டெங்கு எவ்வளவு கொடூரமானது.. உயிர் தப்பிய எழுத்தாளரின் அனுபவம்!

​எனக்கு டெங்கு வந்த போது என்ன நடந்தது? எந்தக் கருத்தையும் சொல்லாமல் நடந்ததை அப்படியே எழுதுகிறேன். துளிகூட பொய்யில்லை இதில்.

காய்ச்சல் கடுமையாக அடித்தது. எச்சில் துப்பும் போது சளியோடு சேர்த்து ரத்தம் வந்ததும் பயந்து விட்டேன். இந்திரா நகரில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாக ஓடினேன். ஞாயிற்றுக் கிழமையாதலால் பயிற்சி டாக்டர் ரத்தத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லி ஊசி போட்டார். அது என்னவென்று எனக்குத் தெரியாது.

வீட்டிற்கு வந்ததும் உடலில் சிவப்பு சிவப்பாய் ரத்தத் திட்டுகளாய் புள்ளிகள் தோன்றின. பயந்து போய் மறுபடியும் இந்திராநகரில் உள்ள இன்னொரு க்ளீனிக்கிற்கு ஓடினேன். அந்த மருத்துவர் எனக்கு டெங்கு வந்ததை உறுதிப்படுத்தினார். உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டும் என்பதால் மருத்துவமனையில் சேரச் சொன்னார்.

என்னுடைய நண்பர் தேனி நலம் ஹாஸ்பிட்டல் ராஜ்குமாரிடம் பேசினேன். பதற்றப்பட வேண்டாம் என்று சொல்லி கூகிள் செய்து பார்க்கச் சொன்னார். போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் போய்ச் சேரச் சொன்னார். மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்திற்கு முன்கூட்டியே தொடர்பு கொண்டேன்.

ப்ளேட்லெட்ஸ் என்கிற வார்த்தைக்கான அர்த்தத்தையும் அது செயல்படும் விதத்தையும் அது குறைவதனால் வரும் அபாயங்களையும் புகைப்படக் கலைஞரும் என் நண்பருமான மதுரை செந்தில்குமரன் எடுத்துச் சொன்னார். இந்த இருவரும் கடைசி வரை பாலோ அப் செய்தார்கள்.

எட்டாயிரத்திற்கும் கீழ் இறங்கியிருந்தது ப்ளேட்லெட்ஸ் எண்ணிக்கை. ராமச்சந்திராவில் எட்டு நாட்கள் ஐ.சி.யூவில் இருந்தேன். இரவில் தூக்கித் தூக்கிப் போடும். உடனடியாக ஊசி போட்டு அடக்குவார்கள். என் இடது புறம் அனுமதிக்கப்பட்டிருந்த பதினைந்து வயது சிறுவன் ஓர் இரவில் என் கண்ணெதிரிலேயே செத்துப் போனான். வலது புறம் இருந்த தாத்தா ஒருத்தர் அதற்கடுத்த இரண்டு நாளில் செத்தார்.

அவர் செத்த மூன்று மணி நேரம் கழித்துதான் அவரது குடும்பத்தினர் உள்ளே வந்தார்கள். நானும் செத்து விடுவேன் என உறுதியாக நம்பினேன். அங்குள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் என்னைத் தேற்றினார்கள். ஒரு வயதான செவிலியர் எனக்கு நிதமும் நெற்றியில் சிலுவை போடுவார். கருணையுடன் கூடிய அந்தக் கண்களை எந்தக் கூட்டத்திலும் கண்டுபிடித்து விடுவேன்.

காலில் உயிர் போகிற வலி என்று கதறும் போது அருகில் அமர்ந்து நள்ளிரவில் அழுத்தி விட்டிருக்கிறார். தினமும் காலையில் ரத்தப் பரிசோதனை செய்வார்கள். அதன் ரிசல்ட் எட்டு மணிக்கு வரும். இன்று டிஸ்சார்ஜ் இல்லை என்றதும் அழுகை முட்டிக் கொண்டு வரும்.

சாதாரண வார்டில் ரெண்டு நாள் இருந்தேன். பத்திரிகையாளர் என்பதால், வீட்டுக்குப் போகிறேன் என்று அடம் பிடித்த காரணமாக சொந்த ரிஸ்க்கில் செல்வதாக எழுதி வாங்கி அனுப்பினார்கள். தினமும் ரத்தம் கொடுத்து ப்ளேட்லெட்ஸ் கவுண்ட் செக் பண்ணச் சொன்னார்கள். அது அடுத்த ஐந்து நாட்களில் ஏறியது.

டிஸ்சார்ஜ் ஆன மறுநாள் தீபாவளி. வழியில் ராஜா அண்ணாமலை புரத்தில் லீவைஸில் பவித்ரா எனக்கு சிவப்புக் கலரில் ஒரு சட்டை எடுத்துக் கொடுத்தாள். அதை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன். என் உயிரைக் காப்பாற்றியது அந்த மருத்துவமனையும் பவித்ராவும்தான் என உறுதியாக நம்புகிறேன்.

ஐ.சி.யூவில் இருந்த போது தினமும் பத்து நிமிடங்கள் மட்டுமே அவளை உள்ளே அனுப்புவார்கள். அந்த பத்து நிமிடத்திற்காக அவள் வெளியேயும் நான் உள்ளேயும் என நாள் முழுக்கக் காத்துக் கிடப்போம். அவள் நுழையும் போதே கதறி அழத் துவங்கி விடுவேன். அதற்கு முன் ஓவர் ஆட்டம் ஆடுவேன். சாவைப் பக்கத்தில் பார்த்த பிறகே திருந்தினேன்.

மருத்துவ மனையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, பெசண்ட் நகர் பீச்சிற்கு போக வேண்டும் என்றேன். போகிற வழியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
அதில் இருந்தவர் என்னை உடனடியாக மருத்துவமனையில் சேரச் சொன்ன இந்திரா நகர் க்ளீனிக் உரிமையாளரான அந்த டாக்டர். தள்ளாடி நடந்து போய் அந்த மருத்துவமனையில் விவரம் கேட்டேன்.

டெங்குவால் செத்துப் போயிருந்தார் அவர்.
-சரவணன் சந்திரன்

எழுத்தாளர்

நன்றி: lines media 

Leave a Reply