சொன்னதோடு தன்னுடன் வந்திருந்த மந்திரியிடம் துறவியிடம் தான் நாட்டை கொடுத்துவிட்டதாக பட்டயம் எழுதி தந்தான். கையோடு தனது மணிமுடியையும் கழற்றி வைத்தான்.

“சரி, நாட்டை எனக்கு கொடுத்து விட்டாய், நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார் குரு.

மன்னன் சற்றும் தயக்கமின்றி , ”என் வழி செலவுக்குச் சிறிது பொருள் எடுத்துக்கொண்டு எங்காவது செல்வேன்” என்றான்.

நாட்டையே எனக்கு தந்த பிறகு கஜானா மற்றும் அரண்மனையில் உள்ள பொருட்கள் அனைத்தும் என்னுடையது தானே? அதில் பொருள் எடுக்க உனக்கு எது உரிமை?” என்று மன்னனை மடக்கினார் குரு.

திகைத்த மன்னன், “தாங்கள் சொல்வது சரி தான்,  நான் இப்படியே போகிறேன்!” என்றான்.

“எங்கு போவாய்?”

எங்காவது போய் எனக்கு தெரிந்த வேலை ஏதாவது செய்து பிழைத்துக்கொள்வேன்”

“ஏன்.. அந்த வேலையை இங்கேயே நீ செய்யலாமே?” என்ற குரு, 

என்  பிரதிநிதியாக இந்த நாட்டை நீயே ஆண்டு வா, உன் செலவுக்கு அரண்மனை பொக்கிஷத்தில் இருந்து நியாயம் என்று உன் மனதுக்கு படும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊதியம் பெற்றுக்கொள். எனக்கு எப்போது வசதிப்படுமோ அப்போது நான் வந்து பார்த்துக் கொள்கிறேன்”‘ என்றார்

”சரி!” என்ற படி நாடு திரும்பினான் மன்னன். துறவியிடம் சொன்னபடி மன்னன் ஆட்சி புரிந்துவந்தான். ஆண்டுகள் சில உருண்டோடின.

திடீரென ஒரு நாள் துறவி அரண்மனைக்கு வந்தார். மன்னன் குருவை பணிந்து வரவேற்றான்.

“என்ன மன்னா, எப்படி இருக்கிறது நாடு?”

ஆகா! நான் என்ன சொல்வது குருவே… மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். கணக்கு வழக்குகள்  எல்லாம் சரியாக இருக்கின்றன,  நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள்!” எழுந்திருந்தான் மன்னன்.

கணக்குகளை கொண்டு வர எழுந்த மன்னனைக் கையமர்த்தி தடுத்தார் குரு.

கணக்குகள் கிடக்கட்டும். உன் மன நிலை  எப்படி இருக்கிறது?

“நிம்மதியாய் இருக்கிறது” என்றான் மன்னன்.

“ஏன்?”

மன்னனுக்குப் புரியவில்லை.

“இதற்கு முன் நீ செய்த ஆட்சி முறைக்கும் இந்த இரண்டு ஆண்டு கால ஆட்சிக்கும் எதாவது வித்தியாசம் இருக்கிறதா?”  குரு நிதானமாய் கேட்டார்.

“இல்லை என்றான்”” மன்னன் திகைப்புடன்.

முதலில் என்னை நாடி வந்தபோதும் இதை தான் செய்து கொண்டிருந்தாய்… இப்போதும் அதைத் தான் செய்கிறாய்… அதே அரண்மனை, அதே அதிகாரிகள், அதே சிம்மாசனம், அப்போது இல்லாத நிம்மதி இப்போது மட்டும் உனக்கு எப்படி வந்தது?””

மன்னன் விழித்தான்.  குரு விளக்கினார்.

“அப்போது இந்த அரசும் ஆட்சியையும் உனது என நீ இருந்தாய்.  இப்போது இது வேறொருவருடையது; நாம் வெறும் பிரதிநிதி என்ற உணர்வுடன் இருக்கிறாய். 

 “இது எனது” என்று நீ எண்ணிய வரையில் உன் மனம் நிம்மதியற்றுத் திண்டாடியது.  “இது எனது இல்லை” என்ற உணர்வு ஏற்பட்டதுமே மனதின் துயரங்கள் விலகி விட்டன.

”உண்மையில் இந்த உலகம் நமதல்ல.  படைத்தவன் யாரோ !  இந்த உடல் நமதல்ல.  அளித்தவன் யாரோ!  ஆகவே “இது எனதல்ல “” என்ற நினைப்புடன்  ஆட்சி புரிந்து வா,  அந்தப் பற்றற்ற மனநிலை உனக்கு வந்து விட்டால் அரண்மனையோ, கானகமோ, காவலரோ, கள்வரோ, எங்கு எவர் நடுவில் இருந்தாலும் உன் மனதை துயரங்கள் அணுகாது” என்று கூறி விடை பெற்றார் குரு.

==============================================================

ஏகப்பட்ட பொறுப்புக்களை சுமந்துகொண்டு, அவற்றை சிறப்பாக செய்தும் அமைதி இல்லாமல் தவிப்பவர்கள், மேற்படி மன்னனின் ஃபார்முலாவை பின்பற்றலாமே…!

நமக்கு இப்படி ஒரு உடலையும், வாழ்க்கையையும், அறிவையும், ஆற்றலையும் இறைவன் தந்திருப்பது மகத்தான காரியங்களை சாதிக்க. நாம் அவனுடைய பிரதிநிதி. “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று அனைத்தையும் அவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு நாம் நமது பயணத்தை தொடர்வோம்.

அவன் மீது பாரத்தை போட்டு, அவன் விருப்படியான ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்து வந்தால் அவன் நம்மை பார்த்துகொள்ளமாட்டானா என்ன?

அமைதியும் இன்பமும் நம்மிடம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் – நாம் விட்டொழிக்க வேண்டியவை ‘நான், எனது’ என்ற இரண்டுதான் அது. இந்த இரண்டு பற்றுக்களைத் துறந்தவர்கள் எந்த காலத்திலும் துன்பம் அடையமாட்டார்கள். தேவர்களுக்கும் எட்டாத உயர் நிலையை அடைவார்கள் என்பது வள்ளுவர் வாக்கு.

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் (குறள் -346)

பற்றுகளை விடுவது தொடர்பான இன்னொரு திருக்குறளையும் இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறோம்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.  (குறள் 341)

ஒருவன் எந்தப்பொருளின் மீது ஆசையை நீக்கினானோ அவன் அந்தப் பொருளால் துன்பம் அடைய மாட்டான்.

மேற்படி திருக்குறளில் உள்ள விசேஷம் என்ன தெரியுமா? இந்த குறளை உச்சரித்து பாருங்கள். உதடுகள் ஒட்டாது.

எவ்வளவு அற்புதமாக திருவள்ளுவர் சிந்தித்து குறளை இயற்றியிருக்கிறார் பாருங்கள்.

திருக்குறள் ஒரு சமுத்திரம். திருக்குறள் உணர்த்தும் நேர்பொருளை மட்டுமே நாம் பார்த்து வருகிறோம். அது உணர்த்தும் மறைபொருள், அதிசயத்துக்குள் புதைந்துள்ள இரகசியம் போன்றது.

Leave a Reply