நாட்டுப் பால் முக்கியத்துவம்

நாட்டுப் பால் முக்கியத்துவம் பெறுகிறதே..!
ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக நாட்டுப் பால் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டு மாடுகளின் பாலுக்கு கடும் கிராக்கியும் விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. 

மரபணு மாற்றப்பட்ட கலப்பின பசுக்கள் இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டதில் இருந்தே நாட்டு மாடுகள் வாழ்வாதாரத்திற்காக போராட்டத்தை சந்திக்கத் தொடங்கி விட்டன. ஜெர்சி, பிரிசியன் ரெட்டேன், சிவிஸ் பிரவுன் போன்ற கலப்பின பசுக்கள் நாள் ஒன்றுக்கு17 லிட்டர் வரை பால் தரும் தன்மை கொண்டவை. இதனால் கலப்பின பசுக்களை விவசாயிகள் விரும்பி வளர்க்கத் தொடங்கினர்.
இதனால், இந்திய நாட்டு ரகங்களான காங்கேயம், சிகப்பசக்கி, கார்பார்கர், சாகிவால் மாடுகள் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. நாட்டு மாடுகள் நாள் ஒன்றுக்கு 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை குறைந்த அளவு பாலைத் தருபவை. அதே வேளையில் நாட்டு மாடுகளின் பால் புரதச்சத்து மிக்கவை. எனினும் பாலின் அதிகத் தேவை கருதி, விவசாயிகள் கலப்பின பசுக்களை வளர்க்க ஆர்வம் காட்டினர். நாட்டு மாடுகள் வளர்ப்போர் எண்ணிக்கை குறைந்தது. 
ஜெர்சி இன மாடுகளுக்கு வேர்வை நாளங்களும் திமில்களும் கிடையாது. மாட்டின் உடலில் ஏற்படும் வெப்பம் பால் மற்றும் அதன் சிறுநீர் மூலமாத்தான் வெளியேற்றப்படும். கலப்பின மாடுகளின் சாணமும், சிறுநீரும் மண்ணுக்கு நன்மை விளைவிப்பதில்லை. 
இந்திய நாட்டு மாடுகளில் வேர்வை நாளமும், திமிலும் இருக்கிறது. அதனால், அவற்றின் பாலில் இருந்து எந்த நோய் தொற்று ஏற்படும் அபாயமும் இல்லை. நாட்டு மாடுகளின் சிறுநீர், சாணம் ஆகியவை இயற்கை உரமாகவும் பயன்படுகிறது. 
இவ்வளவு சிறப்புகள் நாட்டு மாடுகளில் இருந்தாலும் பால் அதிகமாகத் தருகின்றன என்கிற ஒரே காரணத்தினாலேயே கலப்பின மாடுகள் மீது கவனம் செலுத்த, காங்கயம் மாடுகளில் 80 சதவீதம் அழிந்து போய் விட்டது. ஆனால் தற்போது ஜல்லிக்கட்டு புரட்சி வழியாக நாட்டு மாடுகளின் பாலுக்கும் சேர்த்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டு மாடுகளின் பால்தான் வேண்டும் என மக்கள் பால் வியாபாரிகளிடம் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளனர். 
நாட்டு பாலின் மகத்துவத்தை அறித்த மக்கள், அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயாராகி விட்டனர். உடலுக்கு ஆரோக்கியம் தரும் முர்ரா, காங்கயம் இன பசுக்களின் பாலுக்கு தற்போது அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல், விவசாயிகள் வட மாநிலங்களில் இருந்தும் நாட்டு மாடுகளை விலை கொடுத்து வாங்கி தமிழகத்துக்கு கொண்டு வந்து வளர்க்க ஆரம்பித்துள்ளனர். தற்போது நாட்டு மாடுகளின் பால் விலை லிட்டர் ரூ.50க்கு வரை உயர்ந்துள்ளது. நாட்டுப் பால் லிட்டர் ரூ. 70 வரை சந்தையில் விற்கப்படுகிறது. இதனால், நாட்டு மாடுகளை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
வியாபாரிகளும் நாட்டு மாடுகளின் பாலுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 

அதிக பால் தரும் என்ற காரணத்திற்காகவே வெளிநாட்டு பசு வளர்ப்பினை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தற்போது கூட சுவிட்சர்லாந்தில் இருந்தும் டென்மார்க்கில் இருந்தும் பசுக்கள், காளைகளை மத்திய அரசு கொண்டு வந்து இறக்கியுள்ளதாக தகவல் வருகிறது. இப்படி வெளிநாட்டு மாடுகளின் வளர்ப்பில் அக்கறைக் காட்டும் அரசு, உள்நாட்டு மாடுகளின் வளர்ப்பிற்கு தேவையான வசதிகளையும் பால் உற்பத்தியை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால், மக்களின் ஆரோக்கியமும் காக்கப்படும். நாட்டு மாடுகளின் வளர்ப்பிலும் விவசாயிகள் அதிக அக்கறைக் காட்டுவார்கள். விவசாயிகளின் பொருளாதார பிரச்னையையும் தீர்க்கலாம்

Leave a Reply