​காரை சேதப்படுத்திய குண்டும் குழியுமான சாலை: நகராட்சியிடம் ரூ. 8 லட்சம் நிவாரணம் வாங்கி பதிலடி

சாலையில் சென்ற கார் ஒன்று அங்கிருந்த சிறிய பள்ளத்தினால் பலமாக சேதமடைந்ததால் காரின் உரிமையாளர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நீதிமன்றத்துக்கு சென்று இழப்பீடு பெற்றுள்ளார். 
குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் கார், பைக் என எந்த வாகனம் ஓட்டினாலும் அது வாகனத்தை கடுமையாக சேதப்படுத்தி விடுகிறது. இது நாம் அண்றாடம் அனுபவிக்கும் ஒரு நிகழ்வு தான். இதனை தடுக்க நாம் எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. இருந்தாலும் கூட நாம் அந்த சாலைகளுக்கு ஏற்றவாறு பழகிவிட்டோம் என்று தான் கூறவேண்டும். 
இதில் வாகனம் வாங்கும் அனைவரும் சாலை வரி வேறு செலுத்த வேண்டும். சாலை வரி செலுத்திவிட்டு அதற்கேற்றவாறு தரமான சாலைகளை எதிர்பார்க்க முடியாது. 
சாலையோர சிறிய பள்ளத்தினால் தன்னுடைய கார் பாதிப்படைந்ததால் வெகுண்டெலுந்த ஒருவர் நீதிமன்றம் வரை சென்று இழப்பீடு பெற்றுள்ளார். இது குறித்து தொடர்ந்து காணலாம். 
இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்காட் நிக்கோலஸ் (வயது 44), என்பவர் ஃபெராரி 458 என்ற காஸ்ட்லி சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரின் உரிமையாளர் ஆவார். 
இந்தக் கார் 1,50,000 இங்கிலாந்து பவுண்டுகள் மதிப்புள்ளதாகும். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 1.2 கோடி ரூபாய் ஆகும். 
ஸ்போர்ஸ் கார் விரும்பியான ஸ்காட் தனது ஃபெராரி காரை ஓட்டிச் சென்ற போது சாலையில் இருந்த பள்ளத்தில் மோதி கடுமையாக சேதமடைந்துள்ளது. பள்ளம் என்றவுடன் ஏதோ பெரியது என்று எண்ணிவிட வேண்டாம். 
அது மிகவும் சிறிதளவான ஒரு பள்ளம் தான். அந்த சிறிய பள்ளத்தில் ஃபெராரி 458 கார் மோதியதில் காரின் வீல் நெளிந்துவிட்டது. பயணியர் இருக்கையில் இருந்த ஏர்பேக் விரிந்து விட்டது. காரின் சஸ்பென்ஷன் ரீ-அலைன் ஆகியுள்ளது. 
ஒரு சாதாரண சாலை பள்ளம் 1.2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி காரினை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தவுடன் ஸ்காட் முதலில் தான் காரை எதன் மீதோ கடுமையாக மோதியதாகவே எண்ணிணார். 
இறங்கி வந்து பார்த்ததில் அவரே அந்த பள்ளத்தின் அளவைக் கண்டு கடுப்பாகியுள்ளார். (இந்தச் சம்பவம் நம்மூரில் நடந்திருந்தால் அதிகபட்சமாக இன்ஸூரன்ஸ் நிறுவனத்தில் முறையிட்டிருப்பர், அல்லது தலைவிதி என்று தண்டமாக காசு செலவழித்திருப்பர்.) 
ஆனால் அந்த ஃபெராரி கார் சாதாரண பள்ளத்திற்கே இப்படி ஆகிவிட்டதே என நினைக்காமல் உள்ளூர் நகராட்சி நிர்வாகத்தின் குறைபாட்டினாலேயே சாலை மோசமாக பராமரிக்கப்பட்டுள்ளது என சமூக அக்கறையுடன் கருதி தனக்கு நடந்தவாறு வேறு எவருக்கும் நடந்துவிடக்கூடாது என தீர்மானித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அவர். 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் அதன்காரணமாகவே ஃபெராரி கார் சேதமடைந்துள்ளது என்றும் காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு நஷ்ட ஈடாக 8 லட்ச ரூபாயை ( 10,000 பவுண்ட்) நகராட்சி நிர்வாகம் ஸ்காட்டுக்கு நஷ்ட ஈடாக அளிக்குமாறும் தீர்ப்பளித்தது. 
அந்த பள்ளத்தை சீராக்க நகராட்சி நிர்வாகத்தினருக்கு அதிகபட்சமாக 4000 ரூபாய் (53 பவுண்ட்) தான் தேவைப்பட்டிருக்கும், ஆனால் தற்போது 8 லட்ச ரூபாயை அவர்களின் அலட்சியத்திற்கு நஷ்டமாக கொடுத்துள்ளனர். 
இது அந்த நகராட்சி நிர்வாகத்தினருக்கு நிச்சயம் ஒரு படிப்பிணையாக இருந்திருக்கும். இனியும் இதைப் போல அலட்சியமாக இருக்க மாட்டார்கள் என நம்பலாம்.. 
அது சரி.. நம்மூரில் இருக்கக்கூடிய சாலைகளின் நிலைமை இந்த ஸ்காட்டுக்கு தெரியுமா என்ன…!!!

Leave a Reply