பாரிக்கரும் தர்பூசணியும்

கோவாவின் முதல்வர் மனோகர் பாரிக்கர். இவரது சொந்த ஊர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாரிக் என்ற சின்ன கிராமம்.

இந்த ஊர்க்காரர்களை ‘பாரிக்கர்’ என்று அழைக்கின்றனர். பட்டப் பெயராகவே சேர்த்துக் கொள்கின்றனர். இந்தியாவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சரையும் இப்போ கோவா முதல்வரையும் தந்த பாரிக் கிராமத்துக்கு மற்றொரு சிறப்பு உள்ளது.

அங்கு விளையும் தர்பூசணி பழங்களுக்கு மகாராஷ்டிரா முழுக்க செம கிராக்கி. எக்ஸ்போர்ட் கூட ஆகுது. அந்தப் பழங்களை சாப்பிட்டா வயிறு ரொம்பும்; மனசு ரொம்பாது. சப்புக்கொட்ட வைக்குமளவுக்கு ஸ்வீட்டா இருக்கும்.

முன்பு ஒருகாலத்தில் அங்கு ஒரு விவசாயி இருந்தார்.

கிராமத்துல முக்காவாசி வயல் அவருக்கு சொந்தம். அதுல விளைஞ்ச தர்பூசணிகள்தான் ஊருக்கே கௌரவத்தை கொண்டுவந்தன. அதுக்கும் ஒரு பின்னணி உண்டு.

அந்த விவசாயி ஒரு விநோத போட்டிய நடத்துவார்.
வருஷாவருஷம் அறுவடை முடிச்ச கையோட நூற்றுக்கணக்கா தர்பூசணிகளை தன்னோட வயலில் அந்த விவசாயி மலைபோல குவிச்சு வைப்பார்.

அங்க போய் யாரு வேணா பூந்து விளையாடலாம். வயிறு முட்ட எவ்வளவு வேணா சாப்பிடலாம். தீரத்தீர பழங்கள் சப்ளையாகிட்டே இருக்கும்.

சாப்புடற பழத்துக்கு காசு?
ஒரு தம்பிடி தரவேணாம்! ஆனா ஒரு கண்டிஷன்.

பழத்தை சாப்புட்டு கொட்டையை கீழே துப்பிறக் கூடாது. பத்திரமா நிஜார் பையில நிரப்பிக்கணும். போதும் போதுங்குற அளவுக்கு சாப்பிட்டதும் அவங்ககிட்ட உள்ள தர்பூசணி விதைகளை அந்த வயல்ல சின்னதா குழி தோண்டி ஒவ்வொன்னா புதைச்சுடணும். அம்புடுதேன்.
போட்டி முடிஞ்சது!

ஆரம்பத்துல பாரிக் கிராமத்துக்காரங்க மட்டும் வந்து இதுல கலந்துகிட்டாங்க. போகப்போக சுத்துப்பட்டு பகுதி கடோத்கஜன்களும் சேந்துக்கிட்டாங்க.

ஆயிரக்கணக்கா பழங்கள சாப்பிட்டுப் பல்லாயிரக்கணக்கா விதைகளை விதைச்சுட்டுப் போயிருவாங்க. வருஷா வருஷம் போட்டி ஜாஸ்தியாகிட்டே போச்சு. அந்த விவசாயிக்கோ அவரோட நிலத்தில அள்ள அள்ள லாபம்!

ஓசியில மக்கள் சாப்பிட்டுப் போனாங்க. இதுல அந்த விவசாயிக்கு எப்படி லாபம் கிடைக்கும்னு கேள்வி வராதா?

அதுதான் போட்டி மெக்கானிஸமே.

1.சாப்பிட்டவங்க எல்லாம் வயலில் விதைகளை விதைத்து விடுவதால் கூலி மிச்சம்.
2. அடுத்த அறுவடைக்கு பல்லாயிரக்கணக்கான தர்பூசணி செடிகள் ரெடி. இதுதான் கணக்கு.

இப்படியே போய் ஒருநாள் அந்த விவசாயி வயதாகி செத்துட்டார். அவருக்கப்புறமா அவரோட மகன்கள் அந்தப் போட்டியை ஒப்புக்குச்சப்பாணியா சில வருஷம் நடத்துனாங்க.

காசு ஆசை யாரை விட்டுச்சு!

ஓசியில தர்றத நிறுத்திட்டு கொஞ்சுண்டு விலை வெச்சு தர்பூசணிகளை ஸ்பான்ஸர் பண்ணாங்க. அதுவும் ஒன்னு ரெண்டு வருஷம்தான். அப்புறம் ஓட்டுக்கா போட்டிய நிறுத்திட்டாங்க.

அத்தோட சரி. பாரிக் தர்பூசணிகளுக்கும் இருந்த மவுசு அவுட்டு. பெரிசா மார்க்கெட்ல போணியாகல. சாப்பிட்டா சப்புனு இருக்கும். இப்பல்லாம் தர்பூசணிக்குப் பதிலா பாவக்காய் விதைக்க ஆரம்பிச்சுட்டாங்க. எங்க பாத்தாலும் சுகர் பேஷண்ட் தானே! வயித்துப்பொழப்புக்கு பாவக்காய் சாகுபடில இறங்கிட்டாங்க பாரிக்கர்கள். ஏதோ போணியாகுது.

ஏன் இந்த மாற்றம்?

தந்தை விவசாயி தனக்கு கிடைச்ச மகசூலில் நூற்றுக்கணக்கான உயர்தரமான தர்பூசணி பழங்களை கொண்டுவந்து போட்டியில் சாப்பிடத் தருவார்.

பசங்க சாப்பிட்ட எல்லா பழங்களுமே தரத்தில் நம்பர் 1. அப்படின்னா அதன் விதைகளின் குவாலிட்டியப் பத்தி சொல்லவே வேணாம். அதில் விளையும் பழங்களும் சுவையாத்தானே.

ஜியாமெட்ரிக் ப்ரோபோர்ஷன் மாதிரி வருஷாவருஷம் டேஸ்ட் ஜாஸ்தியாகிட்டே போகும். கிராக்கியும் கூடுச்சு.

இந்த ஃபார்முலா தெரியாத பேராசை மகன்கள், விளைஞ்ச நல்ல பழங்களையெல்லாம் சந்தையில வித்துட்டு போனது வந்ததுன்னு விக்காத பழங்களை விதைச்சு அது மேலும் மேலும் தரம் குறைஞ்சிருச்சு.

பாரிக்கர்களின் பேராசையால் பரம்பரை பரம்பரையாக பேர் வாங்கித்தந்த தர்பூசணிகள் விவசாயம் வழக்கொழிஞ்சு போயிருச்சு.

கோவா முதல்வராக 4-ஆவது முறையா மனோகர் ‘பாரிக்கர்’ இன்று பதவியேற்றுள்ளார்.

பாதுகாப்புத்துறையை தாரைவார்த்துவிட்டுட்டு இந்தப் பதவிக்கு வந்து புதுசா என்னத்த சாதிக்கப் போறார் பாரிக்கர்?

பாக்கலாம் இவரு விளைய வைக்கப்போவது தரமான தர்பூசணியா இல்ல பாவக்காயான்னு!

Leave a Reply