எது உங்களை தடுக்கிறது?

இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு வழக்கமான நாளில்தான், அந்த லாரி என் மீது மோதி, கால்கள் சிதைந்தது. ஓட்டுனர் மீது எந்த தவறும் இல்லை, அருகிலிருந்த தூண் மறைத்துக் கொண்டிருந்ததால் அவரால் நான் வருவதை கண்டுகொள்ள முடியவில்லை. அந்த பரபரப்பான காலை வேளையிலும் சுற்றி இருந்தவர்கள் என்னை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மணி 9.30 இருக்கலாம். மாலை 5.30 மணிக்கு காலில் அறுவைசிகிச்சை நடந்தது. டாக்டர்கள் முடிந்தவரை என் கால்களை காப்பாற்ற முயற்சித்தனர், ஆனால் முடியவில்லை. இது குறித்து டாக்டர்கள் என்னிடம் தெரிவித்தபோது, முன்கூட்டியே இதை என்னால் உணர முடிந்தது, மேலும் காலம் தாழ்த்த வேண்டாம் உடனே எடுத்துவிடுங்கள் என்றேன்.

எனக்கு முன்பிருந்த மிகப்பெரிய சவால், இந்த சூழ்நிலையை ஏற்றுக்கொள்வது. நடந்துவிட்டதை என்னால் மாற்ற முடியாது. எனக்கு இனி 2 வழிகளே இருந்தன, ஒன்று இதை நினைத்து அழுது புலம்பலாம், அல்லது இலகுவாக எற்றுக்கொண்டு அடுத்து நடக்க வேண்டியதைப் பார்ப்பது. நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். என்னைப் பார்க்க வருபவர்கள் வருத்தமுற்ற போதிலும், நான் அவர்களை சிரிக்க வைக்க முயற்சித்துக்கொண்டு இருந்தேன்.

பிசியோதெரபி பயிற்சிகளை முறையாக முடித்து, மீண்டும் நடக்க துவங்கினேன்.
எனக்குள் இருந்த ஒரே பயம், மீண்டும் என்னால் பேட்மின்டன் விளையாட முடியுமா எனபது மட்டுமே. சிறுவயது முதல் நான் கொண்டிருந்த கனவு அது. நடப்பதில் சிறு சிரமம் இருந்தாலும், நல்லவேளையாக என்னால் விளையாட முடிந்தது. சில கார்ப்பரேட் போட்டிகளில் ஜெயிக்க ஆரம்பித்தேன். நண்பர்களின் உந்துதலால் தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு சில பதக்கங்களை வெல்ல முடிந்தது. இதோ இந்தமுறை இங்கிலாந்தில் நடைபெற்ற ஊனமுற்றோருக்கான பேட்மின்டன் உலகக்கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்று இருக்கிறேன். தினமும் 5 மணிநேரம் பேட்மின்டன் பயிற்சி, கணிப்பொறி பொறியாளராக வேலை செய்துகொண்டு, ஆழ்கடல் நீச்சல் (Scuba Diving) பயிற்சிகளை முடித்துவிட்டேன், நிறைய பயணங்கள் என இந்தியா முழுக்க சுற்றிவிட்டேன்.

“எப்படி உங்களால் இவ்வளவு விசயங்களைச் செய்ய முடிகிறது” என்று என்னிடம் கேட்கும்போதெல்லாம், அவர்களிடம் நான் திருப்பிக் கேட்பது இது ஒன்றே,
ஏன் முடியாது, எது உங்களை இவைகளை செய்ய விடாமல் தடுக்கிறது..?

இனியவை பகிர்வோம்

Leave a Reply