ஜல்லிக்கட்டு ஏன் தேவை? – சில கேள்விகள்… சில பதில்கள்..

ஜல்லிக்கட்டு ஏன் வேண்டும், ஏன் வேண்டாம் என்பது தொடர்பாக ஒவ்வோராண்டும் விவாதங்கள் தொடர்ந்தபடி உள்ளன. விலங்குநல ஆர்வலர்கள் குறிப்பிடுவதுபோல விலங்கையோ அல்லது சிலர் கவலையுறுவதைப் போல மனிதர்களையோ துன்புறுத்துவதே ஜல்லிக்கட்டு என்ற பார்வை எத்தனை தூரம் சரி? மற்றொருபுறம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானவர்கள் கூறுவதுபோல, அது வெறும் வீர விளையாட்டு மட்டும்தானா? இந்த இரண்டு பார்வைகளுமே ஒட்டுமொத்த விஷயத்தைக் கவனப்படுத்தவில்லை. ‘ஜல்லிக்கட்டு வேண்டாம்’ என்று அவசரப்பட்டு முடிவுக்கு வரும் முன், ஜல்லிக்கட்டு என்ற நிகழ்வின் பின்னணியை முதலில் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்:

மாட்டைப் பற்றித் தெரிந்தது என்ன?

சிந்துச் சமவெளி நாகரிகத்தின் மொகஞ்சதாரோ பகுதியில் கிடைத்த ஒரு முத்திரையில் ஜல்லிக்கட்டுக் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. கல்லால் ஆன அந்த முத்திரை 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது. 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியங்களிலும் ஜல்லிக்கட்டு விவரிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் ஏறு தழுவுதல்.

மாடு வீட்டு விலங்காகப் பழக்கப்படுத்தப்பட்ட தொன்மையான நாகரிகங்களில் முதன்மையானது இந்தியா. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்து, இந்திய உள்ளூர் மாட்டினங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன.

மாடுகளின் நலனுக்காகக் குரல் கொடுக்கும் விலங்குநல ஆர்வலர்களுக்கு உள்நாட்டு மாட்டினங்கள், அவை வளர்க்கப்படும் முறை, அவற்றின் முக்கியத்துவம் பற்றி என்ன தெரியும்? தோலின் மேற்புறம் கறுப்பு நிறம் விரவிய காரிக் காளைக்கும், எருமை மாட்டுக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியுமா என்று கேட்கிறார்கள் விவசாயிகள். ஆண்டு முழுவதும் மாடுகளுடனும் சாணியுடனும் உழலும் விவசாயிகளைவிட, வேறு யாருக்கு மாடுகளைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை இருக்க முடியும்? உள்ளூர் மாட்டினங்களை நாம் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறோம்?

இந்தியாவில் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை 130-க்கும் மேற்பட்ட உள்ளூர் மாட்டினங்கள் இருந்தன. இன்றைக்கு 37 மாட்டினங்களே உள்ளன. தமிழக மாட்டினங்களான காங்கேயம், புளியகுளம் போன்ற மாட்டினங்களின் மேம்பட்ட இனப்பெருக்கத்துக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அடிப்படையாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு முடக்கப்படுவது இந்த மாட்டினங்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்கிறார், சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறங்காவலர் ஹிமாகிரண்.

உழுவதற்கு, போக்குவரத்துக்கு, விவசாயத்துக்கு ஊட்டம் தரும் எருவுக்குத் தேவையான சாணம், பஞ்சகவ்யம், அமிர்தக்கரைசல் தயாரிப்பதற்கு, சத்து நிறைந்த ஏ2 பாலைப் பெறுவதற்கு என மனித சமூக வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உள்ளூர் மாடுகள் ஆதாரமாகத் திகழ்ந்துவந்துள்ளன. டிராக்டர், பம்ப் செட் உள்ளிட்ட இயந்திர வேளாண்மையின் ஆதிக்கத்தால் உள்ளூர் மாட்டினங்களை வளர்ப்பது ஏற்கெனவே நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு விழாக்களும் நசுக்கப்படுவது உள்ளூர் மாட்டினங்களுக்குச் சாவு மணி அடிப்பதாகவே அமையும். அவற்றைச் சார்ந்திருக்கும் விவசாயிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும்.

ஜல்லிக்கட்டில் என்ன நடக்கிறது?

காளையைக் கொடுமைப்படுத்தும், காளையை வதைக்கும் விளையாட்டு அல்ல ஜல்லிக்கட்டு. ஒரு மனிதர் காளையின் திமிலைப் பிடித்துக்கொண்டு 20-30 அடி தூரத்துக்கு, அதிகபட்சமாக 10-20 விநாடிகள் ஓடுவதுதான் ஜல்லிக்கட்டு. அதனால்தான் ஏறு தழுவுதல் எனப்பட்டது. வாய்ப்பிருந்தால், பரிசுத்தொகை கட்டப்பட்ட துண்டைக் கொம்பால் குத்தப்படாமல் அவிழ்ப்பதில்தான் ஜல்லிக்கட்டின் லாகவம் அடங்கியிருக்கிறது. சினிமா நாயகர்கள் போலியாகச் சித்தரிப்பதைப் போல, எந்த ஊரிலும் மாட்டைத் தனியாகப் பிடிக்க யாரும் முயற்சிப்பதில்லை; கொம்பைப் பிடித்து அடக்க முயற்சிப்பதும் இல்லை. காளைகளைப் போற்றும் திருவிழா ஜல்லிக்கட்டு. ஒரு காளை ரத்தம் சிந்தினால்கூட ஜல்லிக்கட்டு நிறுத்தப்படும் என்பது விதி.

பொலி காளைகள்தான் ஜல்லிக்கட்டில் விடப்படுகின்றன. வெற்றி பெறும் காளைகள் உள்ளூர் பசுக்களுடன் இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தப் படுகின்றன. இந்த இரண்டு அம்சங்களுக்காக மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன. கிராமங்களில் கோயில் காளைகள் இலவசமாக இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டில் இயல்பாக வெற்றிபெறுபவை மரபணுரீதியில் வீரியமிக்க காளைகளே. இதன் மூலம் உள்ளூர் மாட்டினங்களின் மரபணு வளம் பராமரிக்கப்படுகிறது. வீரியமிக்க காளைகளின் குட்டிகளையே விவசாயிகள் அதிகம் விரும்புகிறார்கள். அந்த வகையில் ஒரு பகுதியிலுள்ள காளைகளை, ஊருக்குக் காட்சிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு ஜல்லிக்கட்டு. அதன் தொடர்ச்சியாக மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் மாட்டுச் சந்தைகள் நடப்பதைக் கவனிக்க வேண்டும்.

ஒரு உள்ளூர் மாட்டினத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி, அது உருவான நிலப்பகுதியில், அதன் இயல்புடன் இனப்பெருக்கம் செய்வதுதான் (In-situ conservation) என்கிறது ஐ.நா. சபையின் உயிர் பன்மய சாசனம். இந்த சாசனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதன்படி உணவு, விவசாய மேம்பாட்டுக்காக உள்ளூர் கால்நடைகளைப் பெருக்குபவர்கள், அவற்றைப் பயன்படுத்துபவர்கள் ஓர் உயிரினத்தின் மரபணு வளத்தைப் பாதுகாக்கிறார்கள் என்பதை அங்கீகரித்து, அவர்களுடைய பாரம்பரிய அறிவு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உணர வேண்டும். உள்ளூர் மாட்டினங்கள் நம் மரபார்ந்த சொத்து.

யார் எதிர்க்கிறார்கள், என்ன காரணம்?

புத்தாயிரம் ஆண்டுக்குப் பின்னர் பெடா (PETA), புளூ கிராஸ் போன்ற பெருநகரங்களை மையமாகக்கொண்ட விலங்குநல அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட பார்வையே ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என்பது. காளைகள் துன்புறுத்தப்படுவதால், அதைத் தடை செய்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர்கள் செயல்பட்டார்கள். ஆனால், உண்மை என்னவோ அவர்கள் சொல்வதற்கு மாறாக இருக்கிறது.

அவர்கள் சொல்வதுபோல ஜல்லிக்கட்டில் மாடுகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன என்றால், அந்தச் சம்பவங்கள் ஏன் மிகப் பரவலாக இல்லாமல், குறைவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன? அல்லது அது எப்படி அதிக அளவில் ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வராமல் போகிறது? அதேநேரம், காளைகள் – காளைக் கன்றுகள் இறைச்சிக் கூடத்துக்குப் பெருமளவு செல்வதைத் தடுப்பதில் அவர்களுடைய அக்கறை இவ்வளவு வீரியமாக ஏன் வெளிப்படவில்லை? ஜல்லிக்கட்டு நடக்காத நாட்டின் மற்ற பகுதிகளில் காளைக் கன்றுகள் இறைச்சிக்கூடத்துக்குத்தான் பெருமளவு செல்கின்றன.

அதற்குத் தடை விதிக்குமாறு அவர்கள் கூறவில்லையே! “கோயிலில் யானைகள் கட்டி வைத்து பயன்படுத்தப்படுவதைப் பற்றி இந்த அமைப்புகளின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்புகிறார் மூத்த சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன்.

ஜல்லிக்கட்டுத் தடைக்கு வேறு பின்னணி உண்டா?

உலகமயமாக்கலுக்குப் பின்னர் இது போன்ற உள்ளூர் கலாச்சார நிகழ்வுகளை ஏதாவது ஒரு வழியில் வலிந்து நிறுத்துவதற்கு உலக நிறுவனங்கள் முயற்சிப்பதை உற்று நோக்க வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கத்திய மாடுகளுடன் பெரும் பால் பண்ணைகளை அமைப்பதற்கு, உள்நாட்டு மாட்டினங்களைக் கொண்டாடும் ஜல்லிக்கட்டைப் போன்று ஆழ வேரூன்றிய விழாக்கள் மிகப் பெரிய தடையாக உள்ளன. உள்ளூர் மாட்டினங்கள் மீதான பிடிப்பை, தங்களுக்கு எதிரானதாகப் பன்னாட்டு வணிக பால் நிறுவனங்கள் கருதுகின்றன.

வளரும் நாடுகளின் விவசாயத்தில் விதை உற்பத்தி, விதை விற்பனையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோ முயற்சிப்பதைப் போல, ஜெர்சி, ஃபிரீசியன், பிரவுண் ஸ்விஸ் போன்ற வெளிநாட்டு மாட்டினங்களைப் புகுத்துவதற்குப் பல பன்னாட்டு நிறுவனங்கள் தீவிரமாக முயற்சித்துவருகின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவை ஊடுருவுவதற்குப் பண்பாட்டு நிகழ்வுகளை நிறுத்துவது, அது சார்ந்த வெறுப்பைப் பரவலாக்குவது இவர்களுடைய ஒரு உத்தி.

இனிமேல் ஜல்லிக்கட்டு நடக்க வழியே இல்லை என்றால், என்ன ஆகும்?

ஜல்லிக்கட்டு போன்ற உள்ளூர் பண்பாட்டு – உயிர் பன்மயப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தடுக்கப்படுவது, இயற்கையான இனச்சேர்க்கை மூலம் மரபணு வளம் மிகுந்த நம் நாட்டு மாட்டினங்களின் எண்ணிக்கை பெருகுவது தடுக்கப்படும். இதற்கு மாற்றாகக் கூறப்படும் செயற்கைக் கருவூட்டலை மேற்கொள்வதற்கு அரசையோ, தனியார் நிறுவனங்களையோ விவசாயிகளைச் சார்ந் திருக்க வைத்திருப்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் மாட் டினங்களின் மரபணு வளமும் வீழ்ச்சியடைகிறது.

ஜல்லிக்கட்டை முறைப்படுத்தி நடத்தக் கூடாதா?

மாட்டுக்கும் மனிதர்களுக்கும் பங்கம் இல்லாமல் ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்தில்லை. அதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகளை வரையறுத்து முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மாறாக, ஜல்லிக்கட்டையே ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்துவது முறையல்ல!

– ஆதி வள்ளியப்பன், valliappan.k@thehindutamil.co.in

Leave a Reply