தகிக்கும் வெயிலில் தவிக்கும் வண்டலூர் விலங்குகள்

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்குகள் கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு அனல் காற்று வீசுவதால், வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள் வெப்பத்தால் அவதிப்பட்டு வருகின்றன.
வண்டலூர் பூங்காவினுள் அடர்ந்த வனமாக குளிர்ந்த காற்றை வீசிக் கொண்டு இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள்தான் அங்கு வசித்து வரும் விலங்குகள், பறவைகளுக்குப் பாதுகாப்பாக திகழ்ந்தன.
ஆனால் இப்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வர்தா புயலில் பறிகொடுத்து விட்ட சோகத்துடன் பாலைவனமாகக் காட்சியளித்துக் கொண்டு இருக்கிறது இந்த உயிரியல் பூங்கா. உயிரியல் பூங்காவின் இன்றையத் தோற்றம் காண்பவர் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும்.
பூங்கா முழுக்க குடை பிடித்தது போன்று, கிளைகளை விரித்து மரங்கள் பரப்பி இருந்த அழகைத் தற்போது காண முடியவில்லை. எங்கு பார்த்தாலும் அனல் கொதிக்கும் வெயில்.
பொதுமக்கள் நிழலுக்கு ஒதுங்குவதற்கு ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கும் தங்கும் ஓய்வு இடங்களில் அமர முடியாத அளவுக்கு அனல் வீசுகிறது.
கடும் வெயிலில் கலை மான்களும், புள்ளி மான்களும் தென்னங்கீற்றால் வேய்ந்த கூரையின் கீழ் மூச்சிறைக்க இளைப்பாறிக் கொண்டு இருக்கின்றன.
பறவைகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த கூண்டுகளின் வெப்பத்தைத் தணிக்க அவற்றின் மீது ஈரமான கோணிச்சாக்குகளைப் போட்டு அவற்றை பூங்கா ஊழியர்கள் அடிக்கடி தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.
கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த வெள்ளைப் புலிகளை காலை, மதியம், மாலை நேரங்களில் ஊழியர்கள் குளிப்பாட்டி விடுகின்றனர்.

யானை, ஒட்டகச் சிவிங்கி நிழலில் ஒதுங்கி ஓய்வெடுக்க போதிய வசதிகள் செய்யப்படவில்லை.

வெயிலில்தான் பரிதாபமாக நின்று கொண்டு இருக்கின்றன. மதியத்திற்கு மேல் யானைகளைக் குளிப்பாட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் குடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் குடிநீர் சுவையாக இல்லை. அந்தக் குடிநீர் பாதுகாப்பானது தானா என்ற கேள்வி எழுகிறது.
முன்பெல்லாம் காலை வரும் பொதுமக்கள் மதியம் பூங்கா நிழலில் தங்கி ஓய்வெடுத்து மாலை நேரத்தில் செல்வது வழக்கம். இப்போது அந்த வாய்ப்பு இல்லை.
பூங்காவினுள் போதிய மரநிழல் இல்லை. வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றி அந்த இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆனால் போதிய பராமரிப்பு இல்லை.

உயிரியல் பூங்காவானது 300க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்களைக் கொண்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே வனத்துறை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நிர்வாகத்தைச் சிறப்பாகக் கவனிக்க, இயக்குநர் உள்ளிட்ட போதிய பொறுப்பான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.
பூங்காவை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பது உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

‘மரங்கள் இல்லாத பூங்காவில் வெறுமை’
கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் வண்டலூர் பூங்காவிற்கு வருகை தந்து இருந்த குரோம்பேட்டை ஸ்ரீதேவி கூறியது:
எங்களால் நம்பவே முடியவில்லை. உயிரியல் பூங்காவுக்குள் நுழைந்து விட்டால் மர நிழலில் நடந்தபடியே முழு பூங்காவையும் சுற்றிப்பார்த்து விடுவோம். இப்போது எங்கு பார்த்தாலும் வெயிலாகவும், அனலாகவும் இருக்கிறது. மரங்கள் இல்லாத உயிரியல் பூங்கா வெறுமையாகக் காட்சி அளிக்கிறது. முன்பு இருந்த அழகையும், மரங்களையும் திரும்பப் பெற இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். மரங்கள் இல்லாத பூங்கா விலங்குகளுக்கு மட்டுமல்ல, இங்கு வருகை தரும் மக்களுக்கும் பேரிழப்பு என்றார்.
தனியார் பல்கலைக்கழக மாணவர் எம்.அருள் எட்மண்டு:
வெயில் நுழைய முடியாத அளவிற்கு நிழலைப் போர்வையாக போர்த்தி, அடர்ந்த குளிர் சோலையாக விலங்குகளைப் பாதுகாத்துக் கொண்டு இருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், வர்தா புயல் காரணமாக ஒரே நாளில் வேரோடு சரிந்து விழுந்து
விலங்குகளுக்கும், பூங்காவிற்கும் பேரிழப்பை ஏற்படுத்தி விட்டது.
அரசும், உயிரியல் பூங்கா நிர்வாகமும் மறுபடியும் இங்கு மரங்களை அதிக அளவில் நட வேண்டும். தனிப்பட்ட முறையில் விரும்பும் பொதுமக்களிடம் இருந்து பூங்காவினுள் ஒரு மரக்கன்று நடுவதற்கு பராமரிப்புத் தொகையாக ரூ. 1,000 வசூலித்தால் என்னைப் போன்றவர்கள் வழங்கி ஊக்குவிக்கத் தயாராக உள்ளோம். இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் பூங்கா புத்துணர்வு பெறும் என்றார்.

Leave a Reply