சுவை மருத்துவம்

நாம் சில நேரங்களில் மிகவும் சோர்வாக இருப்போம். பலமணி நேரமாக உணவு சாப்பிடாவிட்டால் நமது உடல் மிகவும் தளர்ந்த நிலையில் சோர்வாக இருக்கும். அப்போது நாம் ஏதாவது ஓர் உணவைச் சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்த உடனே உடலுக்கு சக்தி கிடைக்கிறதா அல்லது 2 மணி நேரத்திற்குப் பிறகு கிடைக்கிறதா?
சாப்பிட்ட உடனேயே நமக்கு சக்தி கிடைத்து விடும். ஆனால் அறிவியல்படி, நாம் வாயில் சாப்பிடும் சாப்பாடு வயிற்றுக்குச் சென்று, அங்கே ஒரு மணி நேரம் இருந்து ஜீரணமாகி, பின்பு சிறுகுடலுக்குச் சென்று அங்கேயும் ஒரு மணி நேரம் ஜீரணமாகிப் பின்னர் இரத்தத்தில் கலக்கிறது. எனவே நமக்கு 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் சக்தி கிடைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவமனையில், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்துச் சர்க்கரையின் அளவைச் சோதனை செய்து பார்ப்பதற்கான காரணம் இதுதான்.
ஆனால், சாப்பிட்டவுடன் நமக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. இது எங்கிருந்து வருகிறது? நாம் சாப்பிடும் உணவில் சுவைகள் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு பிராண சக்தி கிடைக்கிறது. உணவில் உள்ள பொருட்கள் மூலமாக மீதிப் பிராண சக்தி கிடைக்கிறது.
நாம் உணவை மெல்லும்பொழுது அதில் உள்ள சுவைகள் நாக்கில் புள்ளிப் புள்ளியாக இருக்கும் சுவை மொட்டுகள் (Taste Buds) மூலமாக உறிஞ்சப்பட்டு, சுவைகள் பிராண சக்தியாக மாறி நரம்புகள் வழியாக மண்ணீரலுக்கு அனுப்பப்படுகின்றன. மண்ணீரல் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் அதைப் பிரித்துக் கொடுக்கிறது.
நமது உடலுக்குப் பல வகைகளில் பிராண சக்தி கிடைக்கிறது. சாப்பிடும்பொழுது சுவை வழியாகவும் பொருள் வழியாகவும் இரண்டு வழி முறைகளில் பிராண சக்தி கிடைக்கிறது.
நாம் உணவகத்தில் சாப்பிடும்பொழுது, சாப்பிட்டவுடன் தெம்பாக இருக்கிறோம். ஆனால், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உடல் சோர்ந்து விடும். மீண்டும் ஏதாவது சாப்பிட வேண்டும் போல் இருக்கும். ஏனென்றால், உணவகங்களில் சுவைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக உணவைச் சுவையாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவார்கள். எனவே, அந்தச் சுவை நாக்கின் மூலமாகப் பிராண சக்தியாக மாற்றப்பட்டு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கிடைப்பதால் நாம் ஒரு மணி நேரம் தெம்பாக இருக்கிறோம். ஆனால், அவர்கள் சோடா உப்பு, அஜீனோமோட்டோ போன்ற பொருட்களைக் கலப்பதால் உணவில் தரம் குறைந்து, உள்ளே செல்லும் பொருட்கள் சக்தி உள்ள பொருட்களாக இருப்பதில்லை. எனவே, ஒரு மணி நேரம் கழித்து நமக்கு உடல் சோர்வடைகிறது.
வீட்டில் சாப்பிடும்பொழுது சாப்பிட்டு முடித்தவுடன் சோர்வாக இருக்கும். ஒருமணி கழித்து நன்றாக, தெம்பாக இருக்கும். இதற்குக் காரணம் என்னவென்றால், வீட்டில் சமைக்கும்பொழுது நாம் சுவைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், உணவில் சத்துப் பொருட்கள் அதிகமாக இருக்கும். எனவே, சுவை மூலம் பிராண சக்தி கிடைக்காததால் முதல் 1 மணி நேரத்திற்கு நமக்கு சக்தி கிடைப்பதில்லை. ஆனால், உள்ளே செல்லும் பொருட்கள் வீரியத்துடன் இருப்பதால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பொருட்கள் மூலமாகக் கிடைக்கும் பிராண சக்தியில் நாம் இயங்க ஆரம்பிக்கிறோம்.
வீட்டில் சாப்பிட்ட உணவுக்கு நாம் பல மணி நேரம் சக்தியுடன் இருக்க முடியும். எனவே, வீடுகளில் இனிமேல் உணவகங்களைப் போன்று சுவையாகச் சமைக்க வேண்டும். அதே சமயம், உணவகங்களில் வீட்டைப் போல் சத்து உள்ள பொருட்களைச் சமைக்க வேண்டும். இப்படிச் செய்தால் எங்கு சாப்பிட்டாலும் ஆறு மணி நேரம் அல்லது ஏழு மணி நேரத்திற்கு நாம் தெம்பாக இருக்கலாம்.
ஆம்! சுவை என்பது ரசிப்பதற்கோ, ருசிப்பதற்கோ அல்ல. சுவை என்பது பிராண சக்தி கொடுக்கும் அற்புதமான ஒரு விசயம்! எனவே, நாம் சாப்பிடுகிற உணவில் சுவை மூலமாகவும் பொருள் மூலமாகவும் இரண்டு வகைகளிலும் பிராண சக்தி எடுப்பது மூலமாக அதிக சக்தியுடன் வாழலாம்.
நமது உடலில், ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொரு பிராண சக்தி மூலமாக வேலை செய்கிறது. இப்படி, மொத்தம் ஐந்து விதமான பிராண சக்திகள் இருக்கின்றன. ஒவ்வொரு விதமான பிராண சக்திக்கும் ஒவ்வொரு வித உறுப்பு வேலை செய்யும். இப்படி எந்தப் பிராண சக்திக்கும் எந்த உறுப்புக்கும் சம்பந்தம் உள்ளது என்பதை இனி தெளிவாகப் பார்க்க இருக்கிறோம்

Leave a Reply