அன்புக்கு (மட்டுமே) அடிமை

ங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதாவது உங்களை காயப்படுத்தினாலோ அல்லது  உங்களிடம் கடுமையாக நடந்துகொண்டாலோ என்ன செய்வீர்கள்? சற்று யோசித்துப் பாருங்கள். இது நிச்சயம் அனைவருக்கும் நடக்கக்கூடியதே என்பதால், கடந்த காலங்களில் அப்படி ஏதேனும் நடந்திருந்தால் உங்கள் பதில் நடவடிக்கை என்னவாக இருந்தது?

என்கிட்டேயே இப்படி நடந்துகிட்டான்”.

என்னையே இப்படி பேசிட்டாங்க. என்ன செய்றேன் பாரு அவங்களை…””

நான் செஞ்ச உதவியெல்லாம் மறந்துட்டாங்க. சே..இந்த உலகத்துல யாருக்குமே நன்றியே கிடையாது….”

– நிச்சயம் பெரும்பாலானோர் ரீயாக்ஷன் இப்படித் தான் இருந்திருக்கும்.

மனிதர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். சூழ்நிலைகள் தான் அவர்களை அப்படி நடந்துகொள்ள வைக்கின்றன என்பதை புரிந்துகொண்டால்  நாம் ஒரு போதும் அன்புக்குரியவர்களை அற்ப காரணங்களுக்காக இழக்கமாட்டோம்.

ஏனெனில் கடந்த காலங்களில் நாம் அப்படி நிறைய பேரை இழந்திருக்கிறோம். ஒரு சின்ன புரிதல் & பொறுமை அந்த நேரத்தில் இருந்திருந்தால் போதும் பல உறவுகள் நீடித்திருக்கும்.

இந்த காலத்துல அடிச்சி, பிடிச்சி, எதையாவது பண்ணி பணம் கூட சம்பாதித்து விடலாம். ஆனால் நல்லவங்களை சம்பாதிக்கிறது அத்தனை சுலபம் இல்லை.
எனவே நட்பு மற்றும் உறவுகளில் ஒருபோதும் ஈகோவுக்கு இடம் தராதீர்கள்.

சுதோஷ் முகர்ஜி (ஆசு பாபு) என்பவர் வங்காளத்தில் சிறந்த சுதந்திர போராட்ட வீரர். அவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணிபுரிந்தபோது அவரிடம் அடிமைகளாக பலர் பணிபுரிந்தனர். ஆம்… அவர் அன்புக்கு அடிமைகளாக இருந்தனர் அனைவரும். அந்தளவு தனக்கு கீழுள்ள அனைவரையும் தனது அன்பால் கவர்ந்து வைத்திருந்தார் ஆசு பாபு.

ஒரு நாள் ஆசுபாபு அலுவலகத்தில் பணியில் இருந்தபோது அவருக்கு கீழ் உள்ள –  பரஸ்பரம் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருக்கும் ஊழியர் ஒருவர் – அவரிடம் வந்து எரிந்து விழுந்தார்.

ஆசுபாபு, “என்னிடமே இப்படி பேசுகிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்…?” என்றெல்லாம் கண்களை உருட்டி மிரட்டவில்லை. அமைதியாக அனுதாபத்துடன் அவரை உற்று நோக்கினார். ஊழியரின் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த துன்பம் தான் அவரை அப்படி பேசவைத்தது என்று புரிந்துகொண்டார்.

பிறகு சில மணிநேரம் கழித்து, அந்த ஊழியரின் வீட்டுக்கு அவருக்கு தெரியாமல் வேறொரு பணியாளரை அனுப்பினார். வீட்டில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று விசாரித்து வரச் சொன்னார். ஊழியரின் மகன் மிகவும் நோயுற்ற நிலையில், சிகிச்சை செலவுக்கு கூட அந்த குடும்பம் பணமின்றி கஷ்டப்படுவதை அறிந்துகொண்டார்.

உடனடியாக சிறந்த மருத்துவர் ஒருவரை அனுப்பி அவர் மகனுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அந்த ஊழியரிடம் தேவையான பணத்தை கொடுத்து அவரின் மனக்குமுறலை தீர்த்தார். அதுமட்டுமல்லாமல் அலுவலகத்தில் இருந்து சில நாட்கள் விடுமுறையும் வழங்கினார் அந்த கருணாளர்.

எந்த சூழ்நிலையிலும் அன்பு என்னும் ஆயுதத்தை விட சக்தி மிக்கது என்று ஏதேனும் இருக்கிறதா என்ன?

உங்களை சுற்றியிருப்பவர்களிடம் – நீங்கள் அன்பு செலுத்துவதாக கருதுபவர்களிடம் – எப்போதாவது இத்தகைய அணுகுமுறையை கையாண்டிருக்கிறீர்களா? எப்படி முடியும்? நம் மனதில் ‘ஈகோ’ என்கிற அரக்கனுக்கும் அல்லவா சரி சமமாய் தீனி போட்டு பலர் வளர்த்து வருகிறோம்?

நமது அன்புக்குரியவர்கள் எப்போதேனும் நம்மிடம் சற்று கடுமையாக நடந்துகொண்டாலோ அல்லது நம்மை காயப்படுத்தினாலோ நாம் பதில் நடவடிக்கையில் இறங்காமல், அவர்களுக்கு என்ன பிரச்சனையோ, நம்மால் ஏதேனும் உதவ முடியுமா என்று யோசிப்பது சாலச் சிறந்தது. நமது அன்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில். 

அன்புக்கு (மட்டுமே) அடிமையாக இருப்போம். மற்றவர்களையும் நம் அன்புக்கு அடிமையக்குவோம். 

பசுமைகுடில் வாசகர்கள் நிச்சயம் அப்படித் தான் இருப்பார்கள் என்று நம்புகிறோம். சரியா?

நன்றி − Right mindra

Leave a Reply