போஸ்டல் பேங்க்

தமிழகத்தில் தபால் துறை, வரும் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து “போஸ்டல் பேங்க்” என்ற வங்கி சேவையை தொடங்குகிறது.

தமிழகத்தில் தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுமே சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பயனை பெறுவதற்கு வங்கிக் கணக்கு எண் அவசியமாகிவிட்டது. அதோடு பண மதிப்பு குறைப்பு நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்க்கையில் வங்கிகளின் அவசியம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பண பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளுக்கு சில வங்கிகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில வங்கிகளில் டெபாசிட் தொகையில் குறைந்தபட்ச தொகை அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தபால் துறையும் வங்கி சேவையில் ஈடுபட இருக்கிறது.

இதுகுறித்து தபால்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வங்கி வர்த்தகத்தில் இணைவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஏற்கனவே தபால் துறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் வங்கி கணக்குகள் பெறப்பட்டால்தான் வங்கி வர்த்தகத்தை தொடங்க முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

எனவே, மக்களிடம் இருந்து கணக்குகளைப் பெறுவதற்கு தபால்துறை ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, அரசு அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்குச் சென்று, விண்ணப்பங்களைக் கொடுத்து கணக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது.

தபால் துறையின் வங்கி சேவைக்கு, “போஸ்டல் பேங்க்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சேவையை வரும் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் சேர்வதற்கு ஆதார் அட்டை போன்ற ஏதாவது அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை கொடுத்தால் போதும். குறைந்தபட்ச அளவாக ரூ.100 டெபாசிட் செய்ய வேண்டும். அதை விண்ணப்பத்துடன் தரவேண்டும்.

இதில் சேர்பவர்களுக்கு ஏ.டி.எம். அட்டை, ரகசிய எண், வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றை தபால்துறை வழங்கும். தபால்துறை வங்கி வழங்கும் ஏ.டி.எம். அட்டை மூலம் வேறு எந்த வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்தும் பணம் எடுக்க முடியும். இதற்கு 4 ஆண்டுகளுக்கு சேவை கட்டணம் கிடையாது. அதோடு ‘நெட் பாங்கிங்’ வசதியும் செய்து தரப்படும்.

மற்ற வங்கியில் நடக்கும் பணப்பரிமாற்றம் போலவே இந்தியா முழுவதிலும் “போஸ்டல் பேங்க்” மூலம் பண பரிமாற்றம் செய்யலாம். தபால் அலுவலகத்தில் ‘போஸ்டல் பேங்க்’க்காக தனி இடம் அளிக்கப்பட்டு இருக்கும். தபால்துறையின் மற்ற சேவைகளும் தொடர்ந்து நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply