​குழந்தைகளுக்கு டெங்குகவனிக்கத் தவறும் விஷயங்கள்

       டெங்கு ஃபீவரை பொறுத்தவரை, எதிர்ப்புசக்தி குறைவாக இருக்கிற குழந்தைகளை, அதிலும் 10 வயதுக்குள்ளான குழந்தைகளையே அதிகம் அட்டாக் செய்வதாக குறிப்பிடுகிறார்கள் மருத்துவர்கள். அப்படியென்றால் இந்த காய்ச்சல் வராமல் இருக்கவும், மீறி வந்துவிட்டாலும் குழந்தைகளை அதிலிருந்து எப்படி  மீட்டெடுப்பது? தெரிந்து கொள்ளுங்கள்!

  குழந்தைகள் நல மருத்துவர் ஸ்ரீனிவாசன்
இந்த காய்ச்சல்ல சாதா டெங்கு, டெங்கு ஹெமரேஜிக்னு ரெண்டு வகை இருக்கு. முதல் வகை நாலு நாள் காய்ச்சல் அடிச்சிட்டு வந்த சுவடு தெரியாம திரும்பிப் போயிடும். மேக்ஸிமம் இது தான் குழந்தைகளை அட்டாக் பண்ணுது. இதைப் பத்தி நாம பயப்படவே தேவையில்லை. 

   ரெண்டாவது வகையான டெங்கு ஹெமரேஜிக்தான் சில நேரங்கள்ல உயிர் ஆபத்து வரைக்கும் கொண்டு போய் விட்டுடும். ஆனா, பேரண்ட்ஸ் கொஞ்சம் கவனனமா இருந்தாலே இந்த ஃபீவர்ல இருந்தும் குழந்தைகளை காப்பாத்திட முடியும்கிறதுதான் உண்மை. 

   ஒரு குழந்தைக்கு ரெண்டு நாள் காய்ச்சல் அடிச்சு சரியானதும், அந்த குழந்தை தொடர்ந்து தூங்கிக்கிட்டே இருக்கும். இதை பெற்றோர்கள், காய்ச்சல் அடிச்சு சரியானதுல குழந்தை சோர்ந்து போய் தூங்கிறதா நினைச்சுக்கிட்டு இருப்பாங்க. 

ஆனா, அந்தக் குழந்தை, ரெண்டாவது வகையான டெங்கு ஹெமரேஜிக்கால பாதிக்கப்பட்டு மயக்கத்துல இருக்கும். இந்த சமயத்துல உடனே தாமதிக்காம டெங்கு NS 1 ஆன்ட்டிஜென் டெஸ்ட், lgM,lgG ஆன்ட்டிபாடீஸ் டெஸ்ட் இரண்டையும் எடுக்கணும். இந்த ரெண்டு டெஸ்ட்டுமே விலை அதிகமானதுதான். ஆனா, வேற வழியில்லை. குழந்தைகளின் உயிர் எல்லாவற்றையும்விட உயர்ந்தது இல்லையா..?  

ஹெமரேஜிக்கின் அறிகுறிகள் என்னென்ன?

குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கும், கை_கால் வலிக்கும்,  நெறிக் கட்டும், உடம்பில் சிவப்புத் திட்டுக்கள் வரும், குழந்தை வேகவேகமாக மூச்சு விடும், வயிறு வலிக்கும், நாடித் துடிப்பு குறையும், மோஷனில் ரத்தம் வெளியேறும். 

உடலின் உள்ளே லிவர் பெரிசாகும், வயிற்றினுள்ளே ரத்தப்போக்கு ஏற்படும், ரத்தத்தை உறையச் செய்கிற பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை குறையும். 

என்ன தீர்வு? 

வராம தடுக்கிறதுதான் நல்ல தீர்வு. அதுக்கு, உங்க வீட்டைச் சுத்தி சுத்தமா, தண்ணி தேங்காம பார்த்துக்கோங்க. தண்ணீர் பாத்திரங்களை டெங்கு காய்ச்சலை பரப்புற கொசு முட்டையிடாதபடிக்கு மூடி வையுங்க. இது பகல்ல கடிக்கிற கொசுவால வர்ற காய்ச்சல்ங்கிறதால உங்க பிள்ளைங்க படிக்கிற ஸ்கூல் வளாகத்துல தண்ணி தேங்கி இருக்கான்னு கவனிச்சு, அதை சரி செய்யப் பாருங்க. 

மத்தபடி, முதல் வகை டெங்கு வந்தா டிரிப்ஸ் போட்டாலே போதும். டெங்கு ஹெமரேஜிக் வந்து, பிளேட்லெட்ஸ் 10,000க்கும் கீழே குறைஞ்சு போச்சுன்னா ரத்தம் ஏத்த வேண்டி வரும். நிலவேம்பு கஷாயமும் பப்பாளிச்சாறும் டெங்கு காய்ச்சலுக்கான இயற்கைத் தீர்வுகள். 

   குறிப்புகள்: டெங்குவுக்கான தடுப்பூசி இன்னமும் அன்டர் டெவலப்மென்ட்டில் தான் இருக்கு. மத்த காய்ச்சல்களுக்கு கொடுக்கிற ஆஸ்பிரின் மாத்திரையை டெங்கு காய்ச்சலுக்கு கொடுக்கக் கூடாது. 

குமுதம் சிநேகிதியில்…

Leave a Reply