உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள்

​♥உங்கள் வீட்டிற்கு வரும் அல்லது நீங்கள் செல்லும்  #உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள்
♥வீட்டுக்கு வரும் உறவினர்களையும், விருந்தினர் களையும் வரவேற்று, உபசரித்து பேசுவதில்கூட நிறைய கவனம் தேவைப்படுகிறது. அவர்களிடம் எதை பேசுவது என்பதைவிட, எதை பேசக்கூடாது என்பது ரொம்பவும் கவனிக்கத்தக்க விஷயம்.
♥உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் பற்றி நாம் இங்கே பேசுவோம்!
#பெண்ணின்_திருமணம்:
♥திருமண பருவத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலான வீடுகளில் இருக்கிறார்கள். பெண்ணின் திருமணம் பற்றி அவர் களது பெற்றோரிடம் பக்குவமாக பேசவேண்டும்.
> உங்கள் பெண்ணிற்கு திருமணம் எப்போது?
> ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை?
> இன்னும் எவ்வளவு நாள் உங்கப் பெண்ணை வீட்டில் வைத்திருக்கப் போகிறீர்கள்?
>என்றெல்லாம் பெரிய அக்கறை உள்ளவர் போல கேட்பது அவர்களது மனதை நோகடித்துவிடும்.
♥அது பற்றி விசாரிக்க நேர்ந்தால் அல்லது அது பற்றி அவர்களே உங்களிடம் கூறினால், ‘ எனக்குத் தெரிந்த நல்ல வரன் இருந்தால் நானும் சொல்கிறேன். அதை பற்றி கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்று அவர்களுக்கு ஆறுதலாக பேசுங்கள்.
♥ ஏனெனில் திருமணமாகாத பெண்ணை வீட்டில் வைத்திருப்பவர்கள் ஏற்கனவே மனக்கஷ்டத்தில்தான் இருப்பார்கள். மகளுக்கு வயது அதிகரித்துக்கொண்டே போகிறதே என்ற கவலை அவர்கள் மனதை உறுத்திக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அக்கறையாக கேட்கும் கேள்வி அவர் களுக்கு வேதனை தரக்கூடியதாக மாறிவிடக்கூடாது.
#குழந்தை:
♥திருமணம் முடிந்தவுடன் அடுத்து எல்லோரும் கேட்கும் கேள்வி, ‘ஏதாவது விசேஷம் உண்டா?’ என்பதுதான் 

சில தம்பதிகளுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கலாம். சிலருக்கு வேறு ஏதாவது எதிர்கால திட்டம் இருக்கலாம். இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் நீங்கள் ஏதாவது கேள்வி கேட்டு வைத்தால் அதற்கு பதில் சொல்ல அவர்களுக்கு சங்கடமாக இருக்குமல்லவா? 

குழந்தை இல்லத பெண்களின் வலியை புரியவைக்கமுடியாது… உங்கள் கேள்வி மேலும் காயப்படுத்தலாம்.
#குடும்பவருமானம்:
♥ஒருவர் மீது நாம் அதிக அக்கறை செலுத்துகிறோம் என்ற உரிமையில் அவரிடம் வருமானத்தைப் பற்றி கேட்பது தவறு. குடும்பத்தில் யார் யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? அவர் களது மொத்த வருமானம் எவ்வளவு? என்பன போன்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது. 
♥அவர்கள் வருமானத்தை தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை எப்போதும் இருக்கவேண்டும். ஏன்என்றால் இந்த சம்பள விஷயத்தை கேட்டுவிட்டு சும்மா இருக்கமாட்டோம். ஒன்று ‘இவ்வளவுதானா?’ என்போம். இல்லாவிட்டால் ‘அவ்வளவு சம்பளமா?’ என்று ஆச்சரியப்படுவோம். இந்த இரண்டு பதிலுமே சம்பந்தப்பட்டவர்களை எரிச்சலடையச் செய்யும்.
#உத்தியோகம்:
♥எல்லா வீடுகளிலும் எதிர்பார்த்த வேலை கிடைக்காத இளைஞர்களோ, இளம்பெண்களோ இருந்துகொண்டிருப்பார்கள். அந்த கவலை, குடும்பம் முழுக்கவே இருந்துகொண்டிருக்கும். சிலர் அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ‘உங்கள் மகன் எங்கே வேலை செய்கிறான்?’ என்று ஆரம்பிப்பார்கள்.
♥‘அவனுக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை’ என்று பெற்றோர் சொன்னால் ‘ஏன் கிடைக்கவில்லை? அவன் நல்ல மதிப்பெண் பெறவில்லையா? மகனுக்கு வேலையில்லாவிட்டால் உங்கள் குடும்பம் கஷ்டப்படுமே?’ என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்டு அவர்களை வெறுப்பேற்றிவிடுவார்கள்.
#அந்தரங்கம்:
♥ஒருவருடைய அந்தரங்க வாழ்க்கை என்பது ரகசியமானது. நீங்கள் அவருக்கு மிக நெருக்கமானவர் என்பதை காட்டிக்கொள்ள அவரது அந்தரங்க வாழ்க்கையை பற்றி கேள்விகேட்பது நியாயமில்லை. அவர் திருமணத்திற்கு முன்பு யாரையாவது காதலித்து தோற்றிருக்கலாம். அதை அவரது புது மனைவி முன்னால் வைத்து பேசுவதும் சரியானதல்ல.
♥ அதுபோல் சிலர், குழந்தைகள் முன்னால்வைத்து அவர்களது தந்தையின் கடந்த கால காதல் விஷயங்களை சுவாரஸ்யமாக பேசுவார்கள். அதுவும் யாருக்கும் பிடிக்காத பேச்சாகும்.
#கடந்தகாலவாழ்க்கை:
♥கடந்தகால போராட்டங்களை மறந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பவரிடம் திரும்பத் திரும்ப அவைகளை நினைவுபடுத்தும் விதத்தில் விசாரிப்பது, கேள்விகள் கேட்பது தவறு. உன்னுடைய முதல் கணவர் என்ன செய்கிறார்? உன்னைப் போல ஒரு பெண்ணோடு வாழ அவருக்கு கொடுத்து வைக்கவில்லை என்பது போன்ற ஆதங்கம், அங்கலாய்ப்பை எந்த பெண்ணும் ரசிப்பதில்லை. 
♥எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதைப் பற்றிய விசாரணை நமக்கெதற்கு என்று ஒதுங்கியிருப்பதே நல்லது.
♥‘நீ விவாகரத்து பண்ணிட்டியே உன் முதல் மனைவி, அவளை நான் நேத்து பார்த்தேன். பாவம் ரொம்ப நொந்துப் போயிருக்கா. எல்லாம் அவ தலையெழுத்து’ என்று இரண்டாவது மனைவி முன்னால் வைத்து அவளது கணவரிடம் நொந்துகொள்வதும் தவறு.
♥ அப்படி பேசும்போது இரண்டாவது மனைவிக்கு அச்சம் ஏற்படும். ‘இந்த ஆளே நம் கணவரை முதல் மனைவியிடம் கொண்டுபோய் மீண்டும் இணைத்துவிடுவார் போல் தெரிகிறதே!’ என்று நினைத்துவிடுவாள்.
♥இரண்டாம் திருமணம் செய்துகொண்ட உறவினரோ, நண்பரோ யாராக இருந்தாலும் அவர்களிடம் எதை பேசவேண்டும் என்று ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையோடு பேச்சை நிறுத்திக் கொள்ளவேண்டும்.
#மருமகளின்தாய்வீடு:
♥புகுந்த வீட்டினர் தன்னுடைய பிறந்த வீட்டை மதிக்க வேண்டும் என்று எல்லா பெண்களும் விரும்புவார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் அந்த வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும்.
♥மருமகளின் பிறந்த வீட்டைப் பற்றி வருவோர் போவோரிடம் தேவையற்ற விஷயங்களை பேசும் மாமியார்களால் குடும்பத்தின் நிம்மதி குலையும். அதுபோல் தன் வீட்டில் போய் மாமியாரை குறைசொல்வதையும் பெண்கள் தவிர்க்கவேண்டும். எதை பேசக்கூடாது என்பதில் மாமியாரும், மருமகளும் கவனமாக இருந்தால்தான் அந்த குடும்பத்து நிம்மதியை காப்பாற்ற முடியும்.
#பாகப்பிரிவினை:
♥எல்லா குடும்பங்களிலும் பாகப்பிரிவினை நடக்கும். அதில் ஒரு சிலர் பிரச்சினை வேண்டாம் என்பதற்காக விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்கள். அது அவர்கள் இஷ்டம் என்று விட்டுவிடவேண்டும். தேவையில்லாமல் அதுபற்றி பேசி, குட்டையைக் குழப்பும் செயலில் ஈடுபடக்கூடாது.
♥ சொத்து விவகாரம் ஒரு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட விஷயம். அதில் அடுத்தவர்கள் தலையிடுவது அவசியமில்லாதது. எவ்வளவு நெருங்கிய உறவினராக இருந்தாலும் நம்முடைய எல்லை எதுவரை என்பதை புரிந்துகொண்டு நடக்க வேண்டும். அவர்களாக தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டால் மட்டுமே அதுபற்றி பேசவேண்டும்.
#சோகமானநிகழ்வுகள்:
♥எல்லோரும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் ஏதேனும் சோகமான நிகழ்ச்சியைப் பற்றி பேசி எல்லோரையும் கலங்கடிப்பது ஒரு சிலருக்கு கைவந்த கலை. உள்நோக்கம் எதுவும் இல்லாவிட்டாலும் பேசத் தெரியாமல் பேசி வம்பை விலைக்கு வாங்கக்கூடாது. என்றோ நடந்த சோகத்தை மீண்டும் மீண்டும் கிளறவேண்டியதில்லை. அதை வேகமாக மறக்க, நம்மால் முடிந்தால் உதவவேண்டும். இல்லையேல் சும்மா இருந்துவிடவேண்டும்.
#உடல் நிலை:
♥ஒருவருடைய உடல் நிலையை பற்றி தொடர்ந்து அவரிடம் பேசி நோகடிக்கக்கூடாது. அதுபோல் பலர் முன்னிலையில் வைத்து நோய் பற்றி விசாரிப்பதும் தவிர்க்கப்படவேண்டும். தான் நோயாளி என்பதை எல்லோரும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏன்என்றால் ஒருவர் நோயாளி என்றால் அவரது குடும்பத்தினரும், அவரது டாக்டரும் அதை பற்றி அறிந்தால்போதும். ஊரில் உள்ள அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
♥பேசுவதற்குதான் வாய். ஆனால் என்ன பேசுவது, எந்த இடத்தில் எப்படி பேசுவது, யாரிடம் எப்படி எதை பேசுவது என்ற எல்லைகளை வகுத்துக் கொள்ளவேண்டும். விருந்தோம்பலில் இதுவும் ஒரு முக்கிய அங்கம் என்பதை மறந்துவிடக்கூடாது.

Leave a Reply