ஆந்திராவில் களைகட்டிய சேவல் பந்தயம்: 3 நாட்களில் ரூ.900 கோடி

இந்த ஆண்டு

பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலத்தில் சேவல் பந்தயம் களைகட்டி உள்ளது. போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல் என இந்த 3 நாட்களில் மட்டும் ரூ. 900 கோடி வரை பந்தயப் பணம் வசூலாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை போன்று ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்கு சேவல் பந்தயங்கள் பிரசித்தி பெற்றவை.

ஆந்திர மாநிலத்தில் கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் சேவல் பந்தயங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், பிரபல தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் கலந்துகொள்வதால், சில இடங்களுக்கு நட்சத்திர அந்தஸ்தும் உண்டு.

சேவல் பந்தயத்துக்கென்றே பிரத்யேகமாக சேவல்கள் வளர்க்கப்படுகின்றன. முந்திரி, பாதம், பிஸ்தா கொடுத்து இவற்றை வளர்க்கின்றனர். நன்கு வளர்க்கப்பட்ட சேவல்களை விலைக்கு வாங்கியும் பந்தயத்தில் பங்கேற்கின்றனர்.

ஒரு பந்தய சேவல் தற்போது ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை விற்கப்படுகிறது. இவற்றை இணைய வழியாக வாங்கவும் போட்டி நிலவுகிறது. போகிப் பண்டிகையில் இருந்து 3 நாட்கள் வரை சேவல் பந்தயம் நடைபெறும்.

ஒரு பந்தயத்துக்கு ரூ. 1 கோடி முதல் 10, 15 கோடிகள் வரை பந்தயங்கள் கட்டப்படுகின்றன. இதனால் இந்த 3 நாட்களில் மட்டும் ரூ. 600 முதல் ரூ.900 கோடி வரை பந்தயப் பணம் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரங்களிலும், லட்சங்களிலும் கூட பந்தயங்களும் நடைபெறுகின்றன.

சேவல் பந்தயம் காரணமாக இப்பகுதிகளில் உள்ள தங்குமிடங்களில் ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை அறை வாடகை வசூலிக்கப்படுகிறது. இதேபோன்று பிரியாணி, சிக்கன், மட்டன், மீன் வகைகளின் விலையும் உயர்ந்துள்ளது. பணப் பரிமாற்றங்கள் பெருபாலும் இணைய வழியாக நடக்கிறது. சில இடங்களில் ஸ்வைப் மெஷின் மூலம் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது.

தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சேவல் பந்தயத்தில், சேவல்களின் கால்களில் கத்தி கட்டப்பட்டு சண்டையிட வைப்பதால், சேவல்கள் மிகவும் துன்புறுத்தப்படுவதாகவும் இதனால் இதற்கு தடை விதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் ஹைதராபாத் உயர் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். இதை ஏற்று பந்தயத்துக்கு உயர் நீதிமன்றமும் தடை விதித்தது.

எனினும், பாரம்பரியமாக பொங்கல் பண்டிகைக்கு நடத்தப்படும் விளையாட்டான சேவல் பந்தயத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், இம்முறை சேவல்களுக்கு காலில் கத்தியை கட்டாமலும், பந்தயம் கட்டாமலும் ஒரு விளையாட்டாக நடத்துகிறோம் என்றும் சேவல் பந்தயம் நடத்துவோர் சார்பில் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இதனால் முந்தைய தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து, சேவல் பந்தயத்தை நடத்த அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர், நீதிபதி சந்திராசூட் ஆகியோர் அடங்கிய தனி பெஞ்ச் இம்மனுவை விசாரித்தனர். சேவல் பந்தயத்துக்கு அனுமதி வழங்கி ஹைதராபாத் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவே தொடர்ந்து நீடிக்க வேண்டுமெனவும், இவ்விவகாரத்தில் புதிதாக தடை விதிக்க முடியாது எனவும் கூறி மனுதாரரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது

the hindu

சென்ற ஆண்டு நடந்த சம்பவம் கீழே:

உச்சநீதிமன்ற தடையை மீறி ஆந்திராவில் சேவல் சண்டை: தொடங்கி வைத்தார் எம்.பி!

ச்சநீதிமன்றத் தடையை மீறி ஆந்திராவில் சேவல் சண்டைபோட்டியை  தெலுங்கு தேச எம்.பி ஒருவர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டைப் போல ஆந்திராவில் கொலி பெண்டலு சேவல் சண்டைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சேவல் சண்டைக்கு தடையை நீக்க வேண்டுமென்று ஆந்திர  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மகா சங்கராந்தியை முன்னிட்டு நீதிமன்ற தடையை மீறி அங்கு சேவல் சண்டை நடத்தப்பட்டது.  மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எளுருவில் இந்த சேவல் சண்டைக்கு தெலுங்கு தேச எம்.பி. மெகந்தி வெங்கடேஷ்வர ராவ் ஏற்பாடு செய்து, அவரே சேவல் சண்டையையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

முன்னதாக ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த ஹைதரபாத் உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பரில் தடை விதித்திருந்தது. இந்த தடையை பின்னர் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. சேவல் சண்டை நடைபெறுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆந்திராவில் மகாசங்கராந்தியை முன்னிட்டு வடக்கு, கிழக்கு கோதாவரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இந்த கொலி பெண்டலு சேவல் சண்டை வெகு பிரபலம். கோடிக்கணக்கான  ரூபாய் சூதாட்டத்தில் புழங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

சண்டையில் ஈடுபடுத்தப்படும் சேவல்களின் கால்களின் சிறிய கத்தி கட்டப்பட்டு இருக்கும். இந்த சண்டையின் போது சேவல்கள் காயமடைவதாலும் சில சமயங்களில் இறந்து போவதாலும், சேவல் சண்டைக்கு தடை விதிக்க கோரி இந்திய விலங்குகள் நல அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

vikatan

Leave a Reply