அவசர நிலை

​அந்தோணி பர்ஜஸ். எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை கடந்துகொண்டிருந்த ஒரு சராசரி நடுத்த வர்க்கத்து மனிதர். அவருக்கு அன்பு மிக்க மனைவி. பிரிட்டிஷ் இராணுவத்தினரின் இசைக்குழுவில் இசை இயக்குனராக அவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். சந்தோஷமாக போய்கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு பேரிடி விழுந்தது. அவருக்கு திடீரெனெ விசித்திர காய்ச்சல் ஒன்று வந்தது. மருத்துவமனையில் பரிசோதித்ததில் அவருக்கு மூளையில் ஒரு சிறிய புற்றுநோய்க் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் அதிகபட்சம் இன்னும் ஒரு ஆண்டு தான் உயிர் வாழ முடியும் என்று டாக்டர்கள் நாள் குறித்துவிட்டனர்.

தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்க்காத ஜான் அந்தோணி முற்றிலும் நிலை குலைந்துவிட்டார். விரைவில் விதவையாகப் போடும் தனது மனைவிக்கென்று இதுவரை எதையுமே தான் சேர்த்து வைக்காதது அவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

இராணுவத்தினருக்காக இதற்கு முன்பு ஒரு சில நாடகங்களை அரங்கேற்றியிருந்தாலும் அவருக்கு எழுத்து திறமை ஒன்றும் பெரிதாக வெளியே காண்பிக்கப்படவில்லை. ஆனால், தனக்கு உள்ளே ஒரு மிகப் பெரிய நாவலாசிரியர் ஒருவர் உறங்குவது அவருக்கு தெரியும். எனவே தன் மனைவிக்கு எக்கச்சக்கமாக ராயல்டியை விட்டுச் செல்லவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் ஒரு நாள் டைப்ரைட்டரில் அமர்ந்து தனது மனதில் இருந்த ஒரு கருவை கதையாக்கம் செய்யத் துவங்கினார். அதை தன்னால் பப்ளிஷ் செய்ய முடியுமா? சந்தையில் விற்க முடியுமா? என்றெல்லாம் அவருக்கு தெரியாது. அவர் அப்போது இருந்த நிலையில் வேறேதுவும் அவருக்கு தோன்றவில்லை. அவற்றுக்கு வழியும் இல்லை.

அது 1960 ஆம் ஆண்டு. மருத்துவ அறிக்கையின் படி, ஒரு குளிர்காலம், ஒரு வசந்த காலம் மற்றும் ஒரு கோடைக்காலம் இவை தான் அவரது வாழ்க்கையில் இன்னும் பாக்கியிருக்கிறது. அதாவது இன்னும் சில மாதங்களில் அவர் தன் பயணத்தை இந்த உலகிலிருந்து முடித்துக்கொள்வார். அடுத்த இலையுதிர் காலத்திற்குள் தன் உயிர் தன் உடலிலிருந்து இலை உதிர்வது போல உதிர்ந்துவிடும் என அவருக்கு தெரியும்.

ஆனால் அந்த ஒரு ஆண்டு இடைவெளிக்குள், ஜான் அந்தோணி கிட்டத்தட்ட 6 நாவல்களை எழுதி முடித்துவிட்டார். (வெற்றிகரமான மிகப் பெரிய நாவலாசிரியர்கள் சிலரின் வாழ்நாள் படைப்பே இவ்வளவு தான்!).

 

ஆச்சரியத்தக்க வகையில் ஒரு வருடம் கடந்த பின்னர் கூட ஜான் அந்தோணிக்கு எதுவும் ஆகவில்லை. அவர் இறக்கவில்லை. ஆம்…அவர் மூளையில் ஏற்பட்டிருந்த கட்டி தானாகவே கரைந்து இறுதியில் போயேபோய்விட்டது.

அதற்கு பிறகு வெற்றிகரமாக தனது நாவலாசிரியர் பணியை தொடர்ந்தவர் தனது வாழ்க்கையில் மொத்தம் 70 க்கும் மேலான BEST-SELLER நாவல்களை எழுதிக் குவித்தார். இவரது முழுப் பெயர் (ஜான் அந்தோணி பர்ஜஸ் வில்சன்.)

சற்று யோசித்து பாருங்கள்… அவருக்கு மூளையில் புற்றுநோய்க் கட்டி தோன்றி மருத்துவர்கள் அவருக்கு ஒரு வருட நாள் குறிக்கவில்லை என்றால் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பாரா?

கடும் சோதனைகள், துன்பங்கள் என்று நாம் கருதும் பெரும்பாலானவை உண்மையில் நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய வரங்களே!

நாம் அனைவரும் கிட்டத்தட்ட மேற்சொன்ன ஜான் அந்தோணி போலத் தான். உள்ளுக்குள் எண்ணற்ற திறமையை வைத்திருப்போம். ஆனால் வெளியே இருந்து ஏதேனும் ஒரு ‘அவசர நிலை’ அறிவிப்பு வந்தால் மட்டுமே அதை வெளிப்படுத்துவோம்.

ஜான் அந்தோணிக்கு ஏற்பட்டிருந்த நிலை உங்களுக்கும் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.

“இன்னும் ஒரு வருடம் தான் நீங்கள் உயிர் வாழ்வீர்கள் என்றால், அந்த வாழ்க்கை எந்தளவு தனித்துவத்துடன் வித்தியாசமாக இருக்கும்? நீங்கள் என்ன செய்வீர்கள்?” இந்த கேள்விக்கு ஆத்மார்த்தமான ஒரு பதிலை தயார் செய்யுங்களேன். ஒருவேளை உங்கள் மிகப் பெரிய வெற்றிப் பயணம் இதை படித்த பிறகு தொடங்கக்கூடும்.

வாழ்த்துக்கள்!!

Leave a Reply