அம்மாச்சி-மனோ பாரதி

அம்மாச்சி

—————-
அந்த தாத்தாக்கு 70 வயசு கிராஸ் பண்ணிருக்கும். அந்த பாட்டிக்கு 60 இருக்கும். ஜெயந்தி தியேட்டர் ஸ்டாப்ல ஏறுனாங்க. 
அந்த தாத்தாவோட கண்ணு இதயமா துடிச்சது. எதா சீட் இருக்கானு அங்கயும் இங்கயும் தேடுனாரு. ஒருத்தர் அடையார் டிப்போ-ல எறங்குறதுக்கு சீட்ல இருந்து எழுந்தார். 
“யம்மா , கஸ்தூரி இங்க வாம்மா. இங்க வந்து உட்காரு”
அந்த சீட்-இல் உட்கார முயன்றவரிடம் 
“சார். என் மனைவி கஸ்தூரி…முடியாதவங்க. ராயபேட்டா ஆஸ்பத்ரிக்கு கூட்டிட்டு போறேன். கொஞ்சம் அவங்க உக்காரட்டுமா சார்”
அங்க உட்கார சென்றவர் “ சரி சார்”

பேருந்தின் முன் பகுதியில் நின்ற அனைவரும் இந்த தாத்தாவையே பார்க்கின்றனர்.
இவர் பதட்டப்படுவதை பார்த்த ஜன்னல் இருக்கையில் இருந்த இன்னொரு நபர் இங்க உக்காருங்க தாத்தா என அவர் சீட்டையும் தந்தார். 
“வேணாம் சார். என் மனைவிக்காக கேட்டேன். அவங்க முடியாதவங்க. நீங்க ஆபீஸ் போவிங்க பரவால உக்காருங்க”

அந்த பாட்டி ரம்மியமான அழகு. பெரிய நெற்றிப் பொட்டு. 30-35 வயது பிள்ளைகளுக்கு அம்மாவாக இருக்க வேண்டும்.
விஷயம் என்னவென்றால் எனக்கு என் அம்மாச்சி ஞாபகம் வந்துவிட்டது.
அம்மாச்சி. அம்மாவின் அம்மா.
எனக்கு அன்னை தெரசா என்றால் இவர் முகம் தான் என் கண் முன்னே வரும்.
குளித்து முடித்து வந்து அம்பர் வைத்து அதன் மேல் குங்குமம் வெப்பாங்க. கட்டைவிரல் நகக் கண் அளவு பெரிய பொட்டு இருக்கும் நெத்தில.
மஞ்சள் தேச்சு குளிச்சதுல முகம் தங்கமா மின்னும்.

காலைல சீக்ரமே எழுந்துப்பாங்க. முருங்கக்கா கத்ரிக்கா போட்டு புலி கொழம்பு வெச்சா அத அடிச்சுக்க உலகத்ல டிஷ்-ஏ இல்ல.
ரோடு-ல போறவங்க கூட மூணு வேல சாப்டு சந்தோஷமா இருக்கணும்னு நெனப்பாங்க.  
எப்போதும் சிரிச்ச மாதிரியே முகம். இவங்களுக்கு கோபம் வந்து நான் பாத்ததே இல்ல. 
சிறுசேமிப்பு னா இவங்க தான். ஒரு விக்கோ பல்பொடி டப்பா புல்லா அஞ்சு பத்துனு சுருட்டி சுருட்டி இருக்கும். அத மட்டும்  தொறந்தாலே 300 400 தேறிடும்.
ஆட்டு கல்-ல மாவு அரைச்சு இட்லி மாடு பண்ணுவாங்க. உரல்-ல இடிச்ச இட்லி பொடி.இவங்க வெக்குற சுடு தண்ணி கூட அந்த விறகு அடுப்புல காய்ச்சுனதுனால ஒரு தனி சுவை இருக்கும்.
ஓபன் பாத்ரூம்ல அடி பைப்-ல தண்ணி அடிச்சு குளிக்க வெப்பாங்க. அந்த தென்னமர காத்துக்கும் அந்த கிராம வாசனைக்கும் அய்யோ-னு இருக்கும்.
வீட்லயே கொப்பரைய காய வெச்சு தேங்கா எண்ணெய் பண்ணுவாங்க.
மதிய நேரம்லாம் ஓட்டை கூர மேல இருந்து ரவுண்டு ரௌண்டா வெயில் வீட்டுக்குள்ள விழும். 
அம்மா மாதிரி இல்லாம பிடிச்ச சாப்பாடு மட்டும்தான் சமைப்பாங்க.
அதுக்கு காய்கறி கூட பெரும்பாலும் வீட்டு தோட்டதுலயே கெடச்சிரும்.
மல்லி பூ பந்தல் , நாரத்தை, தென்னை, கொய்யா , அரை நெல்லி, கத்ரிக்கா, முருங்கை, தக்காளி, கருவேப்பிலைனு எல்லாமே தோட்டத்துல இருக்கும். 
ஒரு விஷயம் கூட வேஸ்ட் பண்ண மாட்டாங்க. பழைய பேப்பர் , பிளாஸ்டிக் பேப்பர்-லாம் போட்டு அண்ணகூடை , இட்லி பானை-லாம் வாங்கிடுவாங்க. பழைய டிரஸ் இருந்தா யாரயாச்சு வரசொல்லி அவங்கட்ட தந்துடுவாங்க. சாப்பாடு மிச்சமானா பழைய சாப்பாடு சாப்டுவாங்க.
காலாண்டு அறையாண்டுனு லீவ் வரப்பல்லாம் இவங்க வீடு தான்.
இங்க இருக்கிற சுதந்திரம் வேற எங்கயுமே இருந்ததில்ல. மண்ணுல ஏறி விலாடலாம். ஆத்துல குளிக்கலாம். தூண்டில் போடலாம். மாங்கா அடிக்கலாம், பொட்டி கடை சாமான்லாம் திண்ணலாம். ஒரு மனுஷனுக்கு குட்டி வயசு ஆசையெல்லாம் பாட்டி தாத்தா தான் நிறைவேத்தி வெப்பாங்க.
லீவ்-லாம் முடிஞ்சு ஊருக்கு கெளம்பறப்ப நெறைய காசு தருவாங்க. அம்மா அப்பாட்ட சொல்ல வேணாம். நீ உனக்கு புடிச்சத வாங்கி தின்னு-னு சொல்லுவாங்க. காசோட கொஞ்சம் வேப்பஇலை கொழுந்தும் தருவாங்க.
என்ன அய்யா அய்யா-னு தான் கூப்டுவாங்க.

இப்ப அவங்க இல்ல.
எங்க வீட்ல இருந்து கடைசியா இவங்கல வீட்ல போய் பாத்துட்டு வந்தவன் நான் தான்.
அம்மாவை விட ரொம்ப பிடிச்சவங்க எனக்கு.

ஏதோ இந்த பாட்டிய பாத்தோன என் அம்மாச்சி ஞாபகம் வந்துருச்சு.
இறந்தவங்க இங்க இல்லனா கூட யாரோ செய்ற ஒரு செய்கையோ அவங்க உடல் மொழியோ முக ஒற்றுமையோ அவங்க இந்த உலகத்ல தான் இன்னும் இருக்காங்கங்கற ஒரு எண்ணத்த நமக்கு குடுத்ருது. 
இனிமையான நினைவுகள்.

வலிமையான நினைவுகள்.
– மனோ பாரதி 

  30 – 07 – 2014

Leave a Reply