வீட்டு சாம்பாரில் ஹோட்டல் ருசியைக் கொண்டுவருவது எப்படி

நானும் பல வழிகளில் செய்து பார்த்துவிட்டேன். இட்லிக்குத் தொட்டுக்குக்கொள்ள ஹோட்டலில் வைக்கும் சாம்பார் போல வருவதேயில்லை. வீட்டு சாம்பாரில் ஹோட்டல் ருசியைக் கொண்டுவருவது எப்படி?

– எம். கலை, திருச்சி.

ரேவதி சண்முகம், சமையல்கலை நிபுணர், சென்னை.

துவரம் பருப்புடன் பரங்கிக்காய் துண்டுகளைச் சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். தனியா, கடலைப் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் சின்ன வெங்கயாம் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கொஞ்சம் புளியைக் கரைத்து ஊற்றுங்கள். அதில் சாம்பார் பொடி, கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பச்சை வாசனை போனதும், வேகவைத்த பருப்பு கலவையைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அரைத்துவைத்தப் பொடி, சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கிவையுங்கள். மணக்க மணக்க ஹோட்டல் சாம்பார் தயார். சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சேர்த்தால் சுவை கூடும். கூடுதல் வாசனைக்கு முருங்கைக்காய் சேர்த்துக்கொள்ளலாம்.

Leave a Reply