வீட்டு தோட்டத்துல பழச்செடி

வீட்டுத்தோட்டத்தில் எத்தனை அழகான பூச்செடிகளை வைத்தாலும், சில நேரத்தில் அவற்றை மட்டும் பராமரித்து வந்தால், போர் அடித்துவிடும். ஆகவே பூக்களை மட்டும் தோட்டத்தில் வைக்காமல், சற்று வித்தியாசமாக உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஒரு சில பழச் செடிகளை வைத்து வளர்த்து வந்தால், அவை பூத்து, காய்த்து, கனிகளை தரும் போது, மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும், தோட்டம் மிகவும் அழகாகவும் இருக்கும். அதற்கு முதலில் எந்த வகையான பழங்களை தோட்டத்தில் வைத்தால் நல்லது என்பதை தெரிந்துக் கொண்டு, அதன் பின்னர் வைக்கலாமே!!!

மாதுளை:

இந்த செடியை வீட்டில் இரண்டு வகைகளில் வளர்க்கலாம். உயரம் குறைவாக வளரும் மாதுளை செடியை, வேண்டுமென்றால் தொட்டி அல்லது சாதாரணமாக தரையில் புதைத்து வளர்க்கலாம். இதற்கு குறைவான அளவு சூரிய வெப்பம் மற்றும் காற்றோட்டமான பகுதியில் நன்கு வளரும். இந்த மாதுளையை சாப்பிட்டால், இதய நோய், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கலாம். ஏனெனில் இநத் பழத்தில் அவ்வளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் உள்ளது.

திராட்சை:

திராட்சை ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. ஆகவே இதனை வீட்டின் சுற்றில் படரும் படியான இடத்தில் வைக்க வேண்டும். இந்த கொடியை வீட்டில் வைத்தால், வீட்டிற்கு ஒரு அழகான தோற்றத்தைத் தரும். இதற்கு போதுமான சூரிய வெப்பம் மற்றும் காற்று இருந்தால் போதும். இந்த திராட்சை டயட் இருப்போருக்கு மிகவும் சிறந்தது. மேலும் இந்த திராட்சையில் அதிகமான பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது.

ஸ்ட்ராபெர்ரி:

ஸ்ட்ராபெர்ரி மரத்தை வீட்டில் வளர்த்தால் அழகாக இருக்கும். அதிலும் இது பழத்தை கொடுக்கும் போது, அதில் தொங்குவதைப் பார்த்தால், கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் இந்த மரத்தை வீட்டில் வைத்தால், எந்த நேரத்திலும் பழத்தை பல ரெசிபிகளுக்குப் பயன்படுத்தலாம். அதிலும் சாலட் செய்யும் போது இதை சேர்த்தால் மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. வேண்டுமென்றால் இதை முகத்திற்கு செய்யும் ஃபேஸ் மாஸ்கிற்கு பயன்படுத்தலாம்.

சிட்ரஸ் பழங்கள்:

தோட்டத்தில் வேண்டுமென்றால் சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றை வளர்க்கலாம். இத்தகைய பழச் செடிகளை வைத்தால், அதில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி மட்டும் இல்லாமல், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.

கவனத்திற்கு… செடிகளை வைக்கும் போது, மரமாக வரும் செடியை சுற்றி சற்று அதிகமான இடத்தை விட வேண்டும். மேலும் எந்த செடிக்கும் சரியான அளவு சூரிய வெப்பம், காற்று மற்றும் தண்ணீர் போன்றவை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவை இருந்தாலே, செடிகள் நன்கு செழிப்பாக வளர்ந்து, சுவையான பழங்களைத் தரும்.

tamil.boldsky.com

Leave a Reply