தள்ளிப்போடும் எண்ணத்தைக் கிள்ளிப்போடு!

 தள்ளிப்போடும் எண்ணத்தைக் கிள்ளிப் போடுங்கள். ஏனெனில், தள்ளித் தள்ளிப் போடுவது நமது வேலைகளை மட்டுமல்ல; நமது வெற்றிகளையும் தான்!

ஆம்! இந்த உலகில், இயலாமல் தோற்றவர்களைவிட முயலாமல் தோற்றவர்களே அதிகம்! முயற்சிகள் தோற்கலாம். ஆனால், முயற்சி செய்வதில் நாம் தோற்று விடக்கூடாது.

காலம் கருதி இடத்தாற் செய்யின்
ஞாலம் கருதினும் கைகூடும்” என்றார் வள்ளுவர்.

எதையும் உரிய காலத்தில் செய்து முடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதே வெற்றி அடைவதற்கான முதற்படியாகும். விதைக்கப்படாத விதைகள் விருட்சமாவதில்லை, செதுக்கப்படாத கற்கள் சிலையாவதில்லை! செயலாக்கம் பெறாத சிந்தனைகள் முன்னேற்றத்தைக் கொடுப்பதில்லை!

ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை முந்தைய நாளே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். வேலைக்குத் தகுந்த நேரம்; நேரத்திற்குத் தகுந்த வேலை என்று ஒவ்வொரு வேலைக்கும் உரிய நேரத்தை ஒதுக்கிக் கொள்வதுடன், அந்தந்த வேலைகளை அந்தந்த நேரத்தில் உரிய விதத்திலும் உயர்வாகவும் முனைப்புடன் செய்து முடிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளிப் போட்டுவிட்டு, எனக்கு அதிர்ஷ்டமில்லை என அலுத்துக்கொள்பவர்களால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது.

ஏனென்றால் “நாளை” என்ற ஒன்றை நம்மால் எப்பொழுதும் சந்திக்க முடியாது. மேலும், நேற்று என்பது உடைந்த பானை; நாளை என்பது மதில்மேல் பூனை; இன்று மட்டுமே கையில் உள்ள வீணை. இதை உணர்ந்து கொண்டு உழைத்தால் மட்டுமே வெற்றிச் சிகரத்தை தொடரமுடியும்.

ஒரு பெரிய கல்லைத் தூக்குவது சிரமமாக இருக்கும்போது அதைச் சிறுசிறு துண்டுகளாக உடைத்துவிட்டால் அதை எளிதில் தூக்கிவிட முடியுமல்லவா? அதுபோலவே, பெரிய பெரிய வேலைகளை கண்டதும் அவற்றைப் பார்த்து மலைத்துவிடாமல், அதைச் சிறுசிறுப் பகுதிகளாகப் பிரித்து செய்யத் தொடங்கினால் போதும் எதனையும் செய்து முடித்துவிடமுடியும்.

காலங்கடத்தாமல் காரணங்களைத் தேடாமல் எதையும் காலமறிந்து, செய்து காலத்தை மதிப்பவர்களை, காலம் தனது தலை தூக்கி வைத்துக் கொண்டாடும்! ஆகவே வேலைகளை உடனுக்குடன் முடியுங்கள். வெற்றிமகுடம் உங்களுக்காக காத்திருக்கிறது!

– முனைவர் கவிதாசன்.

Leave a Reply