ஃபிடல் காஸ்ட்ரோவும் முருங்கக்காயும்

கியூபாவின் புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ தனது வீட்டுத் தோட்டத்தில் முருங்கை மரம் வளர்த்து வருகிறார்! என்பதே அந்த செய்தி. அவர் எப்படி முருங்கை மரத்தை அறிந்தார்? என்பது பற்றி சுவாரஸ்யமான அதே சமயம் முக்கியத்துவம் வாய்ந்த தகவலைப் படித்தபோது ஆச்சர்யமும், பெருமிதமும் ஏற்பட்டது.

ஃபிடலின் உற்றத் தோழர் சே குவேரா பிரேசிலில் இருந்து முருங்கையை கியூபாவுக்கு அறிமுகப்படுத்தினாராம். ஆனால் அப்போதெல்லாம் பிடல் அதைப் பொருட்படுத்தவில்லை.

2010 ஆம் ஆண்டு வாக்கில் கியூபாவுக்கு அருகில் உள்ள ஹைட்டி தீவுகளில் இயற்கைப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. அதில் மீட்பு நடவடிக்கை எடுக்க முடியாமல் அங்கிருந்த நிர்வாகம் திண்டாடியது. கியூபா தனது மீட்புக் குழுவையும், மருத்துவர்களையும் அனுப்பி உதவியது. இருப்பினும் இயற்கைப் பேரழிவின் காரணமாக காலரா தொற்று நோய்த் தாக்குதலும் ஏற்பட்டு ஏராளமானோர் மாண்டு போயுள்ளனர்.

இந்த விபரம் அறிந்த காஸ்ட்ரோ மாண்டுபோகும் உயிர்களைக் காக்க வழி என்ன என்று தீவிரமாக யோசித்துள்ளார். கியூபாவில் உள்ள முக்கியமான நோய் எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை உடனடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறார். அந்த மக்களைக் காக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று அவருடன் விவாதித்திருக்கிறார். அப்போதுதான், மனிதர்களுக்கு முருங்கை மிகவும் எதிர்ப்பு சக்தியும், ஆற்றலும் தரக்கூடியது என்று அந்த நிறுவனத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

சற்றேறக்குறைய இரண்டு மணி நேரம் முருங்கை பற்றி முழு ஆராய்ச்சியே நடத்திவிட்டாராம் காஸ்ட்ரோ! இது இந்தியாவில் விளையும் பயிர் என்பதால் உடனடியாக அங்கு யாரையாவது அனுப்ப வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அந்த ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் – அவர் ஒரு பெண்மணி – தயங்காமல் தானே இந்தியா செல்வதாகக் கூறியுள்ளார்.

அரசின் ஒப்புதல் பெற்று இந்தியா வந்து தமிழகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சுற்றியிருக்கிறார் அவர். இங்குள்ள பல மருத்துவ ஆய்வு நிறுவனத்தினருடன் கலந்தாலோசனை செய்திருக்கிறார். அதிகஅளவு முருங்கை விதைகளை கப்பலில் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதன்படியே கணிசமான முருங்கை விதைகள் கியூபாவுக்குப் பயணமானது. இந்த அற்புதமான பயிரின் மகத்துவத்தை உணர்ந்ததால் காஸ்ட்ரோ தனது வீட்டுத் தோட்டத்திலேயே முருங்கையைப் பயிரிட்டு தானே தினமும் அதன் பராமரிப்பு பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி கியூப மக்களுக்கு முருங்கையின் முக்கியத்துவத்தை பற்றி தானே எழுதி ஊடகங்கள் மூலம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இப்போதும் அவரது பண்ணையில் முருங்கை முக்கிய மரமாக வளர்ந்து காய்கள் காய்த்துக் கொண்டிருக்கின்றன. கியூபர்களும் முருங்கை வளர்த்து வருகின்றனர்.

நமது பாரம்பரியமான முருங்கை இப்போது கியூப மக்களின் ஒரு முக்கிய உணவுப் பயிராகவும் மாறியிருக்கிறது.

காஸ்ட்ரோவின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு டெலிகிராப் பத்திரிகையில் இதைப் பற்றி சுவாரஸ்யமான கட்டுரை வரையப்பட்டுள்ளது. அதில் இருந்துதான் இதைப் பதிவு செய்திருக்கிறேன்.

புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மனித குலத்தின் வாழ்க்கை குறித்து ஆழமான அக்கறை கொண்டவர். விடுதலைக்கான போராட்டத்தின் தளபதியாக மட்டுமில்லை, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிடும் மகத்தான மனிதாபிமானியே அத்தகைய புரட்சியாளராக இருக்க முடியும் என்பதற்கும் அவரே சிறந்த எடுத்துக்காட்டு!

சர்வதேச விவகாரங்கள் முதற்கொண்டு முருங்கைக்காய் வரை அவரது கவனம் விரிந்து பரந்திருப்பதை நினைத்தால் பிரமிப்பாக உள்ளது. எல்லாமே ஏழை, எளிய, சாமானிய மக்கள் நல் ஆரோக்கியத்துடன் கௌரவமாக வாழ வேண்டும் என்ற
ஒரே நோக்கத்திற்காகவே!

உலகின் மறு பக்கத்தில் விளையும் பயிரை மக்கள் நலனுக்காக புரட்சியாளர் பிடல் தனக்கேயுரிய முறையில் அதை செய்து காட்டியிருக்கிறார்!

Leave a Reply