14 அடி ஆழம் 42 பேருந்துகள் அழிவிலிருந்து மக்களைக் காக்கக் காத்திருக்கும் பாதாள நோவா!

????????????
அந்தக் கதவை சற்று சிரமப்பட்டுத்தான் இழுக்கிறார் அவர். பழைய கதவு ஆதலால்… “க்ரீச்…” என்ற சத்தத்தோடு அது திறக்கிறது. அதை முழுவதுமாக திறக்க முடியவில்லை. பாதிக்கும் மேல் திறந்தததால், உள் நுழைவது சற்று எளிதாகவே இருக்கிறது. ஆனால், ஒவ்வொருவராகத்தான் நுழைய வேண்டும். வெளியின் வெளிச்சத்திலிருந்து அந்த இருட்டு திடீரென கண்ணில் அறைகிறது. சில நொடிகள் தான்… அதற்குள் அந்த ஜெனரேட்டரை ஆன் செய்கிறார் அவர். சில ஸ்விட்ச்சுகளைத் தட்ட, சில நொடிகளில் அந்த இடத்தில் வெளிச்சம் பரவத் தொடங்குகிறது. துருப்பிடித்த இரும்பின் வாசத்தைக் காற்றில் உணர முடிகிறது. இன்னும் சில வாசனைகளும்கூட காற்றில் வருகின்றன. அந்த வாசனையைப் பின்தொடர்ந்தால் நமக்குப் பல விஷயங்கள் கிடைக்கலாம். ஆனால், அதற்கு முன்னர் ப்ரூஸ் பீச் (Bruce Beach) நம்மை அழைக்கிறார். அந்தக் கதையும், இந்த இடத்தின் கதையும் நமக்கு முக்கியம்.
இந்தப் பகுதி, கனடாவின் டொரண்ட்டோ நகரிலிருந்து வடக்கில் 100 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இது ஒரு சின்ன, அழகான கிராமம். இந்தக் கிராமத்தின் பெயர் ஹார்னிங்ஸ் மில்ஸ் (Hornings Mills). தனி மனிதனாக தன் மொத்த வாழ்வையும் அர்ப்பணித்து ஒரு மிக முக்கிய விஷயத்தை இங்கு கட்டமைத்துள்ளார் ப்ரூஸ்.

நாம் உள் நுழையும் முன்னர், அந்தப் பழைய கதவின் மேற்பகுதியில் எழுதியிருந்ததை நாம் பார்க்க மறந்துவிட்டோம். அதுதான் இதன் பெயர். “ஆர்க் 2 ” (Ark 2).

ப்ரூஸ் பிறந்து வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவின் சிகாகோவில் தான். 1960களில் எலெக்ட்ரிகல் இன்ஜினீயராக வேலைப் பார்த்து வந்தார். அந்த சமயம் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான “பனிப் போர்” உலகம் முழுக்க பல தாக்கங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியது. அதன் தாக்கம் அரசாங்கள் மட்டுமல்ல, பல தனிமனிதர்களையும் பாதித்தது. அதில் ப்ரூஸும் ஒருவர். அந்தப் பனிப்போர் சூழல் அவரை அமெரிக்காவிலிருந்து நகர்ந்து, கனடாவுக்கு குடிபெயர வைத்தது. ஆனால், அந்தப் பதற்றச் சூழல் அவருக்குள்ளும் பல கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்தது. தொடர்ந்து, உலகம் முழுக்க நடந்த போர்கள் குறிப்பாக, அணு ஆயுத வளர்ச்சியும், அணு ஆயுதப் போரும் அவருக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. தன்னளவில், தனக்கும், தன் குடும்பத்துக்கும், தன் ஊர் மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். போர்களால் இந்த உலகம் பெரும் அழிவை சந்திக்கப் போகிறது என்றும் அவர் திடமாக நம்பினார்.
..

இதோ சில நிமிடங்கள்… இந்தக் கதையிலிருந்து சற்று நழுவி ஒரு பழங்கதைக்குள் சென்று வந்துவிடலாம். இது நோவா தாத்தாவின் கதை. ஒரு மிகப் பெரிய வெள்ளத்தை உருவாக்கி, பாவங்களும், வன்முறையும் நிறைந்த இந்த உலகை அழிக்க முடிவு செய்கிறார் கடவுள். அவர் நோவாவை ஒரு மிகப் பெரிய கப்பலை உருவாக்கி அதில் சில உயிரினங்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றச் சொல்கிறார். வெள்ளம் ஓய்ந்த பிறகு, அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு புது உலகைப் படைக்க வேண்டும் என்பது கடவுளின் ஆணை. அதன்படியே நோவா ஒரு மிகப் பெரிய கப்பலைக் கட்டி, ஒரு புது உலகை உருவாக்கினார். கிட்டத்தட்ட 950 ஆண்டுகள் வரை அவர் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

நோவாவின் கதை ப்ரூஸை பாதித்ததா என்று தெரியவில்லை… நோவாவுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்பதற்கும் பதில் “தெரியாது” என்பதே… ஆனாலும், அவரின் அந்த நீள வெள்ளைத் தாடி, சுருக்கமான தோலும், எல்லாவற்றுக்கும் மேலாக அவர் செய்திருக்கும் பணியும் நோவாவை நினைவுப்படுத்தவே செய்கின்றன.

சிகாகோவிலிருந்து ஹார்னிங் மில்ஸ் பகுதிக்கு வந்த ப்ரூஸ் அங்கு ஜீன் என்பவருடன் காதல் வயப்பட்டார். அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஜீனுக்குச் சொந்தமாக அந்தப் பகுதியில் 12.5 ஏக்கர் நிலம் இருந்தது. அங்கு தான் செய்ய நினைத்திருக்கும் திட்டத்தை தன் நண்பர்களிடமும், சொந்தங்களிடமும் விவரித்தார் ப்ரூஸ். அனைவருமே அவரைக் கடுமையாகத் திட்டினர். ப்ரூஸ் ஒரு பெரும் முட்டாள் என்றனர். ப்ரூஸ் அமைதியாக தலைகுனிந்து நின்றார். எதுவும் பேசவில்லை. ஜீனிடம் கேட்டார்.

“உங்களுக்கு சரி எனப் படுவதை நீங்கள் செய்யுங்கள். நான் உடன் இருக்கிறேன்.” என்று சொன்னார். அன்று மட்டுமல்ல, இன்று ஜீனுக்கு வயது 90. ப்ரூஸுக்கு வயது 83. (ஆம்…ப்ரூஸைவிட ஜீன் 7 வயது மூத்தவர்).

10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 14 அடி ஆழத்தில் பெரிய குழியைத் தோண்டினார். அந்தப் பகுதி முழுக்கச் சுற்றி அலைந்து மொத்தம் 42 பழைய பள்ளிப் பேருந்துகளை வாங்கினார். ஒவ்வொரு பேருந்தையும் 300 டாலருக்கு வாங்கியதாக இன்று நினைவுகூர்கிறார் ப்ரூஸ். அந்த 42 பேருந்துகளையும் அந்தக் குழிக்குள் இறக்கினார். அதன் மேல் கான்க்ரீட் பூசினார். பின்னர், அந்த 42 பேருந்துகளையும் கொஞ்சம், கொஞ்சமாக செப்பனிடத் தொடங்கினார். அதை ஒரு முழு “பாதாள உலகமாக” மாற்றினார். அங்கு எதுவும் இருக்கும். உண்ண உணவு, கழிவறை, படுக்கையறை, உடற்பயிற்சிக்கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு அறை என பல விஷயங்களை உருவாக்கினார். கிட்டத்தட்ட 500 பேர், பல மாதங்கள் இங்கு உள்ளேயே தங்கும்படியான ஏற்பாடுகளைச் செய்தார். டீசல் ஜெனரேட்டர், டிவி, லேண்ட் லைன் போன், ரேடியோ எனப் பல விஷயங்களையும் அதனுள் கொண்டுவைத்தார். ஒரு அறையில் பழைய சைக்கிளைக் கொண்டு கோதுமை மாவு அரைக்கும் வசதியையும்கூட ஏற்பாடு செய்துவைத்தார். தன் மொத்த சேமிப்பையும், சம்பாத்தியத்தையும் இதை உருவாக்கவே செலவிட்டார்.

“விரைவிலேயே உலகம் பெரும் போர்களை சந்திக்கும். அணு ஆயுதங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும். அதிலிருந்து மக்களை மீட்க என்னால் ஆன சிறிய முயற்சிதான் இது” என்று தன் முயற்சியைப் பிரகடனப்படுத்தினார்.

அரசாங்க அதிகாரிகள் ப்ரூஸ்மீது வழக்குத் தொடுத்தனர். “சரியான அனுமதியின்றி மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் இந்தக் கட்டுமானத்தை ப்ரூஸ் கட்டியுள்ளார்” என்று அவர்மீது வழக்குத் தொடரப்பட்டது.
..
“இது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் இடமல்ல. மக்களை ஆபத்திலிருந்து மீட்க உதவும் இடம். இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். போர்களும், அதில் மனித உயிர்கள் பலியாவதும் அரசுகளுக்கு வேண்டுமென்றால் சாதாரண விஷயமாகத் தோன்றலாம். ஆனால், என்னால் அப்படி இருக்க முடியாது. என்னால் முடிந்த அளவுக்கு மனித உயிர்களை நான் காக்க வேண்டும். அதற்காகத்தான் இது…” என்று கடுமையாக வாதாடினார். கிட்டத்தட்ட 30 தடவைகளுக்கும் மேலாக, நீதிமன்ற படிகள் ஏறி தன் பக்க நியாயத்தை நிலைநாட்டினார்.

இந்தக் கதைகள் எல்லாம் நடந்தது 1980களின் ஆரம்பக் காலங்களில். இதோ, இன்று 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், இன்றும் அதைப் பாதுகாத்து, பராமரித்துவருகிறார். பல பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் பழையனவாகி, அதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டார். அன்றைக்கு இருந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு, பல விஷயங்களைக் கட்டமைத்திருந்தார். ஆனால், இன்று அதுவும் எல்லாம் பழையனவாகிவிட்டன.

1. ப்ரூஸ் கட்டியுள்ள இந்த பாதாள பாதுகாப்பு பெட்டகத்துக்கு மொத்த 7 வாசல்கள் இருக்கின்றன.
2. கதவைத் திறந்ததும் “Decontamination” என்று ஒரு அறை. உள் நுழைபவர் அனைவருமே அங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்.
“நீங்கள் சொல்லும்படியான போரோ, அழிவோ ஒருநாளும் வரப்போவதில்லை. இது எல்லாமே வீண். உங்களுக்குப் பைத்தியம்தான் பிடித்துவிட்டது.” இது ப்ரூஸின் பிள்ளைகளே அவர் குறித்து உதிர்த்த வார்த்தைகள்.

“முட்டாள் கிழவர்.”

” கிழவனுக்கு மரக் கழண்டுவிட்டது”

“லூஸு…”

“ஹா..ஹா..ஹா…”

இது ப்ரூஸ் குறித்து பலரும் சொல்லும் விஷயங்கள். ஆனால், ப்ரூஸ் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவரின் இந்த தளத்தைப் பார்வையிட உலகம் முழுவதுமிருந்து பல சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களிடம் எந்தக் கட்டணங்களும் வாங்காமல், இலவசமாக தன் இடத்தைச் சுற்றிக்காட்டுகிறார்.
..
3. பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பல தொலைக்காட்சி ப்பெட்டிகளும், டெலிபோன்களும் பழசாகிவிட்டாலும் கூட இன்றும் வேலை செய்யும் நிலையிலேயே உள்ளன.
4. சமீபகாலங்களில் பல இளைஞர்கள் ப்ரூஸுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். பலரும் பெட்டகத்தைப் பராமரிக்கும் வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

“எனக்குத் தெரியும் மக்கள் என்னைப் பைத்தியம் என்று சொல்கிறார்கள். ஆனால், எனக்கு அதுகுறித்து கவலையில்லை. என்னால் முடிந்ததை நான் செய்திருக்கிறேன். ஏதோ ஒரு நாள், இங்கு ஏதோ ஓர் பேரழிவு நிச்சயம் நடக்கும். அப்போது, என்னைப் பைத்தியம் என்று சொன்ன மக்களுக்கும் கூட இது உபயோகப்படும். என் காலம் முடிந்துவிட்டது. ஆனால், என் வாழ்வை அர்ப்பணித்து நான் கட்டியுள்ள இதில்… சில உயிர்களாவது காப்பாற்றப்படும் என்று நம்புகிறேன்.” என்று தளர்ந்துபோன தன் கைகளை, அந்த இரும்புக் கதவுகளில் பிடித்தபடியே சொல்கிறார்.

எழுந்து நடமாட முடியாவிட்டாலும், இன்றும் தன் கணவனுக்குத் துணையாக அந்த சுருங்கிய கண்களில் பளிச்சிடும் பாசத்தோடு பார்த்துச் சிரிக்கிறார் ஜீன்.

Leave a Reply