பீட்டா அமைப்பு… ஒரு பார்வை

விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals) அல்லதுபீட்டா (PETA) அல்லது PeTA

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த வழக்கைத் தொடர்ந்த பீட்டா எனப்படும் அமைப்பு குறித்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களால் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பீட்டா அமைப்பு குறித்த விவரங்கள்…

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் நார்ஃபோல்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டது பீட்டா. 1980-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இன்கிரிட் நியூகிரிக் மற்றும் அலெக்ஸ் பசோ ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது.

மனிதர்களைப் போல சுதந்தரமாக விலங்குகளும் வாழ வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்ட இந்த அமைப்பில் உலகம் முழுவதும் சுமார் 30 லட்சம் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் முழுநேர ஊழியர்களாக 300 பேர் இருக்கின்றனர். 2014-ம் ஆண்டின் நிலவரப்படி இந்த அமைப்புக்கு 280 கோடி ரூபாய் வருவாய் எனத் தகவல் தெரிவிக்கிறது.

விலங்குகள் மனிதரின் உணவு, உடை, ஆராய்ச்சி, பொழுதுபோக்கு அல்லது துன்புறுத்தலுக்கானவை அல்ல என்பதே பீட்டா அமைப்பின் கோஷமாக இருக்கிறது. இந்தியாவில் 2000-ம் ஆண்டு நுழைந்த இந்த அமைப்பு, மும்பையில் தனது தலைமையகத்தைக் கொண்டிருக்கிறது. உணவுக்காக விலங்குகளைக் கொல்வதை எதிர்ப்பதாகவும், சைவ உணவு முறையை பரப்புரை செய்வதாகவும் இதன் இணைய தளம் தெரிவிக்கிறது.

விலங்குகள் துன்புறுத்தப்படுதை அரசு நிர்வாகம், சட்டம் மற்றும் நீதித் துறையின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக கூறும் பீட்டா, மருத்துவ ஆய்வுக்கு விலங்குகளை பயன்படுத்தவும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

தோலுக்காகவும், இறைச்சிக்காகவும் விலங்குகளை கொல்வதை எதிர்க்கும் பீட்டா, இதற்காக தன்னார்வலர்களை தனது இணைய தளத்தில் வரவேற்கிறது. உலகம் முழுவதும் நன்கொடை பெற்று செயல்படுவதாக கூறும் பீட்டாவின் வருவாய், நடைமுறைகள் குறித்து தொடர்ந்து பல நாடுகளிலும் சர்ச்சைகள் தொடர்கின்றன.

anniyans

Leave a Reply