கடவுள் கண்ட தொழிலாளி – விவசாயி

லாபகரமாக மாறுமா வேளாண் தொழில்? இன்று உலக விவசாயிகள் தினம்

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும். ஆனால் எத்தனை பேர் அதைப் புரிந்து வைத்திருக்கின்றனர்?
குறிப்பாக நெல் தானிய மகசூல் கூட எதிர்காலத்தில் குறைந்து வரும் அவலம்தான் காணப்படுகிறது.

நெல் விளைச்சலுக்கு முன் உள்ள பிரச்னைகள்

நீர்ப் பற்றாக்குறை, பொய்த்து போகும் மழை அல்லது கூடுதல் மழைப்பொழிவு, காலநிலை மாறுதல், பயிர் விளைச்சல் சீர்குலைதல், பூச்சிகள் தாக்குதல்… எனப் பல்வேறு இன்னல்களை தாண்டித்தான் ஒவ்வொரு விவசாயியின் உழைப்பும் இருந்து வருகிறது.

நெல் விளைச்சலுக்கு பின் நிலவும் பிரச்னைகளைச் சந்திக்கும்போது, விவசாயிகள் நொந்து நூலாகி விடுகின்றனர். வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள் படும் பாட்டுக்கு உரிய மதிப்பை யாரும் தருவதில்லை.

இந்த பிரச்னைகள் ஒரு பக்கம் இருந்து வந்தாலும்,வளர்ந்து வரும் நமது நாட்டின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய தொழிலை நாம் விரிவடைய செய்ய வேண்டும். தற்போது விளைநிலங்கள் வீட்டு நிலங்களாக மாறிவரும் சூழ்நிலையில், விவசாய வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. இன்றைய இளைஞர் சமுதாயத்தினரும் விவசாய தொழிலை விருப்பத்துடன் செய்ய முன் வருவதில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம் குறைந்தது 5 சதவீதமாவது வளர வேண்டியது அவசியம் என்பதால் விவசாயத்தை முற்போக்கு பாதையில் எடுத்து செல்ல இளையதலைமுறையினர் விவசாய தொழிலில் ஈடுபட வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில், குறிப்பாக விவசாய தொழில் வணிக ரீதியில் நவீன மயமாக்கப் பட்டு வருகிறது. தற்போதைய நெல்ஆராய்ச்சியின் அடிப்படை நோக்கம் தற்போதும், வருங்காலத்திலும், நெல் உற்பத்தியை அதிகப்படுத்துவதாகும். நீர்பற்றாக்குறை அதிகரித்து வரும் சூழ்நிலையில், சீனா, இந்தோனேசியா, இந்தியா போன்ற பல்வேறு ஆசிய நாடுகளில் நெல் உற்பத்தியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் மேலும் தொய்வு நிலை ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

எனவே நெல் உற்பத்தியையும், ஏற்றுமதியையும் அதிகரிக்கும் வகையில்

நெல்ரகங்களை பயிரிடவும், புதிய தொழில் நுட்பங்களை கடைபிடிக்கவும், பயிர் சாகுபடிக்காக செலவிடும் நேரத்தை கருவிகளின் உபயோகத்தால் குறைத்து மற்ற வேலைகளில் கவனம் செலுத்தி வருமானத்தைப் பெருக்கி கொள்ளவும் அரசு விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். இன்றைய இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க வேண்டும். நெல் சாகுபடிக்கேற்ப வேளாண் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டியது கட்டாயம்.

Leave a Reply

Your email address will not be published.