கழுமரம்

கழுமரம்!

கழுவேற்றுதல் – பழங்காலத்து தண்டனைகளிலேயே கொடூரமானது! அக்கொடூரச் செயல் பற்றி எழுதுவதற்கும் மனம் வரவில்லை. இருப்பினும்… கூர்மையாக சீவி, நிறைய எண்ணெய் தடவப்பட்ட ஒரு மரமே கழுமரம் என்னும் கொலைக் கருவி. அக்கழுமரத்தில் குற்றாவளியின் ஆசனவாயை சொருகி விடுவார்கள். கழுவின் கூர்மையாலும், எண்ணெயின் வழுக்கலாலும் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். இதுதான் கழுவேற்றுதல்.

7ம் நூற்றாண்டில், சைவ மதத்தினரின் மதவெறியாட்டத்தால் ஆயிரக்கணக்கான சமண, புத்த மதத்தினர் இவ்வாறு கழுவேற்றப்பட்டார்கள். அவர்கள் பெருமையோடு செதுக்கி வைத்த சிற்பங்களும், தீட்டிய ஓவியங்களுமே இதற்கு சாட்சியாகத் திகழ்கின்றன.

200 – 300 ஆண்டுகள் முன்பு வரையிலும் கழுவேற்றும் தண்டனை வழக்கத்தில் இருந்துள்ளது. கரிசல் எழுத்தாளர் கி.ரா அவர்கள் ‘கோபல்ல கிராமம்’ புதினத்தில் இத்தண்டனை பற்றி விரிவாக எழுதியுள்ளார். “உடனே கொல்லுகிற முறை, பல நாள் கழித்து வேதனையால் துடித்து சாகும் முறை, உடம்பில் எந்த இடத்தில் குத்தி எந்த இடத்தில் வாங்குவது என கழுவேற்றத்தில் பல முறைகள் உண்டு”, என்கிறார் கி.ரா.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், ஈரோட்டில் அவர் பார்த்த ஒரு கழுமரத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். “அநேகமாக நான் அறிந்தவரை தமிழ்நாட்டில் இங்கே மட்டுமே கழுமரம் இருக்கிறது”, என்கிறார் அவர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், கோவில்பட்டிக்குப் பக்கத்தில் நள்ளி என்னும் ஊருக்கு என் குல தெய்வம் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கே ஊருக்கு வெளியே இருக்கும் இன்னொரு கோவிலில் கழுமரம் போன்றத் தோற்றமுடைய, பீடத்தில் வீற்றிருந்த தெய்வத்தைக் கண்டேன். சந்தனம் குங்குமம் இட்டு மாலைகளெல்லாம் அணிவிக்கப்பட்டிருந்தது. அது திருவிழா நேரமென்பதால், அருகில் சென்று பார்க்க முடியவில்லை.

மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் அங்கு செல்ல நேரிட்டது. இது திருவிழா நேரமில்லை என்பதால், சுதந்திரமாக அதனருகில் செல்ல முடிந்தது. ஆறடிக்கும் குறைவான உயரம். ஆண்டாண்டு காலமாக மழையிலும் வெயிலிலும் நின்று கொண்டிருக்கிறது. தொட்டுப் பார்த்த போது அது மரத்தினால் ஆனது எனத் தெரிந்தது. அப்போதே உறுதி செய்துக் கொண்டேன் அது கழுவேற்றக் கொலைக்கருவியான கழுமரமென்று.

கடவுளாக மாற்றம் பெற்றுள்ள கழுமரத்தின் தற்போதையப் பெயரைய் அறிய முடியவில்லை. இதில் கழுவேற்றப்பட்டவன் யார்? அவன் செய்த குற்றமென்ன? எப்போது கொல்லப்பட்டு கடவுளானான்? இக்கேள்விகளுக்கான விடை வரலாற்றிற்கு மட்டுமே தெரியும்.

– தேடல்

Leave a Reply