முளை தானிய பயிறு வகைகள்

இயற்கை உணவில் எல்லாம் இருக்கு!: முளை தானிய பயிறு வகைகள்!

#doctorvikatan
எட்டு மணி நேரம் ஊறவைத்து, முளைகட்டி ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால், பலரும் சோம்பலின் காரணமாக இதைச் சாப்பிடுவதில்லை. ஆனால், சத்தான முளை தானியப் பயறுகளை சாப்பிடுவதால், குறைந்த தானியத்தில் அதிக இயற்கை உணவைப் பெற முடியும்.  சமைக்காமல் அப்படியே சாப்பிடும் போது ஒரு வேளைக்கு 50 கிராம் அளவே போதுமானது.  முளைப்புத் திறனும் சிலசமயம் மாறுபடும்.  கூடிய வரையில் ஃப்ரிட்ஜில் வைக்காத முளை தானியங்களைப் பயன்படுத்துவது நல்லது.
பச்சைப்பயறு
நல்ல குடிநீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி, ஈரமான பருத்தித் துணியில் கட்டி முளைக்கவிடவும்.  காலையில் ஊறவைத்து மாலையில் நீரை வடித்துக் கட்டினால், மறுநாள் அதிகாலை வெள்ளை முளை எட்டிப் பார்க்கும். தினமும் ஒரு நபருக்கு 50 முதல் 100 கிராம் வரை தேவைப்படும்.பல்லால் கடிக்க முடியாதவர்கள், இந்த முளைப் பயறை நீர் சேர்த்து அரைத்து அதில் வெல்லம், தேன், தேங்காய் துருவல், உலர் திராட்சை சேர்த்து காலை டிஃபனுக்கு பதிலாக சாப்பிடலாம்.    
பலன்கள்: அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டத்தைத் தரும்.  அல்சரைக் கட்டுப்படுத்தும்.  சருமத்தைப் பளிச்சென வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முளைக்கட்டிய வெந்தயம்
சிறிது நேரம் ஊறவைத்து, ஈரப் பருத்தித் துணியில் முளைக்கட்டி சாப்பிடலாம்.
பலன்கள்: கடுமையான சர்க்கரை நோயாளிகள் தினமும் கட்டாயம் ஒரு கப் எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப்புண், பெண்கள் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் எப்படிப்பட்ட அல்சரையும் குணப்படுத்தும். ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.  
கொள்ளு முளைப்பயறு
நன்றாக அலசி, நீர் சேர்த்து முளைக்கவிட்டுப் பயன்படுத்தவேண்டும்.  
பலன்கள்: அதிக உடல்சூடு, தொப்பை, கெட்ட கொலஸ்ட்ரால், நீரழிவு நோய், உடல்பருமன் போன்ற பிரச்னைகளுக்கு கொள்ளு முளைப்பயறு மிகவும் நல்லது.  
முளைவிட்ட எள், வேர்க்கடலை
பலன்கள்: மிகவும் மெலிந்த உடல் இருப்பவர்கள் முளைக்கட்டிய எள், வேர்க்கடலையைத் தினமும் 100 கிராம் அளவுக்கு சாப்பிடலாம்.  அகோரப் பசியை போக்கி, ஊட்டச்சத்தையும் தரும். கடின உழைப்பாளிகளுக்கும், துள்ளித் திரியும் வளரும் பிள்ளைகளுக்கும் மிக நல்லது.  
கம்பு முளைப்பயறு
கம்பை 8 மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியில் கட்டி முளைக்கவிடவும்.  அடிக்கடி ஒரு கைப்பிடி சாப்பிட்டு வரலாம்.  அரைத்துப் பாலாகவும் அருந்தலாம்.  கூழாக்கி, கஞ்சியாகவும் சாப்பிடலாம்.
பலன்கள்: பலம் கூடும்.  ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள், தினமும் சாப்பிட உடல் உறுதிப்படும்.

Leave a Reply