இந்திய தேசியக் கொடி பதித்த மிதியடி விற்பனை -அமேசான்

இந்திய தேசியக் கொடி பதித்த மிதியடி. மன்னிப்பு கேட்டது அமேசான்

அமேசான் இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி பதித்த மிதியடி விற்பனை செய்வதாகக் கூறப்பட்டிருந்த இணைப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான, அமேசான் பல்வேறு தரப்பட்ட பொருட்களை இந்தியா உள்பட உலகம் முழுவதும் விற்பனை செய்துவருகிறது. இந்நிலையில், அமேசான் இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி பதித்த மிதியடி விற்பனை செய்யப்படுவதாக, சில நாட்கள் முன்பாக விளம்பரம் வெளியிடப்பட்டது.

அமேசானின் கனடா பிரிவு தளத்தில் இந்த விளம்பர இணைப்பு தரப்பட்டது. அந்த மிதியடி பார்ப்பதற்கு, இந்திய தேசியக் கொடியைப் போலவே அச்சு அசலாகக் காட்சியளித்தது. இதையடுத்து, பல தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அமேசான் நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினார். இல்லாவிட்டால், அமேசான் ஊழியர்களுக்கு, விசா வழங்கப்படாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதையேற்று, அந்த மிதியடி விற்பனை செய்யப்படும் விளம்பரம் மற்றும் இணைப்பு ஆகியவற்றை, அமேசான் இணையதளம் தற்போது நீக்கியுள்ளது. அமேசானின் கனடா பிரிவு தளத்தில், பல நாட்டு தேசியக் கொடிகளின் உருவம் பதித்த மிதியடிகள் விற்பனை செய்யப்படுவது வாடிக்கை. ஆனால், இந்திய தண்டனை சட்டப்படி, தேசியக் கொடியை தனிப்பட்ட, வர்த்தக காரணங்களுக்காகப் பயன்படுத்தினால் தண்டிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Newstig

Leave a Reply