அர்த்தமுள்ள அதிருப்தி

திருப்தியை விடச் சிறந்த செல்வம் இல்லை. அதிருப்தியை விடப் பெரிய வறுமையும் இல்லை. எத்தனை குறைவாகப் பெற்றிருந்தாலும் திருப்தியுடன் வாழ்கின்ற செல்வந்தர்கள் உண்டு. ஏராளமாக வைத்திருந்தாலும் அதிருப்தி கொண்டு வாழ்கின்ற ஏழைகள் உண்டு.

ஆனால் திருப்தியும் அதிருப்தியும் சிலநேரங்களில் எதிர்மறையான பலன்களையும் ஏற்படுத்துகின்றன என்பது அனுபவ உண்மை. எந்த ஒரு மாற்றத்திற்கும் விதை அதிருப்தியே. சரியில்லாத சூழ்நிலைகளையும் ஏற்றுக் கொண்டு திருப்தியுடன் இருக்கும் போது மாற்றம் நிகழ்வதில்லை. அதில் அதிருப்தி ஏற்படும் போது தான், இதை அகற்ற அல்லது மேம்படுத்த என்ன செய்வது என்று மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கிறான். அதனால், எந்தவொரு மாற்றத்திற்கும் காரணமாக அதிருப்தி அமைகிறது.

ஆதிமனிதன் வெட்ட வெளியிலும் மரநிழலிலும் வாழ்வதிலேயே திருப்தியடைந்திருந்தால் குடிசைகள் தோன்றியிருக்காது. குடிசைகளிலேயே மனிதன் திருப்தி அடைந்திருந்தால், வசதியான வீடுகள் தோன்றியிருக்காது. இப்படி எல்லா விதங்களிலும் இன்றைய அனைத்து உயர்வான நிலைகளுக்கும் முந்தைய மனிதர்கள் அன்றைய நிலைகளில் கண்ட அதிருப்தியே பிள்ளையார் சுழியாக இருந்திருக்கிறது.

அதிருப்தியுடன் முணுமுணுப்பதிலும், புலம்புவதிலும் பலர் நின்று விட்டாலும், அதை மாற்ற என்ன செய்யலாம் என்று ஒரு படி அதிகம் எடுத்து வைத்த சிலருக்கு நாம் நிறையவே கடன்பட்டிருக்கிறோம். அந்த சிலருடைய அதிருப்தியே அர்த்தமுள்ளதாக இருந்திருக்கிறது. அதுவே இத்தனை முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

எல்லாப் புரட்சிகளுக்கும் விதையாக இருந்தது இந்த அர்த்தமுள்ள அதிருப்தியே. பலரும் விதி என்று ஒத்துக் கொண்டு அடங்கி ஒடுங்கி வாழ்ந்தாலும், அப்படி அடிமைப்பட்டு வாழ்வதில் அதிருப்தியடைந்து இந்தத் தளைகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்று சிலர் சிந்தித்து செயல்பட்டதால் மட்டுமே விடுதலையும், மறுமலர்ச்சியும் வரலாற்றுப் பக்கங்களில் சாத்தியமாகி இருக்கிறது.

ராஜபோக வாழ்க்கையில் சித்தார்த்தன் திருப்தியடைந்திருந்தால் ஒரு கௌதமபுத்தர் இந்த உலகிற்குக் கிடைத்திருக்க மாட்டார். போதுமான சம்பளத்துடன் இருந்த வேலையில் நாராயணமூர்த்தி திருப்தியடைந்திருந்தால் ஒரு இன்ஃபோசிஸ் நிறுவனம்பிறந்திருக்காது. தன் ஆரம்ப கால குணாதிசயங்களில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி திருப்தியடைந்திருந்தால், ஒரு மகாத்மாவைக் காணும் பாக்கியத்தை இந்த உலகம் இழந்திருக்கும்.

இப்படி அர்த்தமுள்ள அதிருப்தி தான் அழகான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. எனவே உங்களையும், உங்கள் வீட்டையும், சமூகத்தையும், நாட்டையும் புதிய பார்வையோடு பாருங்கள். இருப்பதெல்லாம் சரி தானா? காண்கின்ற காட்சி உங்களைப் பெருமிதம் கொள்ள வைக்கிறதா? இல்லையென்றால் அவற்றை மாற்ற வேண்டாமா?

முதலில் பாரதி சொன்னது போல்,

‘தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்திகொடும்
கூற்றுக்கு இரையென மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே’ –

வாழும் வாழ்க்கையில் நல்லவையல்லாதவைக்கு அதிருப்தி கொள்ளுங்கள்.
அது அர்த்தமில்லாத புலம்பலாக இருந்து விடாமல் அர்த்தமுள்ள அதிருப்தியாக உங்களை மாற்றக்கூடிய உந்துதலாக இருக்கட்டும். உங்கள் அதிருப்தி மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மாற ஆரம்பிப்பீர்கள். எல்லா மாற்றங்களும் இப்படி எங்கோ ஒரு இடத்தில்ஆரம்பித்தவை தானே

Leave a Reply