அஜீரண பிரச்சனை, மலச்சிக்கலை குணமாக்கும் பேரீச்சம்பழம்

அஜீரண பிரச்சனை, மலச்சிக்கலை குணமாக்கும் பேரீச்சம்பழம் – இயற்கை மருத்துவம் 
ஆரோக்கிய உணவுப் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது, பேரீச்சம் பழம். இதன் தாயகம் அரேபியா என்றாலும் இந்தியாவிலும் தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது இந்தியாவிலும் பேரீச்சை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
பேரீச்சம் பழத்தின் இனிப்பு, திசுக்களின் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. உடலுக்கு ஊட்டமளிக்கின்றது. பித்தத்தையும், வாதத்தையும் சமன் செய்கின்றது. உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உள்ள உணர்வு உள்ளவர்கள் தினம் நான்கு பேரீச்சம் பழம் சாப்பிட்டுவந்தால் சிறுநீர் நாளங்களில் உள்ள அழற்சி நீங்கும்.
மூச்சிரைப்புடன் கூடிய ஆஸ்துமாவிற்கும் பேரீச்சம் பழம் சிறந்தது. அதில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துகள் அதிகம் உள்ளன. அதில் இருக்கும் இரும்பு சத்து உடலில் உள்ள ரத்தத்தின் அளவை சீராக பராமரிக்கும். அதனால் ரத்த சோகை ஏற்படாது. பூப்படைந்த தொடக்க காலத்தில் ஏற்படும் சீரற்ற மாதவிலக்கையும் இது சரிசெய்யும்.
சில குழந்தைகள் எதை சாப்பிட்டாலும் உடல் தேறாது மெலிந்து காணப்படுவார்கள். தேனில் ஊறவைத்த பேரீச்சம் பழங்கள் நான்கினை நறுக்கி, தினமும் கொடுத்துவந்தால் உடல் தேறும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாகிவிடுவார்கள்.
கர்ப்பிணி பெண்கள் தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடவேண்டும். இதனால் ரத்த சோகை ஏற்படாது. தசைகள் வலிமை அடைவதால் பிரசவ வலி குறையும். பிரசவம் முடிந்ததும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழற்சிகளும் விரைவாக நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பேரீச்சம்பழத்தில் நீரில் கரையும் மற்றும் கரையாத இருவகை நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை மலச்சிக்கலை எளிதாக போக்கி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் இரவு ஐந்து பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டு வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும். பேரீச்சம் பழத்தில் உள்ள கனிம சத்துகள் இதய துடிப்பை சீராக்கும். ரத்த அழுத்தத்தை ஒழுங்காக்கும். எலும்புகளில் ஏற்படும் சிதைவை தடுத்து, எலும்புகளுக்கு உறுதியளிக்கும்.
உடலில் சர்க்கரை சத்து குறையும்போது உடல்சோர்வடையும். அப்போது நாலைந்து பழங்கள் சாப்பிட்டால் உடனே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து உடல் இயல்பாகும். விரத காலத்திற்கு ஏற்ற உணவாகவும் பேரீச்சம்பழம் திகழ்கிறது.
நீடித்த அஜீரண பிரச்சினை, வயிற்றுப் போக்கு தொந்தரவு உள்ளவர்கள் தினமும் இரண்டு பேரீச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து நன்றாக மென்று சாப்பிடவேண்டும்.
இந்த பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கும். பாதுகாத்து வைத்தும் பயன்படுத்தலாம். லேகியங்களில் பேரீச்சம் பழம் சேர்க்கப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு பழங்களுக்கு மேல் சாப்பிடக்கூடாது. அது சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும்.

Leave a Reply