இட்லியின் வரலாறு

தமிழனுக்கு சாம்பார் இட்லியும் தெரியும், குஷ்பு இட்லியும் தெரியும். 
ஆனால் அதன் வரலாறு தெரியாது. 
உளுந்து எனும் அரிய தானிய வகையின் தாயகம் இந்தியா. 

குறிப்பாக தமிழகத்தின் தஞ்சை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாக விளைவிக்கப்பட்டு பிறகு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலும் அதிகம் விளைவிக்கப்படும் பயறு வகையாக இருக்கிறது.

உளுந்தைப் பற்றிய குறிப்புகள் அகநாறு, புறப்பாடல், முத்தொள்ளாயிரம் ஆகிய சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. 

சங்கத்தமிழ் இலக்கியங்களுக்கு இணையான மூப்பு கொண்ட பிறமொழி இந்திய இலக்கியங்கள் எதுவும் இல்லாத நிலையில், உளுந்தையும் – அரிசியையும் கொண்டு ஈரமா செய்து இட்லியை கண்டுபிடித்த பெருமை தமிழனையே சாரும். 

உரலில் இடித்த அரிசிமா கொண்டு, அப்பம், பனையோலை, பூவரசு இலைக் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை ஆகியவற்றை கண்டறிந்த தமிழன், அதன் தொடர்ச்சியாகவே இட்லியைக் கண்டறிந்தான் என்கிறார் தமிழகத்தின் பண்பாட்டு அதிர்வுகளை ஆய்வு செய்துவரும் பேராசிரியர் தோ.பரமசிவன். 

‘இட்டரிக’ என்று ஏழாம் நூற்றாண்டிலும் ‘இட்டு அவி’ 12 ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட நிலையில் பின்பு ‘இட்டு அவி’ என்ற இரட்டைச் சொல் மருவி ‘இட்டலி’ என்ற ஒரு சொல்லாய் திரிந்து அதன் பின்னர் ‘இட்லி’ என்று ஆனதாகக் தெளிவாகக் குறிப்பிடுகிறார் அவர். 

முதலில் உருண்டை வடிவிலான இட்டலிகளே இருந்திருக்க வேண்டும் என்றும், பின்னர் உருண்டை வடிவிலான இட்லிகளின் மேல் பகுதிகள் மென்மையாகவும், நடுப்பகுதி கடினமாகவும் இருக்கக் கண்டு, பிறகு தட்டை வடிவில் அவிக்க தமிழர்கள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்கிறார். 

இட்லியின் வரலாறு தமிழர்களின் உணவுப் பண்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க, இன்று இட்லிக்கு பெயர் பெற்ற ஊராக விளங்குகிறது தமிழகத்தின் மதுரை. 

மதுரை இட்லியைப் போலவே, செட்டிநாடு இட்லி, தஞ்சாவூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி ஆகியன பிரபலமாக இருக்கின்றன. 

அதேபோல அரிசி மா இல்லாமல் ரவை மாவில் உளுந்து மா கலந்து செய்யப்படும் ரவை இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி என்று புதிது புதிதாக தமிழன் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தினாலும் அரிசிமாவும் உளுந்து மாவும் கலந்து அவிக்கப்படும் இட்லியுடன் சாம்பார், தேங்காய் சட்னி, பொடி, புதினா சட்னி, வெங்காயச் சட்னி விதவிதமான வகையில் சைடிஸ் உணவுடன் சாப்பிடும் சுவைக்கு பிட்சாவோ, பர்கரோ கூட ஈடாகமுடியாது. 

இட்லியில் என்ன இருக்கிறது? 
இப்படிப்பட்ட தமிழரின் கண்டுபிடிப்பான இட்லியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாவிட்டால் நாம் தமிழராக இருந்து என்ன பயன்? 

இட்லியின் அடிப்படைப் பொருட்களான அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கல்சியம், பொஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உடலில் செயலாற்றுகின்றன. 

மென்மையான எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது இட்லி. 

75 கிராம் எடை கொண்ட 4 இட்லிகளோ அல்லது 50 கிராம் எடை கொண்ட 6 இட்லிகள் சாப்பிடுவதால் அமினோ அமிலங்களும் பன்மடங்கு அதிகரிக்கின்றன. 

திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயற்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன. 

லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது. 

இட்லியுடன் அவ்வப்போது நீங்கள் புதினா அல்லது கொத்தமல்லி சட்னி சேர்த்துக் கொண்டால் இதன்மூலம் லைசின் அமிலம் உடலுக்கு கிடைத்துவிடும். 

என்றாலும் இரவில் இட்லி எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் 200 கிராம் அளவைத் தாண்டாமல், அதாவது நான்கு இட்லிகளுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.!

Leave a Reply